Published:Updated:

கடன் தள்ளுபடி - கணக்கியல் ரீதியான தள்ளுபடி- ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஓர் அலசல்! #6MinutesRead

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி ( vikatan )

`` `கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிறுவனங்களின்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும்' என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ஆனால், இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றதே இவர்களின் ஆட்சிக்காலத்தில்தானே?’’

வங்கிக்கடன் மோசடி செய்துள்ள விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி மதிப்பிலான வாராக்கடனைக் கணக்கியல் ரீதியாக ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக வந்துள்ள தகவல், பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, வாராக்கடன் தள்ளுபடிக்கும் (waiver off), கணக்கியல்ரீதியான தள்ளுபடிக்குமான (write off) வித்தியாசத்தைக் குறிப்பிட்டு ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்கள்.

கணக்கியல் ரீதியான தள்ளுபடி
கணக்கியல் ரீதியான தள்ளுபடி
vikatan

வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்வதை எப்படி முடிவெடுப்பார்கள், எதற்காக முடிவெடுப்பார்கள் என்பதை முதலில் பார்க்கலாம். வங்கிகளைப் பொறுத்தவரை, கொடுக்கப்படும் வங்கிக்கடன், வங்கிகளின் சொத்து. அதிலிருந்து கிடைக்கும் வட்டிதான் அவர்களின் வருமானம். தங்களின் கையிருப்பிலிருக்கும் தொகையை எந்த அளவுக்கு வங்கிக்கடனாகக் கொடுக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் தொடர்ச்சியாகத் தங்குதடையின்றி கிடைக்கும்வரை எந்தச் சிக்கலும் இல்லை. வங்கிக்கடனுக்கான வட்டியைத் தொடர்ச்சியாக 3 மாத காலத்துக்குச் செலுத்தாமல் போனால் அதை வாராக்கடனாக அறிவித்துவிடுவார்கள். இந்தக் காலஅளவு, ஓர் ஆண்டுக்காலத்தை எட்டும்போது சொத்து இழப்பாகக் கருதப்படும். இந்த ஓராண்டு காலத்துக்குள் அந்தச் சொத்தை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதுவும் பலனளிக்காதபோது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வழங்கப்பட்ட கடனைப்பொறுத்து நீதிமன்றத்திலோ, தேசிய நிறுவனச்சட்டத் தீர்ப்பாயத்திலோ (NCLT), கடன் மீட்பு தீர்ப்பாயத்திலோ (DRT), திவால் சட்டத்தின் மூலமோ, சர்பாஸி சட்டப்படியோ தீர்வு காண முயற்சியெடுக்கப்படும்.

இத்தகைய முயற்சிகளின் இறுதியில்தான் கடன் தள்ளுபடி குறித்து முடிவெடுக்கப்படுகிறது. சிறிய அளவிலான கடன்களில், முழுமையான கடன் தள்ளுபடி அல்லது குறிப்பிட்ட சதவிகிதம் அளவுக்குத் தள்ளுபடி என்று முடிவெடுக்கப்படுகிறது. வங்கிக்கடன் வாங்கியவரால் முதுமை காரணமாகக் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாதபட்சத்தில் அந்த வங்கியே முடிவெடுத்து, கடனைத் தள்ளுபடி செய்யக்கூடும். அதேபோல,வங்கிக்கடன் பெற்றவர், உடல்நலக்குறைவால் இயங்கமுடியாத சூழலில் இருந்தாலும், அவரால் தொடர்ந்து வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பில்லாததால் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படலாம். வங்கிக்கடன் பெற்றவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாதபடி காணாமல்போய்விட்டாலும் வங்கிக்கடனை வசூலிக்கமுடியாத சூழலில் கடன் தள்ளுபடி செய்யப்படலாம்.

வாராக்கடன் தள்ளுபடியின்போது, வாராக்கடனை வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்துமே கைவிடப்படுவதுபோல கணக்கியல்ரீதியான தள்ளுபடியில் கைவிடப்படுவதில்லை

அடுத்தது, சட்டரீதியாகக் கிடைக்கக்கூடிய தள்ளுபடியாகும். அதில்தான் சட்டரீதியாக நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுப்பார்கள். அதில் எவ்வளவு தொகை வரைக்கும் வசூலிக்கலாம் என்பதை அந்த வழக்கை விசாரிக்கும் நீதி அமைப்பே கூறிவிடும். உதாரணமாக, தேசிய நிறுவனச்சட்டத் தீர்ப்பாயமானது, அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 27,000 கோடி ரூபாய் வாராக்கடன் பிரச்னையில் சிக்கியபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 5,000 கோடிக்கு செட்டில்மென்ட் செய்தது. அதன்பின் மற்ற கடன் அனைத்தும் தள்ளுபடியானது. சிறிய அளவிலான கடன்களில், ஒரு குறிப்பிட்ட வரம்புவரை வங்கிக்கிளை மேலாளர்கள் மட்டத்திலேயே தள்ளுபடி குறித்து முடிவெடுக்க முடியும். வரம்பு அதிகரிக்க அதிகரிக்க, முடிவெடுக்கும் அதிகார மட்டமும் மாறுபடும்.

தள்ளுபடி/ கணக்கியல்ரீதியான தள்ளுபடி

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனக்கடன்களைப் பொறுத்தவரை, தள்ளுபடி, கணக்கியல்ரீதியான தள்ளுபடி என்ற இரண்டு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

1. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன்களைச் சரிவரத் திருப்பிச்செலுத்தாமல் வாராக்கடனாகும்போது. அந்த நிறுவனத்தின்மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சொத்துகளை முடக்குதல், கையகப்படுத்துதல், விற்பனை செய்வதன்மூலம் பணத்தைத் திரட்டுதல் என முயற்சி எடுப்பார்கள். இந்த நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், நிதானமாகவும் நடக்கும். எதாவது தீர்ப்பின்மூலமாகவோ, செட்டில்மென்ட் மூலமாகவோ அல்லது சொத்துகளை விற்றோ கடனை அடைக்கும்பட்சத்தில் அந்த வாராக்கடன் பிரச்னை தீர்வுக்கு வரும். அதன்பின்னர், வங்கிகளின் புரவிசன் ஒதுக்கீட்டை வைத்து தள்ளுபடியான வாராக்கடன் கணக்கை நேர் செய்வார்கள்.

வாராக்கடன்
வாராக்கடன்
vikatan

2. வாராக்கடன் பிரச்னைக்கான நடவடிக்கைகள் தாமதப்படும் சூழலில் கணக்கியல்ரீதியான தள்ளுபடி என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இதன்படி, அந்த வாராக்கடன் கணக்கை சம்பந்தப்பட்ட வங்கிகள் முடித்துக்கொள்வார்கள். அந்த வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட புரவிசனைக்கொண்டு அந்தக் கணக்கு நேர்செய்யப்படும். வாராக்கடன் பெற்றவரின் கணக்கில் பூஜ்ஜியமாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு ரூபாய் மட்டும் கணக்கில் வைக்கப்படும். ஆனால், வாராக்கடன் தள்ளுபடியின்போது, வாராக்கடனை வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்துமே கைவிடப்படுவதுபோல கணக்கியல்ரீதியான தள்ளுபடியில் கைவிடப்படுவதில்லை. சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கை ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் வங்கியைப் பொறுத்தவரை, அந்த வாராக்கடன் கணக்கை, வரவு செலவுக்கணக்கிலிருந்து நீக்கிவிடும். அதன்பின் எத்தனை ஆண்டுகள் வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வட்டியை அதிகரிப்பதோ, புரவிசன் ஒதுக்குவதோ இருக்காது.

இதைத்தான் வங்கித்துறையில் அனுபவமிக்கவர்கள், `கணக்கியல்ரீதியான தள்ளுபடிக்குப்பின் வாராக்கடனை வசூலிப்பது சுலபமான காரியமல்ல' என்கிறார்கள். ஏனெனில் இத்தகைய தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்களில் பெரும்பாலானவை, `வில்ஃபுல் டீஃபால்ட்டர்' எனப்படும், தங்களிடம் பெரிய அளவிலான சொத்துகள் இருந்தும்கூட வேண்டுமென்றே கடனைச் செலுத்தாதவர்கள். இந்த வாராக்கடனைத் தராமல் இருப்பதற்காக சட்டத்தின் ஓட்டைகள் அனைத்தையும் பயன்படுத்தக்கூடியவர்கள். இவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்வது, இன்னொரு நாட்டில் குடியுரிமை வாங்குவது, அந்த நாட்டு நீதிமன்றத்தையே மண்டை காய வைப்பது, தாய் நாட்டுக்குத் திரும்ப மறுப்பது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளுக்கே தண்ணி காட்டுவது என, அனைத்தையும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் ஒன்றும் விவசாயக்கடன் வாங்கியவர்களைப்போல அவமானப்பட்டுத் தலைகுனியக்கூடியவர்கள் அல்ல. பண பலத்தோடு, அதிகார மட்டத்தின் பலத்தையும் கொண்டு செயல்படக்கூடியவர்கள். இப்படியானவர்களின் வங்கிக்கணக்கை கணக்கியல்ரீதியாக தள்ளுபடி செய்தபின் அதுவரை எடுக்கப்பட்டுவந்த சட்டரீதியான நடவடிக்கை மேலும் தொய்வடையவே செய்யும். ஆட்சி மாற்றங்கள் போன்றவை நடக்கும்போது, காலப்போக்கில் கைவிடப்படவும் கூடும் என்றே கூறுகிறார்கள்.

ஒரு நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கும்போது, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களின்மீதும் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்கும்படியாகச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்
தாமஸ் ப்ராங்கோ

ஒரு வங்கி வழங்கிய கடன், வாராக்கடனாக இருக்கும்போதுதான் அந்த வங்கியின் ரேட்டிங்கை அது பாதிக்கும். வாராக்கடனிலிருந்து நீக்கப்படும்போது வங்கி அந்த அழுத்தத்திலிருந்து விடுபடும். அப்படிப்பட்ட சூழலில் அந்த வாராக்கடனை வசூலிப்பதற்கான அழுத்தமும் குறையக்கூடும். எனவே, கணக்கியல்ரீதியான தள்ளுபடி வழங்கப்பட்டபின்பு அதுகுறித்து வங்கிகள் தீவிர கவனம் செலுத்தமாட்டார்கள். எனவே, இந்த வாராக்கடன் வசூலை `வரும்... ஆனா வராது!' எனலாம்.

வாராக்கடன் தொகை அதிகமாக இருப்பதில் பொதுத்துறை வங்கிகளே முன்னிலைவகிக்கின்றன. அதற்கு காரணம், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதில் நிறைய அதிகாரமட்டத்திலான குறுக்கீடுகள் இருக்கின்றன. முத்ரா வங்கிக்கடனிலிருந்து பெருநிறுவனக் கடன்கள்வரை தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளில் எளிதில் வாங்க முடியும். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக்கவும் முடியும். பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான் வாராக்கடனில் முதலாவதாக உள்ளது. தனியார் வங்கிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதலிடத்தில் உள்ளது.

வங்கி வாரியாக வாராக்கடன்
வங்கி வாரியாக வாராக்கடன்
vikatan

கணக்கியல்ரீதியான தள்ளுபடி மூலம் தொழிலதிபர்களுக்கு பலன் உண்டா அல்லது வாராக்கடன் தொகையை முழுமையாக வசூலிக்க வாய்ப்புள்ளதா என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ப்ராங்கோ கூறுகையில், ``கணக்கியல்ரீதியான தள்ளுபடி என்பது, அந்த வாராக்கடனை வசூலிப்பதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது, அந்த நிறுவனத்துக்கென சொத்துகள் இருக்கின்றன என்ற நிலையில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தச் சொத்துகளை விற்று கடனை அடைப்பதற்கு வெகுகாலம் ஆகலாம், சட்டரீதியான நடவடிக்கை இழுத்துக்கொண்டே செல்லலாம். எனவே, அந்த நிறுவனங்களுக்காக வங்கிக்கணக்கைத் தொடர்ந்தபடி, ஒவ்வோர் ஆண்டும் புரவிசன் ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, வங்கிக்கணக்கிலிருந்து நீக்கிவிட்டு, சட்டரீதியான நடவடிக்கையை மட்டும் தொடர்வார்கள்.

அனுபவரீதியாகப் பார்க்கும்போது, கணக்கியல்ரீதியான தள்ளுபடிக்குப்பிறகு கடனை வசூலிப்பது மிகவும் அரிது. வசூல் செய்வதற்கான முயற்சியே குறைந்துவிடும். வாராக்கடன் தொகை நிலுவையாக இருக்கும்வரைதான் அதை வசூலிக்கும் எண்ணம் இருக்கும். இல்லாதபட்சத்தில் வசூலே தடைபட்டுவிடும். தற்போது `கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிறுவனங்களின்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும்' என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ஆனால், இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றதே இவர்களின் ஆட்சிக்காலத்தில்தானே?’’

