Published:Updated:

`ஒருகாலத்தில் கோடீஸ்வரன்... இப்போது அப்படியில்லை!' - லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி

அனில் அம்பானி
அனில் அம்பானி

அனில் அம்பானிக்கு அவரது உறவினர்கள் 100 மில்லியன் டாலரைக் கொடுத்து உதவ மாட்டார்களா என லண்டன் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

`என் முதலீடுகள் எல்லாம் சரிந்துவிட்டன. பணத்தைத் திரட்ட என்னிடம் சொத்துகள்கூட இல்லை' என லண்டன் நீதிமன்றத்தில் கதறியுள்ளார் அனில் அம்பானி. உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்த அனில் அம்பானி 100 மில்லியன் டாலரைத் தன்னால் திரட்ட முடியாது என நீதிமன்றத்தில் கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஷ்டம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டது.

கடன் கொடுத்த வங்கிகள் அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். கடன் சுமை கழுத்தை நெரிக்க தன் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என அறிவித்தார். சரியான திட்டமிடல் இல்லாதது, அவர் அடுத்தடுத்து தொடங்கிய தொழில்களில் ஏற்பட்ட நஷ்டமே அவரது சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த மூன்று சீன வங்கிகள் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மூன்று வங்கிகளுக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ரூ.5,000 கோடிகளுக்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ளது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி டேவிட் வாக்ஸ்மேன் தலைமையில் நடந்தது.

வழக்கு விசாரணையின்போது அனில் அம்பானி தரப்பில், ``2012-ம் ஆண்டு அம்பானியின் முதலீடுகள் சரியத் தொடங்கிவிட்டன. தொலைத்தொடர்புத் துறையில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு கொள்கை மாற்றம் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. அம்பானியின் முதலீடுகள் 2012-ம் ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், இப்போது அவற்றின் மதிப்பு 89 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அவருடைய கடன்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது நிகர மதிப்பு பூஜ்ஜியம்தான். சிம்பிளாகக் கூற வேண்டும் என்றால் ஒருகாலத்தில் பணக்காரராக இருந்தார். ஆனால், இப்போது அப்படி இல்லை. என் முதலீடுகள் எல்லாம் சரிந்துவிட்டன. பணத்தைத் திரட்ட என்னிடம் சொத்துகள்கூட இல்லை” என்றார்.

 அனில் அம்பானி
அனில் அம்பானி

இதை எதிர்தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அவர் இந்தியாவில் இன்னும் பணக்காரராகத்தான் வலம் வருகிறார். சொகுசு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறார். சொகுசு கார்கள், மும்பை கடற்கரைப் பகுதியில் வீடு எனச் செல்வந்தராகத்தான் வலம்வருகிறார் என்றனர்.

இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி டேவிட் வாக்ஸ்மேன், ``அனில் அம்பானி சீன வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ரூ.710 கோடியை இருப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். வழக்கு முடியும் வரை இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும். அனில் அம்பானியிடம் நிறைய சொத்துகள் இருக்கின்றன. அவரது உறவினர்கள், 100 மில்லியன் டாலரைக் கொடுத்து உதவ முடியும். அதை அனில் அம்பானி நீதிமன்றத்திடம் செலுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

பின் செல்ல