Published:Updated:

`கைதட்டி வரவேற்கிறார்கள்.. ஆனால்..?!' -அமித் ஷா மேடையில் பேசியது குறித்து ராகுல் பஜாஜ் மகன்

ராகுல் பஜாஜ்
ராகுல் பஜாஜ்

`என்னைப் போன்ற தொழிலதிபர்கள் யாரும் இதை வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆனால், நான் பேசுகிறேன். உங்களை வெளிப்படையாக ஆதரித்தால் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை.'

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா, சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்டோர் எகனாமிக் டைம்ஸின் விருதுவிழாவில் சனிக்கிழமை பங்கேற்றனர்.

இந்த விழாவின் ஹைலைட்டாக மாறிப்போனது என்னவோ, பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜியின் பேச்சுதான். மூன்று மத்திய அமைச்சர்கள் உட்கார்ந்திருந்த மேடையில், ``காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசில் நாங்கள் பயமின்றி அரசை விமர்சித்தோம். ஆனால், எங்கள் கார்ப்பரேட் துறையில் தற்போது உங்களை விமர்சிக்கவே அச்சப்படுகிறார்கள். உங்களை விமர்சித்தால் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்ற பயம் எல்லோரிடத்திலும் உள்ளது.

என்னைப் போன்ற தொழிலதிபர்கள் யாரும் இதை வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். ஆனால், நான் பேசுகிறேன். நாங்கள் உங்களை வெளிப்படையாக ஆதரித்தால் நீங்கள் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை.

ராகுல் பஜாஜ்
ராகுல் பஜாஜ்

தொழிலதிபர்கள் மட்டுமல்ல எல்லோரிடமும், ஏன் மக்களும் பயத்தோடு வாழத்தான் செய்கிறார்கள். கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உண்டாக்குகிறது. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. சில விஷயங்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், கும்பல் கொலைகள் தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை.

பிரக்யா தாகூர் போன்றவர்கள் லோக்சபாவில் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. காந்தியை சுட்டுக்கொன்றது யார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரை தேசப்பக்தர் எனச் சொல்பவரை நீங்கள் எதுவும் செய்யவில்லை. அவருக்கு வாய்ப்பளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இந்த அரசு நன்றாகச் செயல்படுகிறது. ஆனாலும், அரசை விமர்சிக்க யாருக்கும் தைரியம் இல்லை. சில தொழிலதிபர்கள் என்னிடம் புதிய தொழில் தொடங்கவே பயமாக இருக்கிறது எனக் கூறுகிறார்கள். அரசின் நடவடிக்கைகளுக்குப் பயந்து அப்படிப் பேசுகின்றனர். இதை மாற்றி நல்ல சூழலை உருவாக்க வேண்டும்" எனப் பேசினார்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர்த்தது ஏன்? #AutoExpo2020

அமித் ஷா முன்னிலையில் ராகுல் பஜாஜ் இப்படிப் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு விழா மேடையில் பதில் அளித்த அமித் ஷா, ``நாட்டில் பயப்படக்கூடிய சூழல் எதுவும் நிலவவில்லை. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். மற்ற அரசுகளைவிட இந்த அரசு அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பலர் எங்களுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். நாங்கள் அவர்களை எல்லாம் எதுவும் செய்யவில்லையே. எனினும், ராகுல் பஜாஜ் பேசியதுபோல் நாட்டில் ஒரு வகையான தயக்கம் நிலவிவந்தால், அதை போக்குவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பிரக்யாவின் கருத்து வெளிவந்த உடனே பா.ஜ.க கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதுபோன்ற பேச்சுக்களை அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க அதை வன்மையாகக் கண்டிக்கிறது" என நீண்ட விளக்கம் அளித்தார்.

அமித் ஷா
அமித் ஷா

அமித் ஷா விளக்கம் அளித்த பின்பும் ராகுல் பஜாஜ் பேச்சு அடங்கிய வீடியோ வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவந்தது. தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்க, நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார்.

``ராகுல் பஜாஜ் கேள்விகளுக்கு அமித் ஷா அங்கேயே பதிலளித்துவிட்டார். கேள்விகள் / விமர்சனங்கள் கேட்கப்படுகின்றன மற்றும் பதிலளிக்கப்படுகின்றன / உரையாற்றப்படுகின்றன. ஒரு கேள்விக்கான பதிலை கேட்டுப்பெறுவதைவிட தேசநலனுக்கு எதிரான கருத்துகளை பரப்புவது சரியாக இருக்காது" எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ராகுல் பஜாஜின் மகன் ராஜீவ் தன் தந்தையின் பேச்சு குறித்து கூறுகையில், ``என் தந்தை பேசியதை அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆனால், அவருக்கு யாரும் துணை நிற்கவில்லை. தொழில்துறையினர்கூட துணை நிற்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

"இதற்கெல்லாம் 90ஸ் கிட்ஸ் தான் காரணமா?" - நிர்மலா சீதாராமனுக்கு ஒரு `மில்லெனியலி’ன் கடிதம்!
அடுத்த கட்டுரைக்கு