Published:Updated:

மனதை மயக்கும் மர்ம முதலீடுகள்... பணத்தைப் பறிக்கும் சதுரங்க வேட்டைகள்..!

மோசடி
பிரீமியம் ஸ்டோரி
மோசடி

மோசடி

மனதை மயக்கும் மர்ம முதலீடுகள்... பணத்தைப் பறிக்கும் சதுரங்க வேட்டைகள்..!

மோசடி

Published:Updated:
மோசடி
பிரீமியம் ஸ்டோரி
மோசடி

முதலீட்டாளர்கள் இடையே பல மோசடி திட்டங்கள் இன்றும் வெற்றிகரமாக உலா வருகின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணம், ஆரூத்ரா நகைக்கடை. யாரும் தரமுடியாத அதிகபட்சமான வருமானத்தை உறுதியாகத் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றுவதுதான் ஆரூத்ரா போன்ற மோசடி நிறுவனங்களின் வேலை.

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

அடுத்தடுத்து மோசடி செய்யும் இந்த பொன்ஸி நிறுவனங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். இந்த மோசடி நிறுவனம் நடத்தும் திட்டங்களில் முதலீட்டாளர்களிடம் பெறப்படும் தொகையிலிருந்து பணத்தை எடுத்து அதிக வருமானம் என்று சொல்லி பழைய மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்குத் தருகிறார்கள். இதை உண்மையான லாபம் என்று நினைத்து பணம் போட்டவர்களும் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்கிறார்கள். பணம் போட்டவர்களுக்குத் தொடர்ந்து வருமானம் தர வேண்டுமெனில், புதிய முதலீட் டாளர்களையும் புதிய முதலீட்டையும் தீவிரமாக மோசடி நிறுவனங்கள் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிதாகப் பணம் வருவது என்று நிற்கிறதோ, அப்போது இந்த நிறுவனத்தின் முகமூடி கிழிந்து, இதன் நிஜ உருவம் அம்பலமாகிவிடும். அதுவரை இந்த மோசடி நிறுவனங்களை நம்பிப் பணம் போட்டவர்கள், நிறுவனம் மூடப்பட்ட செய்தியை அறிந்தவுடன், ‘அய்யோ, அய்யோ’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்வது நாம் அடிக்கடி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது!

நெறிமுறை அமைப்புகள் எச்சரிக்கை...

முதலீட்டாளர்களுக்கு வருமானம் வருவது நிற்கும்போது, இந்தத் திட்டம் பிரச்னைக்கு உள்ளாகிறது. இதுபோன்ற திட்டங்கள் குறித்து செபி, ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றன. இருந்தாலும் பேராசை யாரைவிட்டது?

ஆர்.பி.ஐ, ஐ.ஆர்.டி.ஏ.ஐ, செபி போன்ற நெறிமுறை அமைப்பு களிடமோ மத்திய, மாநில அரசு நிறுவனங்களிடமோ பதிவு செய்யப்படாத முதலீட்டுத் திட்டங்கள் எனில், அதில் முதலீடு செய்யக் கூடாது. அரசு அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்தால், அவற்றின் முதலீட்டுத் திட்டங்கள், சேவைகள் மற்றும் நிதிநிலை பற்றிய விவரங்கள் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். பெரும்பாலான பொன்ஸி திட்டங்கள் உரிமம் பெறாத நபர்கள் அல்லது பதிவு செய்யப்படாத நிறுவனங் களாகத்தான் உள்ளன. இந்த நிறுவனங்கள் காட்டும் பாந்தாவை நம்பினாலோ, அவர்கள் சொல்வது எல்லாம் நிஜம் என்று நினைத்து பணம் போட்டாலோ நிச்சயம் நஷ்டம்தான் வரும்.

மனதை மயக்கும் மர்ம முதலீடுகள்... பணத்தைப் பறிக்கும் 
சதுரங்க வேட்டைகள்..!

மர்ம முதலீடுகள்...

பொன்ஸி போன்ற மோசடி முதலீட்டுத் திட்டங்கள் மர்ம முதலீட்டுத் திட்டங்களாக இருக்கும். முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப் படும் பணம் எங்கே முதலீடு செய்யப்படுகிறது, அதன்மூலம் எப்படி வருமானம் வருகிறது என்கிற தெளிவான விளக்கம் எதுவும் இருக்காது. இது போன்ற முதலீடுகளை நீங்கள் புரிந்துகொள்ளா விட்டால் அல்லது அவற்றைப் பற்றிய முழுமை யான விவரங்களைத் தரவில்லை எனில், அந்தத் திட்டங்களில் பணம் போடாமல் தூர விலகி நிற்பதே நல்லது.

நூதன நிபந்தனை..!

உங்களுக்குப் பணம் வராவிட்டால் அல்லது பணம் பெறுவதில் சிரமம் இருந்தால் அது குறித்து எந்த அலுவலகம் அல்லது எந்த அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும் என்கிற கேள்வியை முதலீட்டுத் திட்டங்களை நடத்துபவர்களிடம் கேளுங்கள். உங்களுக்குத் தெளிவான பதில் தரவில்லை எனில், அது ஏமாற்றுத் திட்டம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

மோசடி திட்டங்களை நடத்து பவர்கள், அவர்கள் தரும் காசோலை பணம் இல்லாமல் திருப்பி வந்துவிட்டால் யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காக நூதனமான முறையில் விதிமுறைகளை விதித்திருப்பார்கள். அதில், ஒன்று ‘வங்கியில் பணம் இல்லை என்று காசோலை திரும்பிவந்து விட்டால், அந்தக் காசோலையை கொண்டுவந்து எங்களிடம் கொடுத்துப் பணமாக வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்பதாகும். அந்தப் பணத்தையும் உடனடி யாகத் தராமல் சில வாரங்கள் அலையவிடுவார்கள். அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விடுவார்கள். குறுகிய காலத்துக் குள் அதிக வருமானம் தருவதன் மூலம் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் மோசடி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ரிஸ்க்குகளை முன்கூட்டியே அறிந்து வைத் திருப்பதன் மூலம் உங்கள் பணத்தை இழப்பதைத் தவிர்க்க முடியும். இன்னும் சில மோசடி திட்டங்களிலிருந்து முதலீட் டாளர்கள் விலகி இருக்க வேண்டும்.

