Election bannerElection banner
Published:Updated:

தேசிய பங்குச்சந்தையில் தொழில்நுட்பக் கோளாறு... 5 மணி வரை தொடரும் வர்த்தகம்... என்ன நடக்கிறது?

பங்குச் சந்தை வர்த்தகம்
பங்குச் சந்தை வர்த்தகம்

தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ.யில் இன்று பங்கு வர்த்தகம் பல மணிநேரங்களுக்கு நிறுத்தப்பட்டது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ.யில் இன்று பங்கு வர்த்தகம் பல மணி நேரங்களுக்கு நிறுத்தப்பட்டது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது திகைத்துப் போனார்கள். ஆனால், வர்த்தகம் முடிவடையும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு பங்கு வர்த்தகம் மீண்டும் நடக்கத் தொடங்கியது. இன்று 5 மணி வரை பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ ஆகிய இரு எக்ஸ்சேஞ்சுகளிலும் பங்கு வர்த்தகம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதே பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்று விளக்கம் தந்திருக்கிறது என்.எஸ்.இ.

என்.எஸ்.இ
என்.எஸ்.இ

பங்கு வர்த்தகம் என்பது தற்போது முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடக்கிறது. இப்படி நடக்கும்போது ஏதோ ஒரு சின்ன தொழில்நுட்பப் பிரச்னைகூட பங்கு வர்த்தகத்தை நிறுத்தும் அளவுக்கு அபாயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இன்று காலை 10.50 தொடங்கி என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் பங்குகளை வாங்குவதற்கான ஆர்டர்களையும் விற்பதற்கான ஆர்டர்களையும் போடுவதில் சிக்கல்கள் வரத் தொடங்கின.

வர்த்தகத்தை நிறுத்தாமலே இந்தச் சிக்கலைச் சரிசெய்துவிடலாம் என என்.எஸ்.இ முயற்சி செய்துபார்த்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு மிகவும் பெரிதாக இருந்ததால், பகல் 11.40 மணிக்கு வர்த்தகத்தை நிறுத்தியது என்.எஸ்.இ. இதனால் வழக்கமாக 3.30 மணிக்கு முடியும் வர்த்தகம், இன்று மட்டும் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் பங்குகளை வாங்கவும் விற்கவும் சிக்கல் ஏற்பட்டதால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபின் போடப்பட்ட அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தொழில்நுட்ப சிக்கல் தொடர்பாக பங்குச் சந்தை சார்ந்த சிலருடன் பேசினோம். ‘‘இன்றைய டெக் யுகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது சகஜமான விஷயம்தான். ஆனால், எவ்வளவு பெரிய கோளாறாக இருந்தாலும் அதை உடனே சரிசெய்கிற திறமை ஒரு நிறுவனத்துக்கு இருக்க வேண்டாமா? இதோ, அதோ என்று பல மணி நேரம் வர்த்தகம் மீண்டும் தொடங்க முடியாத அளவுக்குச் சென்றது ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருந்தது. இப்படி அடிக்கடி நடந்தால் முதலீட்டாளர்கள் வெறுத்துப் போய்விடுவார்கள்’’ என்றார் பங்குச் சந்தை புரோக்கர் ஒருவர்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

‘‘இந்தச் சிக்கல் இன்று நடந்ததால் தப்பித்தோம். நாளை எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி நாள். இந்த மாதத்தில் லாங் போனவர்கள், சார்ட் போனவர்களும் வாங்கிய அல்லது விற்ற பங்குகளை நேர் செய்யவேண்டிய நாள். நாளைக்கு இதுமாதிரி நடந்தால், நிலைமையை எப்படிச் சமாளிப்பது?'' என்று கேட்டார் டிரேடர் ஒருவர்.

இந்நிலையில், பி.எஸ்.இ பங்குச் சந்தையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பங்கு விற்பனை நடந்துகொண்டிருந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு