Published:Updated:

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விதிமுறைகளை மாற்றிய RBI; நஷ்டத்தைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

Rupee
Rupee ( Photo by Ravi Roshan from Pexels )

வங்கி ஃபிக்சட் டெபாசிட் விதிமுறைகளில் ஏன் இந்த அதிரடி மாற்றம், இதற்கான காரணம் என்ன?

நீங்கள் வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ரிசர்வ் வங்கி ஃபிக்சட் டெபாசிட் பழைய விதிமுறைகளை மாற்றி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் முதிர்ச்சிக்குப் பிறகும், நீங்கள் அந்தத் தொகையை க்ளெய்ம் செய்யவில்லை என்றால், அதற்கு கிடைக்கும் வட்டி குறையும். இதுகுறித்து வெளியாகியிருக்கும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், ``ஃபிக்சட் டெபாசிட் ​​க்ளெய்ம் செய்யப்படாத கணக்குகள் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, வாடிக்கையாளர்களின் ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் தொகையின் மீதான வட்டி விகிதம் கணக்கிடப்படும்போது, அந்த நேரத்தில் அமலில் உள்ள சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான வைப்புத் தொகை மீதான வட்டி விகிதம் இரண்டில், எது குறைவாக இருக்கிறதோ, அந்த வட்டி விகிதம் கிடைக்கும்.

Savings
Savings

இந்தப் புதிய விதிகள், அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் வங்கிகள் என அனைத்துக்கும் பொருந்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஃபிக்சட் டெபாசிட் விதிமுறைகளில் ஏன் இந்த அதிரடி மாற்றம், இதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம். ``கடந்த 2019 - 2020-ம் நிதி ஆண்டில், க்ளெய்ம் செய்யப்படாத ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளில் உள்ள தொகையின் மதிப்பு 18,380 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 2018-19-ம் நிதி ஆண்டில் இது 14,307 கோடி ரூபாயாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு வருடமும், பல்வேறு காரணங்களால் க்ளெய்ம் செய்யப்படாத ஃபிக்சட் டெபாசிட் வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கையும், அதனால் அதிலுள்ள சேமிப்புத் தொகையின் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

ஒரு வாடிக்கையாளர், ஒரு குறிப்பிட்ட தொகையை 3 ஆண்டுகளுக்கு ஃபிக்சட் டெபாசிட் செய்கிறார். அந்த மூன்று ஆண்டுகளுக்கு 7% வட்டியை, சம்பந்தப்பட்ட வங்கி நிர்ணயம் செய்வதாகக் கொள்வோம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அதை க்ளெய்ம் செய்ய வேண்டும்; அல்லது புதுப்பிக்க வேண்டும். அப்படி அவர் செய்யாமல், தொடர்ந்து அதே ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் வைத்திருந்தால், முதிர்வு காலத்துக்குப் பிறகு, அந்த ஃபிக்சட் டெபாசிட் கணக்கை க்ளெய்ம் அல்லது புதுப்பிக்கும் வரை, அன்றைய தேதியில் ஃபிக்சட் டெபாசிட் கணக்குக்கு என்ன வட்டி விகிதம் இருக்கிறதோ அந்த வட்டியைத்தான் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டியிருக்கும்.

அல்லது ஃபிக்சட் டெபாசிட் போடும்போது, ரினிவல் செய்யாமல் விட வாய்ப்பிருப்பதை முன்பே குறிப்பிட்டு வங்கியும் வாடிக்கையாளரும் கான்ட்ராக்ட் போட்டிருக்கும் பட்சத்தில், அதில் சொல்லப்பட்டிருக்கும் வட்டியை வங்கி அந்த வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். உதாரணத்துக்கு, அந்த கான்ட்ராக்ட்டில் 5% எனக் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில், அந்த வட்டியை ரினிவல் செய்யப்படாத காலங்களுக்கு வங்கி வழங்கும்.

தற்போதைய புதிய விதிமுறைகளின்படி, ஃபிக்சட் டெபாசிட் வாடிக்கையாளர்கள் முதிர்வு காலத்துக்குள் ஃபிக்சட் டெப்பாசிட் கணக்கை வங்கிக்கு நேரில் வந்து கிளைம் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. க்ளெய்ம் செய்யாமல் அல்லது புதிப்பிக்காமல் விடும்போது அன்றைய தேதியில் வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் இந்த இரண்டில் எது குறைவோ அதைத்தான் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

Investment
Investment
கொரோனா காலத்திலும் கொடிகட்டிப் பறக்கும் வங்கித்துறை; பங்குகளில் முதலீடு செய்யலாமா?

பெரும்பாலான வாடிக்கையாளர்கள், தன் குடும்ப உறுப்பினர்கள், தெரிந்தவர்கள் எனப் பலருடைய பேரில் ஃபிக்சட் டெபாசிட் ஆரம்பித்து அதில் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆட்டோ ரெனிவல் ஆப்ஷனைப் பயன்படுத்தி, ஒவ்வொரு வருடமும் புதிப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், இனி அப்படிச் செய்ய முடியாது என்கிறபோது, ஆதார் மற்றும் பேன் லிங்க் செய்யப்படாத ஃபிக்சட் டெபாசிட் கணக்குகள் எவ்வளவு இருக்கிறதோ, அந்தக் கணக்குகளைப் புதுப்பிக்க முடியாத நிலை எதிர்காலத்தில் உருவாகலாம்.

வங்கி விடுமுறை நாள்களில், உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் முதிர்வுத் தேதி இருந்தால், வங்கியின் விடுமுறை நாள்களுக்குப் பிறகான, வேலை நாள்கள் வரை அன்றைய தேதியில் என்ன வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கிறதோ, அதை வங்கி வழங்கும். உதாரணத்துக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் எனத் தொடர்ந்து வங்கி விடுமுறைநாளாக இருந்து, அந்த விடுமுறை நாள்களில் ஏதாவது ஒரு நாள் உங்களுடைய முதிர்வு தேதியாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வரை நிலையான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை வங்கி வழங்கும். அதற்குப் பிறகும் நீங்கள் புதுப்பிக்காமலோ, க்ளெய்ம் செய்யாமலோ விட்டால் வட்டி விகிதம் குறையும்" என்றார் தெளிவாக.

Savings
Savings
தங்க நகை விற்பனை: அரசின் புதிய ஹால்மார்க் விதிகளை நகை வியாபாரிகள் எதிர்ப்பது ஏன்?

அதனால், உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் கணக்கின் முதிர்வுத் தேதி எது என்பதைக் குறித்து வைத்துக்கொண்டு, அந்தத் தேதிக்குள் அதை க்ளெய்ம் செய்யுங்கள் அல்லது புதுப்பித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான், குறைவான வட்டி விகிதம் கிடைக்கும் நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பீர்கள்!

அடுத்த கட்டுரைக்கு