விஜய் மல்லையா, பா.ஜ.க ஆதரவோடு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். மெகுல் சோக்‌ஷியும், நிரவ் மோடியும் பிரதமருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். மெகுல் சோக்‌ஷி தப்பி ஓடுவதற்கும் போதுமான கால அவகாசம் கொடுத்தபின்னரே அவர்மீதான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கினார்கள். இப்படியான வங்கி மோசடியாளர்கள், நம் நாட்டைவிட்டு வெளியேறுவது எளிதான விஷயம் அல்ல. அவர்கள் ஒன்றும் போலி பாஸ்போர்ட் மூலம் செல்லவில்லை. விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்த நினைத்தால் நிறுத்தலாம். ஆனால், அதைச் செய்யவில்லை.

தாமஸ் ப்ராங்கோ
தாமஸ் ப்ராங்கோ
vikatan

வங்கிகளைப் பொறுத்தவரை, சர்பாஸி சட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டுமென்று பல காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கும்போது, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களின்மீதும் தனிப்பட்டு நடவடிக்கை எடுக்கும்படியாகச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைச் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. தேசிய நிறுவனச்சட்டத் தீர்ப்பாயத்தைக் கொண்டுவரும்போதே, அதன் விதிமுறைகள், கடனைத் தள்ளுபடி செய்வதற்குத்தான் சாதகமாக இருக்கிறதே தவிர, கடன் தொகையை மீட்பதற்கு உதவியாக இல்லை என்று கூறியிருக்கிறோம். இதன் தீர்ப்புகளில் சராசரியாக 55% வரை தள்ளுபடியாகிறது. மொத்தமாகத் தள்ளுபடி செய்ததும் உண்டு.

நிறுவனங்களுக்கு கணக்கியல்ரீதியாக வாராக்கடன் தள்ளுபடி அறிவிக்கும் முன்பாக அந்த நிறுவனங்களின் சொத்துகளின்மூலம் கடன் தொகையைத் திரட்டுவதைத்தானே செய்திருக்க வேண்டும்? கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் யாராவது தற்போது வறுமையில் சிக்கியிருக்கிறார்களா என்றால் இல்லை. வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள். அதேவேளை, ஒரு விவசாயிக்கோ, வேறு ஏதேனும் சிறுதொழில் கடன் பெற்றவர்களுக்கோ இப்படியெல்லாம் தள்ளுபடி கிடைப்பதில்லை. நிலமுள்ள விவசாயிகள், வங்கிக்கடன் செலுத்துவதற்காக நிலத்தையே விற்று கூலி விவசாயியாக மாறுவதைப் பார்க்க முடிகிறது. பலர் அவமானத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் தப்பிச்செல்வதற்கு நம்முடைய சட்டத்திலிருக்கும் ஓட்டைகள் பயன்படுகின்றன" என்றார்.

நிர்மலா சீதாராமன்/ ராகுல் காந்தி
நிர்மலா சீதாராமன்/ ராகுல் காந்தி
vikatan

விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது அரசாங்கம் வெளிப்படையாகவும், பெருமையாகவும் அறிவிக்கிறது. அதேவேளை, தொழிலதிபர்களின் வாராக்கடன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கும்போது வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொள்கிறது. தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தியதால்தான் இவ்வளவு பெரிய தள்ளுபடி நடவடிக்கையே தெரியவருகிறது. ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, இதில் எந்தத் தவறும் இல்லையென்றும், காங்கிரஸும் ராகுலும்தான் அரசியலாக்குகிறார்கள் என்று கூறியவர், 2009-2014 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ.1.4 லட்சம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வாராக்கடனை கணக்கியல்ரீதியாகத் தள்ளுபடி செய்வது, வங்கிகளின் செயல்பாட்டைப் பாதிக்குமா, இது பெரிய அளவில் வாராக்கடன் வைத்துள்ளவர்களை ஊக்கப்படுத்துவதுபோல ஆகாதா என்று பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடம் கேட்டோம். ``ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலத்துக்குமேல் வங்கி வாராக்கடனை அப்படியே வைத்திருக்க முடியாது. அப்படியான சூழலில் அந்த வாராக்கடனை அந்த வங்கியின் லாபத்தில் கழித்தாக வேண்டும். அதைத்தான் கணக்கியல்ரீதியான தள்ளுபடி என்கிறார்கள். வங்கிக்கு லாபமே இல்லையென்றாலும்கூட அதன் நஷ்டத்தில் இதையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் வங்கி இயங்க வேண்டும். எனவே, இதை வெறுமனே தள்ளுபடி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இது, வங்கிக்கடன் பெற்றவருக்காகச் செய்யப்படுவது கிடையாது. வங்கியின் டெபாசிட்டர்களுக்கு சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.

ஷியாம் சேகர்
ஷியாம் சேகர்
vikatan

ஆனால், இப்படி கணக்கியல்ரீதியாகத் தள்ளுபடி செய்யப்படுவதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு வங்கிக்கு இருக்கிறது. எனவே, இதோடு இந்த நடைமுறை முடிந்துவிடவில்லை. கடனை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தபடியே இருக்கும். உதாரணத்துக்கு, எஸ்ஸார் குழுமத்துக்குக் கொடுக்கப்பட்ட கடனில் பெரும்பகுதி இவ்விதம் தள்ளுபடியானது. ஆனால், அந்தத் தொகை முழுவதையும் எஸ்.பி.ஐ வங்கி வசூலித்தவுடன் அந்தத் தொகை, லாபத்தோடு சேர்க்கப்பட்டது. ஒருகாலத்தில் நஷ்டத்தோடு தள்ளுபடி செய்யப்பட்ட பணம், இன்னொரு காலத்தில் லாபத்தோடு சேர்க்கப்பட்டது. இதுதான் நடைமுறை. எனவே தற்போதும் அடமானங்களையெல்லாம் விற்று அந்த வங்கிக்கடனை நேர் செய்யும் நடவடிக்கை தொடரும். குறிப்பாக, விஜய் மல்லையாவின் வாராக்கடனைப் பொறுத்தவரை, அவரது கடன் தொகையைவிட சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்தக் கணக்கியல்ரீதியான தள்ளுபடியில் பதற்றப்படும்படி எதுவுமே கிடையாது" என்றார்.

விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி, நீரவ் மோடி ஆகியோர் எந்தவிதத்திலும் இந்தியாவுக்குப் பெருமைதேடித் தந்தவர்கள் இல்லை. தேர்தல் நெருங்கும்போது மட்டும் இவர்களைப் பிடிப்பதற்கான, இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகக் காட்டப்பட்டது. தேர்தல் முடிந்தபின்பு அத்தனை செயல்பாடுகளும் மந்தமாகிவிட்டது. இவர்களைப்போன்றவர்கள், வாராக்கடன் மோசடியில் ஈடுபட்ட முன் அனுபவம் வங்கிகளுக்கு இருந்தாலும்கூட, தற்போதுவரை வாராக்கடன் அளவு குறைந்தபாடில்லை. 2015-ம் ஆண்டு 93,482.804 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வாராக்கடன், தொடர்ந்து அதிகரித்து, 2018-ம் ஆண்டில் 1,33,519.787 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இந்திய வங்கிகளின் வாராக்கடன்
இந்திய வங்கிகளின் வாராக்கடன்
vikatan

இந்த ஏற்றப்போக்கைப் பார்க்கும்போது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏய்ப்பவர்கள் அதிகரித்திருப்பார்களா என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுக்குப்பின் சாமானிய மக்களுக்குத் தரப்படும் வங்கிக்கடன்களின் அளவு குறைக்கப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களின் அளவு உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் உண்மைத்தன்மை இருக்கிறதா, பெருமளவு வாராக்கடன்களாக மாறுவதற்கு என்ன காரணம் என்பதையெல்லாம் சீர்தூக்கிப்பார்ப்பது அவசியம். அதேபோல வங்கித்துறை நிபுணர்கள் கேட்பதுபோல சர்பாஸி சட்டத்தையும் கடுமையாக்கி, வாராக்கடன் வைப்பவர்களைத் தப்பவிடாமல் தண்டனை பெற்றுத்தரும்படி செய்தால்தான், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஓட்டை விழாமல் இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு