பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, தற்போது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு நாமினி விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. என்றாலும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளரிடம் இருந்து நாமினி விவரம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற ஒப்புதலை கட்டாயம் கேட்டு பெற வேண்டும் என்று, அது கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான காலக்கெடுவை, மார்ச் 31 2023 ஆக செபி நிர்ணயம் செய்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதன்படி, முதலீட்டாளர்கள் நாமினி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த விவரங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் வழங்க வேண்டும். அவ்வாறு நாமினி விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று கருதினால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தான் இந்த விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை என்று சுய ஒப்புதலை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மார்ச் 31 2023 தேதிக்குள் வாடிக்கையாளர்கள் விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும். அவ்வாறு முடக்கப்பட்டால் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள யூனிட்டுகளை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மீண்டும் அந்த விவரங்களை வழங்கினால் மட்டுமே முதலீட்டாளர்கள் மேற்கொண்டு அந்தக் கணக்கை தொடர முடியும்.
முதலீட்டாளர்கள் இந்த விவரத்தை ஆன்லைன் மூலமாக ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிப்பதன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையையும் பயன்படுத்தலாம். நேரடியாகவும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் அந்த ஒப்புதல் கடிதத்தை வழங்கலாம். வங்கி கணக்கு, போஸ்ட் ஆபீஸ் மூலம் செய்யப்படும் முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், பிராவிடண்ட் ஃபண்டு முதலீடுகள் போன்ற அனைத்து முதலீட்டுக்கும் நாமினி விவரங்களை பதிவு செய்வது பொதுவாக பயன் தரும் விஷயமாகும்.
நாமினி விவரங்களை பதிவு செய்யாமல் முதலீட்டாளர் இறக்க நேரிட்டால், அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட தொகையை பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பணவிரயம், கால தாமதம் ஆகிய பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இதனால் ஏற்படும்.

நாம் முதலீடு செய்யும் தொகை, நம் காலத்திற்கு பிறகும் நமக்கு விருப்பமானவர்களுக்கு செல்வதை ஊர்ஜிதப்படுத்த உதவுவது, நாமினி பதிவேற்றம் ஆகும். அதனால், நாம் இனி விவரம் கட்டாயம் இல்லை என்று இருந்தாலும், நாமினி விவரங்களை பதிவு செய்வது, பொதுவாக நன்மை பயக்கும்.
உரிமை கோரப்படாத பல லட்சம் கோடி வங்கி கணக்கிலும், சேமநல நிதி கணக்குகளிலும் முடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நாமினி விவரங்களை பதிவு செய்யாமல் இருப்பது உள்ளது. அதனால் முதலீட்டாளர்கள் நன்கு ஆராய்ந்து, செபி அறிவுறுத்திய விதிமுறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.