பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தேடிவரும் பர்சனல் லோன்... நில்... கவனி... வாங்கு..! ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

பர்சனல் லோன்
பிரீமியம் ஸ்டோரி
News
பர்சனல் லோன்

கவர் ஸ்டோரி

பண நெருக்கடி யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படி நெருக்கடியான சூழலில் யாரிடமும் கடனாகக் கேட்டு வாங்க முடியாத தொகையை பர்சனல் லோன் மூலம் வாங்கி, சமாளிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கடன் கேட்டு நாம் வங்கியின் வாசலில் தவம் கிடைந்த காலம் போய் இப்போது வங்கிகளே நமக்கு போன் செய்து ‘பர்சனல் லோன் தருகிறோம்’ என ஆசை வலை வீசுகின்றன. ‘அட, தேடிவந்து தருகிறார்களே’ என்று நினைத்து, நீங்கள் அந்த வலையில் சிக்கினால் பெரும்பாடுபட்டுதான் வெளியே வரவேண்டி இருக்கும் என்பதே பலரது எச்சரிக்கையாக இருக்கிறது.

பர்சனல் லோன் வாங்கலாமா, கூடாதா, அப்படி வாங்குவது எனில், என்னென்ன காரணத்துக்காக வாங்கலாம், இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் பத்மநாபனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். அவர் சொன்னதாவது...

தேடிவரும் பர்சனல் லோன்...
நில்... கவனி... வாங்கு..!
ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

பர்சனல் லோன் வாங்கலாமா..?

“இன்றைக்கு பர்சனல் லோன் தனியார் வங்கிகளில் மிகச் சுலபமாகக் கிடைக்கிறது. என்றாலும், அந்தக் கடனை நாம்தான் திரும்பச் செலுத்தியாக வேண்டும் என்கிற உண்மையை உணர வேண்டும். முதலில், பர்சனல் லோன் வாங்க வேண்டிய அளவுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்கிற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது முக்கியம். உங்கள் போன் நல்ல நிலையில் இருக்கிறபோதே, புது போன் வாங்கலாம் என்கிற ஆசை வரும். இது போன்று ஆடம்பர ஆசைக்காக இந்தக் கடன் வலையில் விழக்கூடாது.

வங்கிகள் எப்படி நம்மைக் குறிவைக்கின்றன எனில், நமது டேட்டாக்கள் பல விதங்களிலும் வெளியே செல்கின்றன. அதற்கென ஓர் சந்தையே இயங்குகிறது. அங்கே நமது நிதி நிர்வாகம் குறித்த டேட்டாக்கள்தான் விற்பனைப் பொருளாக விற்கப்படுகின்றன. நீங்கள் கார், நகை, டிவி என எது வாங்கினாலும் அந்தத் தகவல் அந்த டேட்டாவின் மூலம் சென்று சேர்கிறது. நீங்கள் தவணை முறையில் கார் வாங்குகிறீர்கள் எனில்கூட அதைத் திரும்பச் செலுத்தும் வலு உங்களுக்கு இருக்கிறது என்பது வங்கிக்குத் தெரியும். அது போன்று ஒவ்வொருவருடைய வாங்கும் திறனுக்கேற்ற தொகையைக் கடனாகத் தருவதாகக் கூறி நம்மை அழைக்கிறார்கள்.

நமது ஆடம்பரத்தின் மீதான மோகத்தில் வாங்கிவிட்டோம் என்றால் அல்லல்படப்போவது நாம்தான். எனவே, முடிந்த வரையிலும் பர்சனல் லோன் வாங்காமல் இருப்பதே நல்லது. சுலபமாகக் கொடுக்கிறார்கள் என்பதற்காக வாங்கிவிடக் கூடாது.

பர்சனல் லோன் வாங்க வேண்டியதன் அவசியம் என்ன?

பர்சனல் லோன் என்பதன் பொருளே என்ன காரணத்துக்கு வாங்குகிறோம் என்பதை வங்கிக்கு சொல்லத் தேவை இல்லை. தனிப்பட்ட காரணத்துக்காக வாங்குகிறோம் என்றாலும், அதன் முக்கியத்துவம் என்ன என்று பார்ப்பது அவசியம்.

உதாரணமாக, உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர் மருத்துவக் காப்பீடு இல்லாத நிலையில், அவரது மருத்துவச் சிகிச்சைக்குத் திடீரென பணம் தேவைப்படுகிறது எனில், வாங்கலாம்.

உங்கள் தொழிலில் நீங்கள் இன்னும் உயர ஒரு கோர்ஸ் படிக்க வேண்டியிருக்கிறது எனில், அதற்கு கல்விக் கடனெல்லாம் கிடைக்காது என்பதால், பர்சனல் லோன் வாங்கலாம்.

ரூ.30 லட்சத்துக்கு வீடு வாங்குகிறீர்கள் எனில், ரூ.6 லட்சம் முன்பணம் கட்டினால் தான் வீட்டுக் கடனே பெற முடியும். ஆனால், உங்களிடம் ரூ.4 லட்சம்தான் இருக்கிறது எனில், அவசரமாகத் தேவைப்படும் முன்பணம் ரூ.2 லட்சத்தை பர்சனல் லோனில் வாங்கிக் கொள்ளலாம்.

இது போன்று தவிர்க்கவே இயலாத அத்தியாவசிய சூழலில் பர்சனல் லோன் வாங்குவது நல்லது.

பொதுவாக, கடன்களைப் பொறுத்தவரை, உங்கள் சம்பளத்தில் 50% வரை மாதத் தவணையாக எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் அளிக்கப்படும். உங்கள் சம்பளம் ரூ.60,000 எனில், ரூ.30,000 வரைக்கும் தவணை கட்டும் விதத்தில் நீங்கள் எந்தக் கடனை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ரூ.25,000 வீட்டுக் கடன் செலுத்துகிறீர்கள் எனில், 5,000-க்கு பர்சனல் லோன் வாங்கிக்கொள்ளலாம்.

அத்தியாவசிய பணத் தேவை உள்ள எந்தச் சூழலுக்கும் பர்சனல் லோன் பொருந்தும். மற்ற கடன்களை விட மிக எளிதிலும் கிடைக்கும். மொத்தமாக ஒரு தொகை திடீரென கிடைத் தால், உடனே கட்டி அடைத்து விடலாம் என்பதெல்லாம் பர்சனல் லோனில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்கள்.

பத்மநாபன்
பத்மநாபன்

நண்பருக்கு வாங்கித் தரலாமா?

உங்கள் நண்பருக்காக நீங்கள் பர்சனல் லோன் வாங்கித் தருவதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ரிஸ்க். அவரே முறையாகக் கடனைத் திரும்பச் செலுத்தாததால் தான் அவருக்குக் கடன் கிடைக்கவில்லை என்கிற போது நீங்கள் ஏன் வாங்கித் தர வேண்டும்? அவர் அந்தக் கடனைத் திரும்பக் கட்டா விட்டால், நீங்கள்தான் அசலையும் வட்டியையும் கட்ட வேண்டிவரும். எனவே, இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

பர்சனல் லோன் தவிர்த்து குறைந்த வட்டியில் வேறு கடன் பெற முடியுமா?

நீங்கள் வீட்டுக் கடன் பெற் றிருந்தால், அதை முறையாகக் கட்டி வரும் சூழலில் ‘டாப் அப் லோன்’ உங்களுக்குக் கிடைக்கும். பர்சனல் லோனைவிடவும் இதற்கு வட்டி குறைவு என்பதால், டாப் அப் லோன் பெறலாம்.

நகைக் கடனைப் பொறுத்த வரை, பொதுத்துறை வங்கி களில் 8% வரைதான் வட்டி வசூலிக்கப்படுவதால், அங்கு தாராளமாக வாங்கலாம். தனியார் வங்கிகளில் சற்றே கூடுதல் வட்டி இருக்கும் என்றாலும், அவர்கள் நகைக் கடனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தருவதில்லை. நகைக்கடன் வழங்குவதற்கென்றே வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு நகையை அடமானம் வைத்தால் எளிதில் கடன் கிடைத்துவிடும். ஆனால், வங்கி களைக் காட்டிலும் அதிக அளவில் வட்டி கட்ட வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

பர்சனல் லோன் வாங்கும் முன் எவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

பர்சனல் லோனைப் பொறுத்தவரை ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை அதிகபட்சமாக 4 ஆண்டுகள் தவணைக் காலத்துடன் தரப்படுகிறது. வாங்குபவரின் புரொஃபைலுக்கு ஏற்றாற்போல் அதன் வட்டி விகிதம் வேறுபடுகிறது.

பொதுவாக, 10% - 30% வரை பர்சனல் லோனுக்கு வட்டி விதிக்கப்படுகிறது. நீங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகிறீர்கள் எனில், உங்களுக்கு 10% - 15 சதவிகிதத்துக்குள் கடன் தருவார்கள். ஏனென்றால் நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்திவிடுவீர்கள் என்பதற்கு உங்களது வேலை ஓர் உத்திரவாதமாக இருக்கிறது.

அலுவலகப் பணி அல்லாமல், சிறுதொழில் செய்கிறவர்கள் எனில், அவர்களுக்கு அதிகபட்ச மாக 30% வரைகூட வட்டி விதிக்கப்படும்.

சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால்தான் கடனே கிடைக்கும் என்றாலும், நமது வேலை மற்றும் வருவாய்க்குத் தகுந்தாற்போல் வட்டி விகிதம் மாறுபடுகிறது.

ஏன் பர்சனல் லோனுக்கு மட்டும் இப்படி எனில், மற்ற கடன்களைப் பொறுத்தவரை, நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் அதன் மூலம் வாங்கிய பொருளை பறிமுதல் செய்யலாம். பர்சனல் லோனில் அப்படி எதுவும் செய்ய முடியாது என்பதால்தான் இவ்வளவு வட்டி.

பொருளாதாரப் பின்புலம் எதுவும் இல்லாமல் பர்சனல் லோன் வாங்குவதன் மூலம் அதிக வட்டி கட்டி பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கடனைக் கட்டினால் போதும் என்கிற அளவுக்கு அவர்கள் சுமைக்கு ஆளாகிறார்களே தவிர, அந்தக் கடனைக் கொண்டு அவர்களது பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்துகொள்ள முடிவதில்லை. கடன் வாங்கி பணம் வரும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதைத் திரும்பச் செலுத்தும்போதுதான் அல்லாட வேண்டியிருக்கும்.

தேடிவரும் பர்சனல் லோன்...
நில்... கவனி... வாங்கு..!
ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

பர்சனல் லோன் வாங்கும்முன் வட்டியைக் குறைக்க என்ன செய்யலாம்?

கடன் கொடுப்பதும் ஒரு வியாபாரம்தான் என்பதால், இதில் தாராளமாக நாம் பேரம் பேசலாம். பேரம் பேசுகிற அளவுக்கு நமது வேலை மற்றும் சம்பாத்தியம் இருக்க வேண்டும். ஒருவருக்கு 30% வட்டிக்குத் தருகிற அதே கடனை இன்னொரு வருக்கு 12% வட்டிக்குத் தருகிறார்கள் எனில், அந்த 12 சதவிகிதத்திலேயே அவர்களுக்கான லாபம் இருக்கிறது என்று தானே அர்த்தம்? எனவே, நாம்தான் வட்டியைக் குறைக்கச் சொல்லி பேரம் பேச வேண்டும். 1% - 12 சதவிகித குறைந்தபட்ச வட்டியைக் குறைக்க மாட்டார்கள். நமது வருவாய் மற்றும் தேவையைப் பொறுத்து 30% என்பதை 18 சதவிகிதமாகக் குறைத்தால்கூட நமக்கு லாபம்தானே!

தேடிவரும் பர்சனல் லோன்...
நில்... கவனி... வாங்கு..!
ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

பொதுத்துறை வங்கி Vs தனியார் வங்கி... எங்கு வாங்குவது சிறந்தது?

பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதால், அங்கு கடன் பெறுவது சிறந்தது. தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதற்கான நடைமுறைகள் அதிகம். நமது ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கைக்கு வர கொஞ்ச காலம் ஆகும்.

தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, நமது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு பெற்றுக்கொண்ட உடனேயே பரிசீலித்து இரண்டொரு நாள்களில் கடன் கொடுத்துவிடுவார்கள். பொதுத்துறை வங்கிகளில் பர்சனல் லோன் கிடைக்க வில்லை எனில், தனியார் வங்கிகளை அணுகலாம்.

பர்சனல் லோன் வாங்க அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் கணக்கு வைத்திருக்கிற வங்கியாக இருக்கும்போது எளிதில் தந்து விடுவார்கள். ஏனென்றால், நமது பரிவர்த்தனைகள் பற்றி அவர்களுக்குத் தெரியும். அந்த நம்பகத் தன்மையை வைத்துத் தருவார்கள். மற்றபடி நாம் எந்த வங்கியில் வேண்டுமானாலும் கடன் பெறலாம்.

வங்கி அல்லாத நிதி நிறுவ னங்களில் கடன் பெறுவது இன்னும் சுலபமானது என்றாலும் வட்டி விகிதம் மிக அதிகமானது.

பர்சனல் லோனை சரியாக செலுத்தி முடிப்பது எப்படி?

முதலில் எத்தனை ரூபாய் கடன் வாங்குகிறோம் என்பது முக்கியம். அந்தக் கடன் தொகைக்கு எத்தனை சத விகித வட்டியோ, அதைப் பொறுத்து எத்தனை மாதத் தவணையில் வாங்கினால் நம்மால் மாதத் தவணையை முறையாகச் செலுத்த முடியும் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, 15% வட்டியில் நான்கு ஆண்டு களுக்கு ரூ.1 லட்சம் வாங்கு கிறீர்கள் எனில், மாதத்துக்கு ரூ.2,783 தவணை கட்ட வேண்டி இருக்கும். 48 மாதங்களில் ரூ.1,33,588 கட்டி நீங்கள் கடனை முடிப்பீர்கள். இந்தக் கணக்கை முன்பே போட்டு, எத்தனை மாதமோ அத்தனை தவணையையும் முறையாகக் கட்டி வந்தாலே போதுமானது.

தவணையை சரியாகச் செலுத்தாவிட்டால் என்ன சிக்கல்..?

முறையாகத் தவணையை செலுத்தவில்லை எனில், வட்டி விகிதத்தை அதிகரித்து விடுவார்கள். அதன்பிறகு அவர்களிடம் நாம் பேசிக் குறைக்கவே முடியாது. உங்களுக்கு வேலை போய் விட்டது எனில், உங்களால் அடுத்த வேலைக்குச் சேரும் வரையில் தவணைத் தொகை யைக் கட்டவியலாது. அப்படியான சூழலில் வங்கியிடம் நம் நிலையை எடுத்துச் சொன்னால், மூன்று மாதம் வரை தவணை கட்டாமல் இருக்க அனுமதி கிடைக்கலாம். அந்த அனுமதி யும் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கில்லை.

முறையாகக் கடன் தொகை யைக் கட்டாமல் போனால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். இதனால் வருங்காலத்தில் உங்களால் வீட்டுக் கடன் மாதிரியான முக்கியக் கடன் களைக்கூட பெற முடியாத சூழல் ஏற்படும். அதுவே நாம் முறையாகக் கடனைத் திரும்பச் செலுத்தினோம் என்றால் நம் மீதான நம்பிக்கையில் டாப்அப் ஆக கூடுதல் கடன் தருவதாகச் சொல்வார்கள். அந்த வலையில் நாம் விழுந்துவிடாமல் இருக்கிற கடனைக் கட்டி முடிப்பதே நல்லது.

தேடிவரும் பர்சனல் லோன்...
நில்... கவனி... வாங்கு..!
ப்ளஸ் - மைனஸ் டிப்ஸ்

பர்சனல் லோன் வாங்காமல் இருக்க என்ன வழி?

முன்பிருந்த கூட்டுக்குடும்ப அமைப்பில் நிதி நிர்வாகம் குடும்பத் தலைவரிடம் இருந்தது. சம்பாதிக்கிற பணம் முழுவதையும் குடும்பத் தலைவரிடம் தந்துவிட்டு, வேண்டும் என்கிறபோது தேவையான பணத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு செலவு செய்வார்கள். வீண் செலவு எனில், குடும்பத் தலைவரே கண்டித்துப் பணம் தர மறுப்பார்.

இன்றைக்கு நமக்கு பணத்தின் மீது எந்தக் கட்டுப் பாடும் இல்லை. அதன் முழுப்பொறுப்பும் நம்மிடம் தான் இருக்கிறது என்பதால், தாராளமாகச் செலவு செய்கிறோம். தேவையைத் தாண்டி ஆடம்பரத்துக்காக அதிகம் நுகர்கிறோம். என்ன போன் பயன்படுத்த வேண்டும், என்ன வண்டி வைத்திருக்க வேண்டும் என்பதை புறச்சூழல் தீர்மானிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இன்றைக்கு பள்ளிக் குழந்தைகளுக்குக்கூட ஸ்மார்ட்போன் வாங்கித் தருகிறோம்.

தேவையற்ற நுகர்வைக் குறைத்தாலே போதும், நமது வருவாயைக் கொண்டே பணத்தைச் சேமிக்கலாம். நமது வருவாய்க்கேற்ற விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது முக்கியம்.

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குகிறவர் கடனாளி யாகவும், ரூ.25,000 சம்பளம் வாங்குகிறவர் கடனற்றவராகவும் இருப்பதை நாம் பார்க்க முடியும். ஆக, சம்பளம் இங்கு பிரச்னை இல்லை. கிடைக்கிற சம்பளத்துக்கு ஏற்றாற் போல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பர்சனல் லோன் வாங்கு வதற்கான தேவையை உண்டாக்காமல் வாழ்வதே நிரந்தரமான, நிம்மதியான தீர்வு..!’’