பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மீண்டும் பழைய பென்ஷன்... தொடரும் தேர்தல் வாக்குறுதிகளும் தொக்கி நிற்கும் பணக் கணக்குகளும்!

பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஷன்

பென்ஷன்

‘மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என தமிழக முதல்வர் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டார் கள். ஏற்கெனவே சத்தீஸ்கர், ராஜஸ்தான் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கும் நிலையில், பஞ்சாப் அரசும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது. விரைவில் தேர்தல் நடக்க உள்ள குஜராத்திலும் பழைய பென்ஷன் வாக்குறுதி தரப்பட்டுவிட்டது.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

பழைய பென்ஷன் சாத்தியமா?

பழைய பென்ஷன் திட்டம் வந்துவிட வேண்டும் என அரசு ஊழியர்கள் அனைவருமே விரும்பினாலும், அதைக் கொண்டுவரும்போது ஒவ்வொரு மாநில அரசும் பல சவால்களைச் சந்திக்க வேண்டி யிருக்கும்.

‘‘மீண்டும் பழைய பென்ஷனைக் கொண்டு வந்தாலும், அதை நிலைநிறுத்த முடியாது. காரணம், இப்போதெல்லாம் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் வாழ்நாள் காலம் ஓய்வுக்குப் பின் 25 ஆண்டு களாக உள்ளது. ஊழியரைத் தொடர்ந்து அவரின் குடும்ப பென்ஷன் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார் டெல்லியில் உள்ள (National Institute of Public Finance and Policy) ‘தேசிய பொது நிதி மற்றும் கொள்கை’க்கான நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் ரேணுகா ஷேன்.

‘‘என்.பி.எஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலாபலனை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்கள்? சம்பளமும் பென்ஷனும் தருவதற்கு போதிய நிதி இல்லாத காலகட்டத்தில் பழைய பென்ஷனைத் தொடர முடியாதே..!’’ என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் பி.எஃப்.ஆர்.டி.ஏ–வின் இடைக்கால சேர்மன் ஸ்வரப்.

மீண்டும் பழைய பென்ஷன்... தொடரும் தேர்தல் வாக்குறுதிகளும் தொக்கி நிற்கும் பணக் கணக்குகளும்!

பஞ்சாப், குஜராத்...

‘பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டுவருகிற அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் போதுமான நிதி வசதி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது’ என்கிறார் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரதேசங்களுக்கு மைக்ரோ பென்ஷன் திட்டத்தை வடிவமைத்துத் தந்துவரும் ‘பின்பாக்ஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான கெளதம் பரத்வாஜ். இதற்கு பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களின் நிதிநிலையை (பட்ஜெட் அடிப் படையில்) ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் அவர்.

2022-23-ம் நிதியாண்டுக்கான பஞ்சாப் பட்ஜெட்டின்படி, அந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (Own Tax Revenue – OTR) ரூ.45,588 கோடி. இதில் பென்ஷனுக்கான செலவு ரூ.15,146 கோடி. பென்ஷனுக்கான செலவுடன் தவிர்க்க முடியாத செலவுகளான சம்பளம் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டியையும் சேர்த்துக் கணக் கிட்டால் செலவுத் தொகை ரூ.66,440 கோடியாக இருக்கும். இது அந்த மாநிலம் ஈட்டும் சொந்த வரி வருவாயைவிட 46% அதிகம்.

ஆனால், குஜராத்தின் நிதிநிலை வேறு. 2022-23-க்கான நிதிநிலை அறிக்கையின்படி, இந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,15,000 கோடி. பென்ஷனுக்கான செலவு ரூ.17,590 கோடி. சம்பளம் மற்றும் வட்டியைச் சேர்த்து கணக்கிட்டா லும் செலவு ரூ.82,731 கோடிதான். இந்த மாநிலத்தின் பொதுக்கடன் (Public Debt) அந்த மாநிலத்தின் (Gross state Domestic Product) ஜி.எஸ்.டி.பி–யில் 16 சதவிகிதத்துக்கு அருகில் உள்ளது. ஆக, ஒரு மாநிலத்துக் கான பொதுக்கடன் எவ்வளவு இருக் கிறது, அதற்காகக் கட்ட வேண்டிய வட்டி என்பவை எல்லாம் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டுவருவதில் முக்கியமான காரணிகளாக உள்ளன.

கூடுதல் செலவை எப்படி சமாளிப்பது?

போதிய அளவு நிதி இருக் கிறதா என்கிற பிரச்னை ஒரு பக்கம் இருக்க, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும்போது ஏற்படக் கூடிய வருங்கால நிதிப் பொறுப் பைக் கணக்கிட வேண்டியிருக் கிறது. அந்த வகையில், தமிழகத் தில் தற்போது இருக்கும் சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷனை நடை முறைப்படுத்தும்போது அரசு செய்ய வேண்டிய கூடுதல் செலவை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதும் முக்கியமான விஷயம்.

கூடுதலாக எவ்வளவு செல வாகும் என்கிற கணக்கைப் பார்ப்போம். ஒருவர் தன் 25 வது வயதில் ஏப்ரல் 2003–ல் தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரது அடிப்படைச் சம்பளம் ரூ.6,200. இவர் தன் 20 வருடப் பணிக்காலத்தை எதிர்வரும் 2023-ம் ஆண்டு ஏப்ரலில் நிறைவு செய்வார். அப்போது விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சமயத்தில் இவரது ஊதியம் ரூ.78,700 + அகவிலைப் படியாக இருக்கும். இவர் சி.பி.எஸ் திட்டத்தின் மூலம் பெறும் முதிர்வுத் தொகை சுமார் 36 லட்சம் (8% வட்டி என்கிற அடிப்படையில்) என்கிற அளவில் இருக்கும்.

இந்த 36 லட்சத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ். முதிர்வுத் தொகையுடன், விடுப்புக்கான சம்பளத்தையும் இவர் பெற்றுக்கொண்டுவிட்டால், இவருக்கும் அரசுக்குமான பணத் தொடர்பு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ள தொடர்பு இப்படி இருக்காது. இந்த ஊழியர் விருப்ப ஓய்வு பெறும் சமயத்தில் பழைய பென்ஷன் நடைமுறைக்கு வந்துவிட்டால், அவருக்கு ரூ.43,952 மாதாந்தர பென்ஷனாகக் கிடைக் கும். தவிர, பணிக்கொடையாக ரூ.13,18,225 கிடைக்கும்.

ரூ.43,952 என்கிற அளவில் கிடைக்கத் தொடங்கிய பென்ஷன், ஆண்டுதோறும் 6% என வளர்ச்சி அடைந்தால், இவரின் 75-வது வயதில் அதாவது, ஓய்வு பெற்று 30 வருடங்களுக்குப் பிறகு இவருடைய மாதாந்தர பென்ஷன் ரூ.2.52 லட்ச மாக அதிகரித்திருக்கும். தன் 75 வயது வரை இவர் பெறக்கூடிய மொத்த பென்ஷன் ரூ.4.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அது மட்டுமல்ல, 75 வயதில் அந்த ஊழியர் மறைவுக்குப் பின் அவரின் வாழ்க்கைத்துணை (Spouse) குடும்ப பென்ஷனைப் பெறலாம். அந்த வகையில், குடும்ப பென்ஷன் காலம் ஐந்து ஆண்டு களாக இருந்தாலும் இவரின் குடும்ப பென்ஷன் 1.72 லட்சம் ரூபாயில் தொடங்கி, 5-வது வருடத் தில் ரூ.2.17 லட்சமாக இருக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் இவர் பெறக்கூடிய மொத்த குடும்ப பென்ஷன் தொகை ரூ.1.16 கோடி என்ற அளவில் இருக்கக்கூடும்.

இன்னொரு விதத்திலும் இந்தக் கணக்கைப் பார்த்தால், அரசானது எவ்வளவு பணத்தைக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது புரியும். 2003-ல் அரசுப் பணியில் சேர்ந்த மேற்கண்ட விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர் தன் 60 வயது வரை பணியில் இருந்திருந்தால், 2038–ல் அவர் ஓய்வு பெறுவார். அப்போது அவருடைய அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படி சேர்ந்த கடைசி ஊதியம் ரூ.4.74 லட்சம் என்கிற அளவில் இருக்கும். அப்போதும் சி.பி.எஸ் திட்டமே தொடரும்பட்சத்தில் அவர் பெறும் முதிர்வுத்தொகை சுமார் ரூ.2 கோடி என்கிற அளவில் இருக்கும். ஆனால், பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அவருடைய மாதாந்தர பென்ஷன் ரூ.2.37 லட்சமாக இருக்கலாம். பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேஷன், விடுப்பு ஊதியம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக ரூ.1.82 கோடி பெறக்கூடும். ஓய்வு பெற்று 20 வருட முடிவில் இவருடைய மாதாந்தர பென்ஷன் ரூ.7.6 லட்சமாக உயரலாம்.

மீண்டும் பழைய பென்ஷன்... தொடரும் தேர்தல் வாக்குறுதிகளும் தொக்கி நிற்கும் பணக் கணக்குகளும்!

பென்ஷனை உயர்த்திய அகவிலைப்படி....

ஜூன் 1996 வரை குறைவான சம்பளம் அல்லது பென்ஷன் பெறுவோருக்கு அதிக சதவிகிதத்திலும், அதிக சம்பளம் அல்லது அதிக பென்ஷன் பெறுவோருக்கு குறைவான சதவிகிதத்திலும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. ஜூலை 1996 முதல் அனைவருக்கும் ஒரே சத விகிதத்தில் அகவிலைப்படி தரப்படுகிறது. மேலும், சம்பள தாரருக்கு இணையாக சம்பள கமிஷன் உயர்வும் பென்ஷன் பெறுவோர்க்குத் தரப்படுகிறது. செப்டம்பர் 1984-ல் 500 என இருந்த அதிகபட்ச குடும்ப பென்ஷன் இப்போது ரூ.1,12,500 வரை அதிகரிக்க இது முக்கியமான காரணம்.

அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்...

ஆக, பழைய பென்ஷனைக் கொண்டுவரும்போது அரசு ஊழியர்களுக்கு நிறைய பென்ஷன் கிடைக்கும் என்பதால், அரசு ஊழியர்களில் பலரும் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசுத் தரப்பில் அதிகமாகச் செலவு செய்தால்தான், பழைய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறைய பென்ஷன் தர முடியும். அதற்கு மாநில அரசுகள் தங்களது சொந்த வரியைக் கணிசமாக அதிகரிக்க வேண்டி இருக்கும். புதிய வரிகள் பெருமளவில் விதித்தால் மட்டுமே, மாநில அரசின் சொந்த வரி அதிகரிக்கும். அதிக வரி விதிப்பு என்பது எல்லாத் தரப்பு மக்களையும் பாதிக்கலாம்.

எனவே மாநில அரசு, மக்களிடம் ஓட்டு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டும் பழைய பென்ஷன் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறதா அல்லது இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதால் ஏற்படும் கூடுதல் செலவை மாநில அரசாங்கங்கள் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!