Published:Updated:

தொலைநோக்குப் பார்வை முக்கியம்... ஆனால்..?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தொலைநோக்குப் பார்வை முக்கியம்... ஆனால்..?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

எதிர்வரும் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வழக்கம்போல, ஆதரவு, எதிர்ப்பு என இருவிதமான விமர்சனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

‘நீண்டகால நோக்கில் வளர்ச்சியைக் கொண்டு வரும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்று பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், ‘இது ஏழை, நடுத்தர, சம்பளதாரர்கள் மற்றும் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு பயனில்லாத பட்ஜெட்’ என்கிற கருத்தும் சில பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோரால் முன்வைக்கப் பட்டிருக்கிறது.

அரசின் மூலதனச் செலவு கடந்த ஆண்டைவிட 35.4% அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடியாக இருப்பது, ஏழைகளுக்கு வீடுகட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு, மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டி இல்லாக் கடன், விவசாய விளைபொருள்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு, பல்வேறு துறைகளில் டிஜிட்டல்மயமாக்கும் அறிவிப்புகள் என ‘2047-க்குள் நவீன இந்தியாவை உருவாக்க’த் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று பாராட்டுகிறார்கள்.

பாராட்டுகள் இருக்கட்டும்... மிகப்பெரிய கனவுத் திட்டம் போல அறிவிக்கப் பட்டிருக்கும் இந்த பட்ஜெட்டை நிஜமாக்கத் தேவையான நிதி எங்கிருந்து வரும்? அரசின் வருவாய் எதிர்பார்க்கிற அளவுக்கு வராமல் போகவே அதிக வாய்ப்புள்ள நிலையில், இந்தக் கேள்வி மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது! ஏற்கெனவே வாங்கிய கடனுக்கே பல ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலையில், கூடுதலாக ரூ.11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது.

இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் படித்துவரும் இன்றைய காலகட்டத்தில், ‘80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்பதெல்லாம் எந்த மூலைக்கு?

மிக முக்கியமாக, விவசாயிகளின் கவலையை இந்த பட்ஜெட் அதிகரிக்கவே செய்துள்ளது. ‘2024-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்று சூளுரைத்துள்ளார் மோடி. ‘விவசாய மானியங்கள் என்கிற பெயரில் கம்பெனிகளுக்குச் சென்றுகொண்டிருக்கும் மானியங்களை, நேரடியாகத் தங்களுக்கே தர வேண்டும்’ என்று விவசாயிகள் கோரிக் கொண்டிருக்கும் நிலையில், உரமானியம் என்பதைக் குறைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக, உரங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில், ‘அடுத்த 25 ஆண்டுக் காலத்துக்கான புளூ பிரின்ட்தான் இந்த பட்ஜெட்’ என்கிறார் நிதியமைச்சர். உண்மைதான்... தொலைநோக்குப் பார்வை முக்கியம்தான். அதேசமயம், அன்றாட வாழ்க்கையும்... அதாவது, அந்த 25 ஆண்டுக் காலத்தைப் பார்க்கும்வரையிலான வாழ்க்கையும் முக்கியம்தானே!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism