Published:Updated:

பங்கு விலையில் 45.21% ஏற்றம்... சரிவிலிருந்து மீள்கிறதா யெஸ் பேங்க்?! #YesBank 

Yes bank
Yes bank ( AP / Ajit Solanki )

வாராக் கடன் சுழலில் சிக்கி முடங்கிப் போன யெஸ் பேங்கை மீட்டெடுத்து மறுசீரமைப்பு செய்யும் வகையில் ரூ.10,000 கோடிக்கு அந்த வங்கியின் பங்குகளை வாங்குவதென எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் பேங்க், வாராக் கடன் பிரச்னையில் மூழ்கியுள்ளது. வாராக் கடனோடு, வருவாய் இழப்புகள் அதிகரித்து தொடர்ந்து இயங்குவதற்கே போதிய மூலதனம் இல்லாததால் திவால் ஆகும் நிலைக்குச் சென்றுள்ளது. இவ்வங்கியை, ரிசர்வ் பேங்க் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது. இதையடுத்து பங்கு விற்பனை மூலமாக முதலீடுகளைத் திரட்டி, கடனிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

யெஸ் பேங்கில் நிகழ்ந்த இந்தப் பொருளாதார அசாதாரண சூழ்நிலைக்குத் தீர்வு காணும் பொருட்டு ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நிர்வாக அதிகாரியாக நியமித்து அவர் தலைமையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

வீழ்ச்சியைக் முன்கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்?

இதற்கு முன்னதாக, யெஸ் பேங்க் வீழ்ச்சியை முன்கூட்டியே தெரிந்துகொண்ட, அதன் சில வாடிக்கையாளர்கள் 2019 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் ரூ.18,110 கோடியை வங்கியிலிருந்து எடுத்துள்ளனர். 2019 மார்ச் மாத நிறைவில் யெஸ் பேங்கில் டெப்பாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.2,27,610 கோடியாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் - ஜூன் மாதங்களின் முடிவில் இவ்வங்கியின் டெப்பாசிட் தொகை ரூ.2,25,902 கோடியாகக் குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இதன் அளவு ரூ.2,09,497 கோடியாகக் குறைந்திருக்கிறது. ஆறு மாதங்களில் மட்டும் டெப்பாசிட் தொகையில் ரூ.18,110 கோடி குறைந்துள்ளது.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்
`கடனில் முத்தெடுத்த எஸ் பேங்க் ராஜ தந்திரி!’ - ராணா கபூரின் மோசடிகளைப் பட்டியலிட்ட அமலாக்கத்துறை

செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு தனது காலாண்டு முடிவுகளை யெஸ் பேங்க் வெளியிடாததால், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. வங்கி மூழ்கிக் கொண்டிருப்பதை அறிந்த வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது டெபாசிட் தொகையை எடுத்துள்ளனர். இதுபோன்ற சூழலில்தான் தற்போது வாடிக்கையாளர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50,000-க்கு மேல் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்திருக்கிறது.

நம்பிக்கை வார்த்தைகள்!

வங்கி சீரமைப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், ``வேறு எந்தத் தனியார் துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது யெஸ் பேங்கின் வாராக் கடன் டிசம்பர் காலாண்டில் மிகவும் அதிகபட்சமாக ரூ.18,654 கோடியாகக் காணப்பட்டது. வாராக் கடன் இடர்பாடுகளால் ஏற்படும் அழுத்தங்களை யெஸ் பேங்க் எதிர்கொண்டு வருகிறது. வாராக் கடனால் ஏற்படும் பிரச்னைகள் அடுத்து வரும் நிதியாண்டிலும் தொடரும் நிலையே உள்ளது. இருப்பினும், ரூ.10,000 கோடி மூலதனம், 1,000 கிளைகள், மற்றும் வலுவான வாடிக்கையாளர் அடித்தளத்துடன் இணைந்து அத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதையடுத்து, எதிர்காலத்தில் வங்கி நிதி ஸ்திரத்தன்மையை உணர்ந்து வழக்கமான வர்த்தக நடைமுறைகளுக்கு மாறி லாபம் ஈட்டும்" என்று பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் குமார் - யெஸ் பேங்க்
பிரசாந்த் குமார் - யெஸ் பேங்க்

பெரிய நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட்டதையடுத்து, யெஸ் பேங்கின் ஒட்டுமொத்தக் கடன்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி வாராக் கடனாக மாறியது. இந்த நிலையில், தற்போது புதிய நிர்வாகி பிரசாந்த் குமார் தலைமையில் செயல்படும் இந்த வங்கி சில்லறை மற்றும் சிறிய வர்த்தகக் கடன்களுக்கு முன்னுரிமை தந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் வங்கியின் இழப்பு ரூ.24,587 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தச் சரிவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வர 2021-22-ம் நிதியாண்டில்தான் முடியும் என வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ரூ.1,000 கோடியை முதலீடு செய்யும் ஐசிஐசிஐ! 

வாராக் கடன் சுழலில் சிக்கி முடங்கிப் போன யெஸ் பேங்கை மீட்டெடுத்து மறுசீரமைப்பு செய்யும் வகையில் ரூ.10,000 கோடிக்கு அந்த வங்கியின் பங்குகளை வாங்குவதென எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்பு முடிவெடுத்தது. இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள, ஐடிஎஃப்சி பாஸ்ட் பேங்க், பந்தன் பேங்க், பெடரல் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை யெஸ் பேங்கில் மூலதனம் மேற்கொள்ள உள்ளதாக ஏற்கெனவே பங்குச் சந்தையிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்

இந்நிலையில் யெஸ் பேங்கில் முதலீடு செய்ய மற்றொரு தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ பேங்க்கும் முன்வந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டுக்கு ஐசிஐசிஐ வங்கியின் உயர்மட்டக் குழு கடந்த மார்ச் 12-ம் தேதி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. யெஸ் பேங்கின் 100 கோடிப் பங்குகளை பங்கு ஒன்று ரூ.10 என்ற விலைக்கு ஐசிஐசிஐ வாங்கப் போகிறது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் படி இந்த முதலீட்டை ஐசிஐசிஐ வங்கி மேற்கொள்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு யெஸ் வங்கியின் மீதான முதலீடுகள் உறுதி செய்யப்படுவதாகவும், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் முழுவதும் பாதுகாக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஏப்ரல் 3-`ம் தேதி வரையில் ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டில் யெஸ் பேங்க் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யெஸ் பேங்க் அறிவிப்பு!

இதனிடையே, யெஸ் பேங்க், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தங்களது வங்கி வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு மற்றும் கடன்களை, மற்ற வங்கிக் கணக்குகளிலிருந்து மேற்கொள்ளலாம். வங்கி ஏடிஎம்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. குறிப்பிட்ட அளவிலான பணத்தை, மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவைகளான IMPS/NEFT மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`எஸ் பேங்க்' வீழ்ந்த கதை! ஏன், எப்படி? #YesBank

யெஸ் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்காலம், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்கு முன்னதாக, இந்த வாரத்திற்குள்ளாகவே விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக பிரசாந்த் குமார் தெரிவித்திருந்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அடிக்கடி இதை வலியுறுத்திவந்தார். அதனடிப்படையில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்றும், வருகிற மார்ச் 18-ம் தேதி முதல் யெஸ் பேங்க் வழக்கம்போல் செயல்படும் என்றும்தகவல் வெளியாகியுள்ளது. அன்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளை வழக்கம்போல பயன்படுத்தலாம்.

Representational Image
Representational Image

இதனால் மும்பைப் பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்த யெஸ் வங்கிப் பங்குகள், தற்போது ஏற்றம் பெறத் தொடங்கியுள்ளன. 16.03.2020-ம் தேதி வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 2713.41 புள்ளிகள் குறைந்து 31,390.07 என்கிற நிலையிலும், நிஃப்டி 757.8 புள்ளிகள் சரிந்து 9197.40 என்கிற நிலையிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. யெஸ் பேங்க் பங்கு ஒன்றின் விலை 45.21% அதிகரித்து 37.10 ரூபாய்க்கு வர்த்தகமானது. 

சக்தி காந்த தாஸ்
சக்தி காந்த தாஸ்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் ரஜ்னீஷ் குமார், ``யெஸ் பேங்க் விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு 24 மணிநேரமும் 7 நாள்களும் ஓய்வின்றி உழைத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் யெஸ் பேங்க் குறித்து பேசிய போது, ``யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளவேண்டாம். வங்கி மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவை வழங்கிட வேண்டும் என்று" கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு