தொடர்ந்து ஏறும் பங்குச்சந்தை... 335 ஆக அதிகரித்த இந்தியன் பில்லியன் டாலர் கம்பெனிகள்!

10 ஆண்டுகளுக்கு முன்பு 141 நிறுவனங்களே ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்டதாக இந்தியாவில் இருந்தது. இது தற்போது 335 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகின்றன. இதன் காரணமாக உலக அளவில் பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 7,290 கோடி ரூபாய்) மேல் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த மைல்கல்லை இந்தியாவைச் சேர்ந்த 335 நிறுவனங்கள் தற்போது எட்டியுள்ளன. இதன் காரணமாக உலக அளவில் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட அதிக நிறுவனங்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு 141 நிறுவனங்களே ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்டதாக இந்தியாவில் இருந்தது. இது தற்போது 335 ஆக அதிகரித்துள்ளது. இது 137.59% வளர்ச்சியாகும். வளர்ச்சி விகிதத்தில் சீனா, அமெரிக்காவுக்கு பிறகு, இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளது.
உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்காவில் 2,780 நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனாவும் மூன்றாமிடத்தில் ஜப்பானும் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் முதல் இடங்களை பிடித்த நாடுகளை பற்றிய அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
1 அமெரிக்கா
2 சீனா
3 ஜப்பான்
4 ஐக்கிய ராஜ்ஜியம் (UK)
5 இந்தியா
6 கனடா
7 தென் கொரியா
8 தைவான்
9 ஆஸ்திரேலியா
10 ஜெர்மனி
11 பிரான்ஸ்
12 ஸ்விட்சர்லாந்து

புதிதாக பங்குச் சந்தையில் கடந்தாண்டு பட்டியலிடப்பட்ட இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், இண்டிகோ பெயிண்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்திய அளவில் 56 நிறுவனங்கள் 10 பில்லியன் டாலருக்கும் மேல் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை தாண்டிய நிறுவனங்களாக முதலிடத்தில் இருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி காணும் நாடுகளில் முக்கியமானதாக இந்தியா இருப்பதை இதன் மூலம் நன்கு அறியமுடிகிறது. கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற வளர்ந்த முன்னணி நாடுகளைவிட இந்தியாவில் அதிக நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு உள்ளதன் மூலம் இதை நாம் நன்கு உணர முடியும்.