மனதை மயக்கும் மர்ம முதலீடுகள்... பணத்தைப் பறிக்கும் 
சதுரங்க வேட்டைகள்..!

கூடுதல் வருமானத்துக்கு ஆசைப்பட்டு..!

‘நாங்கள் உலகின் மிகப் பெரிய நுகர்வோர் பொருள்கள் நிறுவனம்’ என்பார்கள். அந்த நிறுவனத்துக்கு இணையதளம் எல்லாம் இருக்கும்; அதன் தயாரிப்பு பொருள்களும் தரமாக இருக்கும். அந்தப் பொருள்களை உங்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பதாகச் சொல்வார்கள். ஆரம்பத்தில் முன் பணம் வாங்காமல்கூட பொருள் களை சப்ளை செய்வார்கள். கடைகளைவிட உங்களிடம் விலை குறைவு என்பதால், உங்களிடம் பலர் வாங்குவார்கள். உங்களுக்கும் லாபம் கிடைக்கும். உங்களை பலரை ஏஜன்டுகளாக நியமிக்கச் சொல்வார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு, முன்பணம் கொடுத்தால் மட்டும்தான் பொருள்கள் என்பார்கள். ஒரே நேரத்தில் பல கோடி தொகை அவர்கள் கணக்குக்கு வரும்போது, தலைமறை வாகிவிடுவார்கள். உங்களுக்கு லட்சக்கணக்கில் பண இழப்பு என்பதுடன், நீங்கள் ஏஜென்டு களிடமிருந்து வாங்கிக் கொடுத்த பணமும் இழப்பு.

திடீரென யாராவது முன்னணி பிராண்ட் பொருள்களைத் தள்ளுபடி விலையில் வாங்கி விற்கலாம் என்றால், உஷாராக இருக்க வேண்டும். இது போன்று ஏமாற்றுபவர்கள் பிரபல பிராண்ட் பொருள்களை அவர்களிடமிருந்து மொத்தமாகத் தள்ளுபடி விலையில் வாங்கி, அதிலும் தள்ளுபடி கொடுத்து கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்களை வலையில் விழ வைக்கிறார்கள். அதன் பிறகு, மொத்தத் தொகையை சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள்.

உஷாராக இருங்கள்..!

ஒரு முதலீட்டுத் திட்டத்தின் தன்மை என்ன, உங்கள் பணம் எங்கே, எவ்வாறு முதலீடு செய்யப்படும் என்பது தெளிவாக புரியவில்லை என்றால், அதில் முதலீடு செய்ய வேண்டாம். நம்ப முடியாத வட்டியைத் தரும் திட்டம் என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பரிந்துரை செய்தாலும் புரியாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களில் நண்பர்கள், உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் மற்றும் பேராசை காரணமாகப் பணத்தைப் போட்டுவிட்டு ஏமாந்தவர்கள்தான் அதிகம். இந்த நண்பர்கள், உறவினர்கள் அதன் ஏஜென்டுகளாகச் செயல்படுவார்கள். அவர்கள் இந்த வேலையில் குறுகிய காலத்துக்குப் பகுதி நேரமாகச் செயல்படுவார்கள். அவர்களுக்கான கமிஷன் கிடைத்ததும் வேறு வேலையைப் பார்க்க போய்விடுவார்கள்.

அவரை நம்பிப் பணம் போட்ட நீங்கள்தான் பணத்தை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். எனவே, இது மாதிரியான மோசடித் திட்டங்களை ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் தவிர்ப்பதே சரி.

நாம் முதலீடு செய்யும் திட்டங்களின் லாப நஷ்டத்துக்கு நாம்தான் காரணம் என்று செயல்பட்டால், நிச்சயம் மோசடி திட்டங்களில் பணம் போட மாட்டோம்.

போலிகள் ஜாக்கிரதை!

தற்போதைய நிலையில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 5.5%, கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்க்கு 7.5 - 8% வட்டி வருமானம் கொடுக்கப்படுகிறது. ஆர்.பி.ஐ அறிவுறுத்தலின்படி, எந்த ஒரு முதலீட்டுக்கும் ஆண்டுக்கு நிலையாக 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி அல்லது வருமானம் தருகிறோம் என்றால் உஷாராக இருக்க வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 50%, 60% வருமானம் என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

‘வாழ்த்துகள்! பாராட்டுகள்... நீங்கள் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசை வென்றுள்ளீர்கள்! உங்கள் பரிசைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சிறிய கட்டணம் அல்லது வரி செலுத்த வேண்டும்’ எனச் சொல்வார்கள். முறையாக சட்டப்படி நடத்தப்படும் போட்டிகள் எதற்கும் உங்கள் பரிசை பெறக் கட்டணம் எதையும் வசூலிக்கப்படுவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism