Published:Updated:

தப்பிச் செல்ல முயன்ற மகள்.. நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட தந்தை! -`எஸ் வங்கி' விவகாரத்தில் இறுகும்பிடி

ரோஷ்னி கபூர்
ரோஷ்னி கபூர்

எஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்தச் சூழலில் ராணாவின் கைது பரபரப்பை அதிகப்படுத்தியது. பின்னர், அவரை விடுமுறை தின நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கப் பிரிவினர் 11ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வாங்கினர்.

எஸ் பேங்க் நிதிச்சுமையில் சிக்கியது தேசிய அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கியை மீட்டெடுக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மும்பையில் உள்ள எஸ் பேங்கின் நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரின் மகள்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டனர்.

இதன் முடிவில் ராணா கபூர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவரவே மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அவரை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்து அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ராணா கபூர்
ராணா கபூர்

அப்போது கடும் நிதி நெருக்கடியிலிருந்த பல நிறுவனங்களுக்குத் தெரிந்தே அதிக அளவில் கடன் வழங்கி அதன் மூலம் ராணா ஆதாயமடைந்தது தெரியவந்துள்ளது. கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி தன் மகள்கள் பெயரில் உள்ள நிறுவனத்தில் ராணா முதலீடு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்தச் சூழலில் ராணாவின் கைது பரபரப்பை அதிகப்படுத்தியது.

பின்னர் அவரை விடுமுறை தின நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கப்பிரிவினர் 11ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வாங்கினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அமலாக்க இயக்குநரகம் வழக்கறிஞர், திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை எஸ் வங்கி வாங்கியதாகக் குற்றம் சாட்டினார்.

நெருக்கடியில் `எஸ் பேங்க்’ - திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ.1,300 கோடி தப்பியது எப்படி?

இதற்குப் பிரதிபலனாக ரூ.600 கோடி ராணா கபூரின் மகள் ரோஷ்னி கபூர் உட்பட மூன்று மகள்கள்களுக்குச் சொந்தமான டொயிட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் ராணா கபூர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்" என்று குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டைக் கேட்ட உடனேயே, ராணா கபூர் நீதிமன்றத்தில் அழுதுவிட்டார். அழுதுகொண்டே, ``நான் அவர்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறேன். இரவு பகலாக கண் சிமிட்டாமல் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்" என நீதிமன்றத்தில் கூறினார். இதேபோல் அவரது வழக்கறிஞரும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டை மறுத்தார்.

ராணா கபூர் கைது
ராணா கபூர் கைது
ANI

``எஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு ரூ.50,000 வரம்பை விதித்தது. இதன்பின்னர், எஸ் வங்கிக்கு எதிரான பொதுமக்கள் சீற்றம் காரணமாக ராணா கபூர் "பலிகடாவாக" மாற்றப்பட்டுள்ளார்" எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில், ராணா கபூரின் மகள் ரோஷிணி கபூர் இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பிச் செல்ல மும்பை விமான நிலையம் வந்தார். நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தபோது இதுகுறித்த தகவல் அறிந்த மும்பை போலீஸார் விரைந்து சென்று விமான நிலையத்தில் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவர் விரைவில் அமலாக்கப்பிரிவு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார் எனத் தெரிகிறது.

`எஸ் பேங்க்' வீழ்ந்த கதை! ஏன், எப்படி? #YesBank
அடுத்த கட்டுரைக்கு