நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை... ‘‘எந்தப் பதிலைச் சொல்லியும் திருப்திபடுத்த முடியாது!”

நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சரின் ரியாக்‌ஷன் - Meeting

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, ‘மத்திய பட்ஜெட் 2021’-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட் பற்றி மக்களும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் என்ன நினைக் கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் நிதி அமைச்சர். அந்த வகையில் கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தார்.

ஸ்டார் ஹோட்டலில் பெரும் தொழிலதிபர்கள்...

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில், தமிழக தொழிலதிபர்களுடன் நிதியமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் வெகு ஜோராகச் செய்யப்பட்டிருந்தன. முதல் நாள் நிகழ்ச்சியில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான என்.சீனிவாசன், டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி உட்பட 40-க்கும் மேற்பட்ட பெரும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பலர், “தமிழக தொழில் வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். மேலும், பட்ஜெட் அறிவிப்புகளைச் செயல்படுத்துவதில் தாமதம் கூடாது என்றும், அவ்வாறு தாமதமானால், தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்” என்றனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பதில் சொல்லி திருப்திப்படுத்த முடியாது!

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பாகக் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ``இது ஒரு தர்மசங் கடமான கேள்வி. பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்ற பதிலைத் தவிர்த்து, வேறு எந்தப் பதிலும் யாரையும் திருப்திப்படுத்தாது. எப்படிப்பட்ட உண்மையான விளக்கங்களை நான் கொடுத்தாலும், `கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறேன், தட்டிக்கழிக்கிறேன்’ என்றுதான் கூறுவார்கள். யாராலும் எந்தப் பதிலும் விளக்கமும் கொடுத்து யாரையும் திருப்திப்படுத்த முடியாது. நான் எந்தப் பதில் சொன்னாலும், `அது எல்லாம் இருக்கட்டும்; இப்போது பெட்ரோல் விலை குறைப்பீர்களா, இல்லையா’ என்பது மட்டுமே எதிர்க்கேள்வியாக வரும்” என்று அவர் கூறியதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

மேலும், ``இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாகச் சொல்கிறேன். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கின்றன. அது அரசின் கையில் இல்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏறிவருகிறது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க வேண்டும் என்றால், மத்திய அரசு வரியைக் குறைப்பது மட்டும் தீர்வாகாது. மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றாக அமர்ந்து இதுகுறித்துப் பேச வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால், நாடு முழுவதும் ஒரே விலையாக இருக்கும். ஜி.எஸ்.டி கவுன்சில் அது குறித்தான சாத்தியங்களை ஆராயும். ஆனால், இறுதியில் மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயம் தொடர்பாக, பெட்ரோலிய அமைச்சகம்தான் தெளிவாகப் பதில் சொல்ல முடியும்” என்றார்.

இந்த பட்ஜெட் பற்றி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனை வோர்களின் கருத்துகளை அறியும்படி ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருக்கலாம்!