இந்தியாவில் வளர்ந்துவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் பொருட்டு, இனி ஒவ்வொரு ஜனவரி 16-ஆம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாகக் (National Startup Day) கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ```புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட்-அப்கள் திகழும்; இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, ஸ்டார்ட்-அப்களுக்கு முக்கியமான பங்கு இருக்கும்” எனவும் கூறியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்றைய சூழலில், உலக அளவில் தொழில் துறையின் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக இருக்கிறது ஸ்டார்ட் அப். இந்த வகை நிறுவனங்கள் கொண்டுவரும் மாற்றங்கள் மனித வாழ்க்கையையே புரட்டிப் போடுவதாக இருக்கிறது. ஊபர், பேடிஎம் எனப் பல ஸ்டார்ட் நிறுவனங்கள் நம் வாழ்க்கையில் கொண்டுவந்திருக்கும் மாற்றம் என்பது மகத்தானதாக இருக்கிறது.
நம் நாட்டைப் பொருத்தவரை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 2021-ல் மட்டும் 40 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் `யுனிகார்ன்’ நிலையை எட்டியது. 100 கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனங்களாக மாறுவதைத்தான் `யுனிகார்ன்’ நிறுவனங்கள் என்கிறோம். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.7,500 கோடிக்கு நிகரானதாகும்.
அது மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் 45 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் `யுனிகார்ன்’ நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி குறித்து வளர்ந்துவரும் தொழில்முனைவோர் தங்கவேல்புகழிடம் (நிறுவனர் - டிஜிநாடு) கேட்டோம்.
``ஸ்டார்ட்அப்களோட வளர்ச்சியை இரண்டு விதமா பிரிக்கலாம்; கொரோனாவிற்குமுன், பின் என்று கடந்து ஆண்டு கொரோனா பல கற்றல்களை கற்றுக் கொடுத்தது. குறிப்பாக, ஸ்டார்ட்அப் தொடங்க அலுவலகங்கள் முக்கிய தேவையில்லை என்றும், பெருநகரங்கள் மட்டுமின்றி அவரவர் சொந்த கிராமங்களிலே தொழில் தொடங்கலாம் எனவும் கற்றுக்கொடுத்துள்ளது. அரசின் திட்டங்களும் ஸ்டார்ட்அப்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உறுதுணையாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
வரும் வருடங்களில் இந்தியாவில் உள்ள கிராமங்களும் ஸ்டார்ட் அப்பினால் வளரும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.