Published:Updated:

அடித்தட்டு மக்களைக் கைதூக்கிவிடுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

நம் நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் ஒருபக்கம் வந்துகொண்டிருக்க, நம் நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான சமத்துவமின்மை கணிசமாக அதிகரித்துவருவதாக பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் பெர்க்லே பல்கலைக்கழகமும் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

இந்த அறிக்கையில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல் என்னவெனில், நம் நாட்டில் 1% செல்வந்தர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 3.25 கோடி ரூபாய். 10% பணக்காரர்களின் வருமானம் சராசரியாக 63.5 லட்சம் ரூபாய். ஆனால், 50% மக்களின் சராசரி வருமானம் வெறும் 66,280 ரூபாய். 50% இந்திய இளைஞர்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 53,610 ரூபாய்.

நம் நாட்டில் ஏழைகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் இடையிலான இந்த மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, கணிசமாக உயர்ந்திருக்கிறது என இந்த அறிக்கை சொன்னாலும், அடித்தட்டு மக்கள் குறித்து பல ஆண்டுக் காலமாக எந்த அக்கறையும் இல்லாமல் இருந்ததன் விளைவே சமத்துவமின்மை பூதாகரமாக வளரக் காரணம்.

கடந்த சில பத்தாண்டுகளாகப் பெருந்தொழில் நிறுவனங்கள் மேலும் மேலும் பல்கிப் பெருகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுக்கவில்லை. கிராமப் புறங்களில் பெருவாரியாக வசிக்கும் ஏழைகளுக்கு நல்ல கல்வி தரப்பட வில்லை; நல்ல வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படவில்லை; சொந்தமாகத் தொழில் தொடங்க எளிய கடன் வசதித் திட்டங்கள் இல்லை என முன்னேற்றத் துக்கு நூறு முட்டுக்கட்டைகள் முன்னே நிற்கின்றன. அவற்றுடன் முட்டிமோதவே அடித்தட்டு மக்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறதே தவிர, பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண உருப்படியான வேலைகளைச் செய்ய முடியவில்லை. நன்கு பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளில் இந்த மாதிரியான நிலை இல்லாததால்தான், அந்த நாடுகளில் சமத்துவமின்மை என்கிற பிரச்னை நம் நாட்டைவிடக் குறைவாக இருக்கிறது.

தலையங்கம்
தலையங்கம்

இந்த நிலையானது இனியும் தொடர மத்திய, மாநில அரசாங்கங்கள் நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. ஏழை மக்கள் பொருளாதார வளர்ச்சி காணத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டு எடுக்கப்பட வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இடைவெளியானது கணிசமாகக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அடித்தட்டு மக்கள் அனைவரையும் கைதூக்கிவிடுவதன்மூலமே உண்மை யான பொருளாதார வளர்ச்சியை நம்மால் காண முடியும். ஏழை - பணக்காரர் என்னும் இடைவெளி இன்னும் அதிகமாகும்பட்சத்தில், நம் நிம்மதியை சீர்குலைக்கும் சமூகக் கொந்தளிப்பே ஏற்படும் என்பதை அரசாங்கங்கள் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்!

- ஆசிரியர்