Published:Updated:

வாழ்க்கையை வளமாக்கும் புத்தாண்டு நிதித் தீர்மானங்கள்!

புத்தாண்டு தீர்மானங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு தீர்மானங்கள்

புத்தாண்டு தீர்மானங்கள்

புத்தாண்டு வந்துவிட்டாலே போதும், நம்மவர்கள் புதிய தீர்மானங்களை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், நான்கு நாள்களிலும் அந்தத் தீர்மானங்களை எல்லாம் மறந்துவிட்டு, பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுவார்கள். நாம் செய்யும் புதிய தீர்மானங்கள் நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவுக்கு வலுவில்லாமல் இருப்பதே இதற்குக் காரணம். இந்த 2022-ம் ஆண்டில் உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக்கொண்டு, உங்களை முன்னேற்றிச் செல்வதற்கான ஐந்து புத்தாண்டுத் தீர்மானங்கள் இதோ...

கடனை அடைப்பதில் தீவிரமாக இருங்கள்...

இந்திய மக்களில் பெரும்பாலானவர்களை கொரோனா நோய் கடனாளி களாக மாற்றியிருக்கிறது. வீட்டுக்கடன் தவிர, உங்களிடம் வேறு நிறைய கடன்கள் இருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தக் கடன்களை முழுவது மாக ஒழித்துக் கட்டுவது என்கிற தீர்மானத்தை முன்னெடுங்கள்.

ஒரே ஆண்டில் முழுக் கடனைத் திரும்பக் கட்டுவது சாத்தியம் இல்லை என்கிற எண்ணமே வேண்டாம். முழுமையாகக் கட்டி முடிக்கத் தேவையான திட்டமிடல் உங்களிடம் இருந்தால் போதும், உங்கள் இலக்கை நிச்சயம் அடைய முடியும். ஒருவேளை, இந்த 80% அளவுக்கே கடனை அடைக்க முடிந்தாலும், மீதமுள்ள 20% கடனை அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கட்டி முடித்துவிட முடியும். கடனை அடைக்க நினைக்கும் அதே சமயம், இந்த ஆண்டில் எந்தவொரு புதிய கடனையும் வாங்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருங்கள்.

அவசர கால நிதியை உருவாக்குங்கள்...

எதிர்பாராத நெருக்கடியில் கைகொடுக்கக் கூடிய அவசரகால நிதி கையில் இருக்க வேண்டும் என்பதை கொரோனா ஊரடங்கு சூழல் நன்றாகவே புரிய வைத்துள்ளது. பொதுவாக, ஆறு மாத கால அடிப்படைச் செலவுகளுக்கான தொகை, அவசரகால நிதியாக இருக்க வேண்டும்.

கடனையும் முழுவதுமாக அடைக்கச் சொல்கிறீர்கள்; அவசர கால நிதியையும் சேர்க்கச் சொல்கிறீர்களே, இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்க முடியுமா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். நிறைய கடன் இருப்பவர்கள், 80 சதவிகிதத்தைக் கடன் அடைக்கவும், மீதமுள்ள 20 சதவிகிதத்தை அவசர கால நிதியாகவும் சேர்க்கலாம். கடனே இல்லாதவர்கள் அவசர கால நிதியைச் சேர்க்கும் தீர்மானத்தை எடுக்கலாம்.

வாழ்க்கையை வளமாக்கும் புத்தாண்டு நிதித் தீர்மானங்கள்!

சொத்து விஷயங்களைக் கவனியுங்கள்...

இன்றைய நிலையில், பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் சொத்து பிரச்னைகள் அதிகம். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இடத்தை நீங்கள் வாங்கிப் போட்டிருப்பீர்கள். அந்த இடத்தை உங்களால் அடிக்கடி சென்று பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த இடத்தை வேறு யாரேனும் ஆக்கிரமிப்பு செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அல்லது அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாறிப்போயிருக்கலாம். இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் வாங்கிய இடத்தை நேரில் சென்று பார்ப்பது என்கிற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே போல, இடம் வாங்கி பல வருடங்களான பிறகும், பட்டா மாறுதல் உட்பட பல வேலைகளைச் செய்யாமலே இருந்திருப்பீர்கள். இது மாதிரியான தாமதங்களால் நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய சொத்தை இழக்க வேண்டிய நிலையும் வரலாம். எனவே, நீங்கள் வாங்கிய சொத்து தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உங்கள் பெயரிலேயே இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்!

ஆவணங்களைப் பத்திரப்படுத்துங்கள்...

நம்மில் பலர் வங்கிகளில் எஃப்.டி, ஆர்.டி மூலம் பணத்தைச் சேர்க்கிறோம். நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம். அதற்கான ஆவணங் களை முறையாகப் பராமரிக்கிறோமா எனில், இல்லை. இந்தப் புத்தாண்டு ஆரம்பிக்கும்போதே, சேமிப்பு, முதலீடு தொடர்பாக வீட்டில் வைத்திருக்கும் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, அந்த ஆவணங்கள் குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் கலந்தாலோசியுங்கள். அப்போதுதான் நீங்கள் வாங்கிய சொத்து, முதலீடு, சேமிப்புகள் மற்றும் இன்ஷூரன்ஸ் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியும். குடும்பத் தலைவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் வாரிசுகளால் அனைத்து விஷயங்களையும் முறையாக கையாள முடியும்.

தவிர, சேமிப்பு, முதலீடு தொடர்பான உங்களிடம் இருக்கும் அனைத்து விவரங்களையும் ஒரு டைரியில் குறிப்பெடுத்து, அதை உங்களுடைய மனைவி அல்லது வாரிசுகளிடம் கொடுத்து வையுங்கள். இது கொரோனா பேரிடர் காலம் என்பதால், எதிர்பார்க்காத நேரத்தில் எது வேண்டுமானால் நடக்கலாம். அப்போது நிதி சார்ந்த விஷயங்களில் குடும்ப உறுப்பினர்கள் தத்தளிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை நிச்சயம் கைகொடுக்கும்.

ஒரு புதிய தொழில் திறனைக் கற்றுக்கொள்ளுங்கள்...

புதிய தொழில் திறனை வளர்த்துக்கொள்வது எப்போதும் நல்லது. இந்தப் புதிய ஆண்டில் கற்றுக் கொள்ளவும், அதில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு புதிய தொழில் திறனைத் தேர்ந்தெடுங்கள். பதவி உயர்வு பெறுவதற்கும், வருமானத்தை அதிகரிக்கவும், செய்துகொண் டிருக்கும் வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்கும் நீங்கள் தேர்வு செய்யும் தொழில் திறன் ஏற்றதாக இருக்க வேண்டும்.

இது வேலை சார்ந்த லைஃப் ஸ்டைலை மாற்றுவதுடன் மட்டுமல்லாமல், எக்ஸ்ட்ரா வருமானத்துக்கும் வழிவகை செய்யும். நீங்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் போது, அது உங்களை ஒரு சிறந்த தொழில்முனைவோர் ஆக்குவதற்கு வாய்ப்புகளையும் உருவாக்கும். குறைந்தது ஒரே ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதைப் பின்பற்றுவது என்பதை இந்த ஆண்டில் நீங்கள் மேற் கொள்ளப்போகும் புத்தாண்டுத் தீர்மானமாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஆண்டுதோறும் நீங்கள் இப்படிச் செய்தால், பல திறமைகள் உங்களிடம் குவிந்துவிடும்.

இந்த ஐந்து தீர்மானங்களை நீங்கள் பின்பற்றத் தயாரா?