Published:Updated:

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார்?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த மோசடி தொடர்பாக தியாகபிரகாசம் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நூறு நாள்களில் பணத்தை இரண்டு மடங்காகத் தருவதாக இவர் சொல்ல, பலரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ரூ.300 கோடி அளவுக்கு மக்கள் இந்தத் திட்டத்தில் பணம் போட்டதாகச் சொல்லப்படுகிறது.

வழக்கம்போல, இந்தத் திட்டத்தை நடத்தி வந்தவர் திடீரென தலைமறைவாகிவிட, பணம் தந்த மக்கள் அனைவரும் போலீஸில் புகார் கொடுக்க, இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட தியாகபிரகாசம் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இனி அவரை காவல்துறை விசாரித்து, அவரிடம் இருக்கும் பணத்தை வாங்கி, மக்களுக்குத் திரும்பக் கொடுக்க எத்தனை காலம் ஆகுமோ?

இந்த மோசடித் திட்டங்கள் நடக்க முக்கியமான காரணம், நமது நிர்வாக அமைப்பில் இருக்கும் பலவகையான ஓட்டைகள்தான். ஒரு நிறுவனம் பல கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்போது, இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது, என்ன தொழில் செய்கிறீர்கள் என்றெல்லாம் வங்கிகள் கேட்பதில்லை. பொய்யான வாக்குறுதிகளை வெளிப்படையாக விளம்பரம் செய்து, மக்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்யும்போது, காவல்துறை அதை வேடிக்கை பார்க்கிறதே தவிர, இவர்கள் சொல்வது நிஜமா, அரசின் அனைத்து அனுமதி களையும் பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்பதே இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, பேராசையுடன் அலையும் மக்கள். கல்லைப் பொன்னாக்குவோம், வைரமுட்டை போடும் வாத்து, 60 நாளில் 600% லாபம் என யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி பணம் போடுவதற்கு மக்கள் கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. என்ன செய்கிறார்கள், எப்படி லாபம் தருவார்கள், அவர்கள் சொல்கிறபடி நடக்குமா என்று யாரும் யோசித்துப் பார்ப்பதும் இல்லை; விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்து நடப்பதும் இல்லை. அவர்களிடம் இருக்கும் பேராசை உண்மையைப் பிரித்துப் பார்க்க முடியாதபடிக்கு அவர்களின் கண்களை மறைத்துவிடுகிறது. அவர்கள் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார்களோ?

ஆக மொத்தத்தில், யாராவது புகார் செய்த பிறகு நடவடிக்கை எடுப்போம் என அஜாக்கிரதையாக இருக்காமல், மோசடி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய வேலையை காவல்துறை இனியாவது செய்ய வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும் நன்கு விசாரித்தே அதில் பணம் போடும் முடிவை மக்கள் இனியாவது எடுக்க வேண்டும்.

மோசடி நிறுவனங்களின் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனில், அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், அவை என்றென்றும் சீரும் சிறப்புமாகவே செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்!

- ஆசிரியர்