தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline - NPS) மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் திரட்டப்படும் என அறிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த அறிவிப்பு வழக்கம் போல பல விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. மத்திய அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகக் கண்ணும் கருத்துமாகக் கட்டிக்காத்த சொத்துகள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன எனப் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விமர்சனம் உண்மைதானா, இந்தத் திட்டத்தின்மூலம் மத்திய அரசாங்கம் என்ன செய்ய நினைக்கிறது என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன..?
மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில், அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் நோக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு மத்திய அரசாங்கம் வைத்திருக்கும் பெயர்தான், தேசிய பணமாக்கல் திட்டம்.
இந்தத் திட்டம் மூலம் அடுத்த நான்கு வருடங்களில், அதாவது, 2022-லிருந்து 2025-ம் ஆண்டு வரையில், மத்திய அரசின் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் உள்கட்டமைப் பின் சொத்துகள் (Infrastructure Core Assets) மூலம் அதாவது, தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான தளங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சுரங்கம், எரிவாயு குழாய் ஆகிய துறைகளில் ஏற்கெனவே உள்ள சொத்துகள் மற்றும் திட்டங்களின் (Brownfield Assets) மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசின் சொத்துகள் மிகவும் முக்கியம். அரசின் சொத்துகள் மூலம் மக்களுக்கு அடிப்படையான சேவைகளை நியாயமான கட்டணத்தில் அரசால் வழங்க முடிகிறது.
ஆனால், தற்போதைய நிலையில், அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது எனவும் மத்திய அரசாங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தைப் பற்றி பலரும் நினைக்கிற மாதிரி, அரசு நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் துறை விற்கும் திட்டமும் (Disinvestment) மற்றும் முக்கியமில்லாத சொத்துகளை (Non Core Assets) விற்கும் திட்டமும் இந்தத் தேசிய பணமாக்கல் திட்டத்தில் சேராது.


திட்டமிடப்படும் வருமானம்...
இந்தத் திட்டத்தின்மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில், 2021-22-லிருந்து 2024-2025-ம் ஆண்டு வரை மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளில் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இருக்கும் அல்லது குறைவாகப் பயன்படுத்தும் சொத்துகளைப் பணமாக்கி அதன்மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வழியை உருவாக்குவது என நிதி ஆயோக் விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாடு முழுவதும் மேம்பாலங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள், சாலைகள் என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.


நாட்டின் சொத்துகளை அரசு விற்கிறதா?
மத்திய அரசு நாட்டின் சொத்துகளைத் தனியாருக்கு விற்க முயல்வதாக இப்போதே இந்தத் திட்டத்துக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பி யுள்ளன. ஆனால், அப்படி எதுவும் இந்தத் திட்டத்தில் செய்யப்படப் போவதில்லை. நாட்டின் சொத்துகள் அனைத்தும் அரசின் வசமே இருக்கும். தனியார் துறையினர் அந்த சொத்துகளைப் பயன் படுத்தினாலும், பயன்படுத்தும் காலம் முடிந்ததும் அரசிடம் திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற விதிமுறையுடன்தான் தரப்படுகிறது. இதன்மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்டுவது மட்டுமே இந்தத் திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசாங்கம் தெளிவு படுத்தியுள்ளது.

ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டை மத்திய அரசு ஏற்கெனவே அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. அவ்வாறு தனியார் நிறுவனங் கள் பங்கேற்கும் ரயில்வே வழித்தடங்களை அவர்களுக்கு வாடகைக்கு விட்டு, அதிகப் படியான வருமானத்தை ஈட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, விமானத் தளங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அதிகப் படியான வருமானத்தை ஈட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிகம் பயன்படுத்த முடியாத சொத்துகளைத் தனியாருக்குக் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்தத் தருவதில் தவறில்லையே!