Election bannerElection banner
Published:Updated:

`ஆட்டோ டெபிட்' விதிமுறை மாற்றம்... வங்கிகளுக்கு 6 மாதம் அவகாசம் அளித்த ஆர்.பி.ஐ... ஏன்?

ஆர்.பி.ஐ - ஆட்டோ டெபிட்
ஆர்.பி.ஐ - ஆட்டோ டெபிட்

ஆர்.பி.ஐ முதல் முறை விதிமுறைகளை சொன்னபோதே, அதை வங்கிகள் கடைப்பிடித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தியிருக்கக் கூடாது.

வாடிக்கையாளர்களின் கட்டணம் செலுத்தும் முறையை எளிமையாக்கும் பொருட்டு அவர்களின் அனுமதியுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவர்களின் வங்கிக் கணக்கு களிலிருந்து மாதம்தோறும் தவணைத் தொகையைப் பிடித்தம் செய்து வருகின்றன. இந்த முறை `ஆட்டோமேட்டிக் டெபிட்' என்றழைக்கப்படுகிறது. இந்த முறையில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த `ஆட்டோமேட்டிக் டெபிட்' முறையில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சாரக் கட்டணம், வாட்டர் போன்ற இதர பயன்பாட்டு பில்கள், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மாதிரியான ஓ.டி.டி இயங்குதள கட்டணங்கள் மற்றும் ஊடக சந்தா கட்டணங்கள் ஆகியவற்றை வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதாவது, நாளை முதல் இந்த ஆப்ஸன் மூலம் செலுத்த முடியாது எனச் சொல்லியிருந்தது ரிசர்வ் வங்கி. ஆனால், திடீரென இதற்கான கால வரையறையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

netflix stream fest
netflix stream fest

2019-ம் ஆண்டு, வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை முறைகளை நெறிப்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது ரிசர்வ் வங்கி. அதில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பேமென்ட்டுகளுக்கு வங்கிகள் அனைத்தும் `Additional Factor Authentication' அங்கீகாரத்தை 2021-ம் ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. ஆனால், வங்கிகளோ ஆர்.பி.ஐ-யின் அறிவிப்பை நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவந்தன.

இந்த நிலையில், தற்போது இதற்கான கால அவகாசத்தில் மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டித்திருக்கிறது ஆர்.பி.ஐ. இது குறித்து இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

``ஆர்.பி.ஐ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வரும் நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து, அதாவது ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து, `ஆட்டோ டெபிட்' செய்வதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக வாடிக்கையாளரின் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அந்த எஸ்.எம்.எஸ் மூலமாக, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை குறித்த விவரங்களை அவர்களுக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்ய வேண்டிய கட்டணத் தொகை 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) அனுப்ப வேண்டும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே பரிவர்த்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

Cards
Cards
Photo: Pixabay

ஆனால், இதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எந்தவொரு வங்கியும் இறங்கவில்லை என்பதாலும், இதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்புக்கு இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுவதாலும், மீண்டும் ஆறு மாதங்கள் வரை கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது ஆர்.பி.ஐ.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறை மாற்றத்தின்படி, வரும் நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து மாதம்தோறும் வங்கிக் கணக்குகளில் இருந்து பிடித்தம் செய்யப்படும் `ஆட்டோ பேமென்ட்டுகள்', தற்போது மூன்றாவது முறையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்துக்குப் பிறகு முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகும் வங்கிகள் இதை நடைமுறைபடுத்துவதில் காலதாமதம் செய்தால், நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் என்றும் ஆர்.பி.ஐ தரப்பில் சொல்லப்படுவதாக" தெரிவித்தனர்.

``பொதுவாக, நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியான வலைதளங்கள் `சப்ஸ்கிரிப்ஷன்’ மெத்தெடுகளில் இயங்கக்கூடியவை. `ஆட்டோ டெபிட்' ஆப்ஸன்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இடை நிறுத்தமில்லா சேவையை இது மாதிரியான வலைதளங்கள் வழங்கி வருகின்றன. இனி இந்த ஆப்ஸன்கள் இல்லாமல் போகும் போது, ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் அந்தந்த வலைதளங்களுக்கு வந்து, கார்டு விவரங்களை முழுமையாக உள்ளிட்டு, அந்த வலைதளங்கள் வழங்கும் சேவைகளைப் பெற வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.

ஶ்ரீராம்
ஶ்ரீராம்

அதனால் ஆர்.பி.ஐ சொல்வதுபோல, வங்கிகள் இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும்பட்சத்தில், `சப்ஸ்கிரிப்ஷன்’ சார்ந்த வலைதளங்களின் பிசினஸ் பாதிப்புக்கு உள்ளாகும். வாடிக்கையாளர்களும் நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க வங்கிகள் அதற்கு ஏற்றாற்போல தொழில்நுட்ப கட்டமைப்புகளை உருவாக்குவது நல்லது" என்றார் பிரம்ஃபோர்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் டெக்னிக்கல் டைரக்டர் ஶ்ரீராம்.

பேமென்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) அமைப்பின் தலைவரான விஸ்வாஸ் படேல், ஆட்டோ டெபிட் விதிமுறைகள் குறித்து பேசியபோது, ``ஆர்.பி.ஐ முதல் முறை விதிமுறைகளை சொன்னபோதே, அதை வங்கிகள் கடைபிடித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தியிருக்கக் கூடாது. இரண்டாவது முறை அறிக்கை வெளியானதிலிருந்து, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக வங்கிகள் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. ஆர்.பி.ஐ சொல்வதில் வங்கிக்கும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடையே சுமூகமான பணப் பரிவர்த்தனையும், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை வழிமுறைகளுமே இருக்கின்றன.

விஸ்வாஸ் படேல்
விஸ்வாஸ் படேல்

மாதம் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை, இந்த மாதிரியான பணப் பரிவர்த்தனையை நம்பி நடந்து கொண்டிருப்பதால், வங்கிகள் இதைக் கருத்தில் கொண்டு சீக்கிரமாக இதற்கான மாற்று ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களும், இத்துறை சார்ந்த நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற நாட்டின் முன்னணி வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை நடைமுறைப்படுத்த இயலாது என திட்டவட்டமாக கூறியிருக்கின்றன. மேலும், இந்த வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆணையை குறிப்பிட்டு, மாற்றுக் கட்டண முறைகளைப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளன. எனவே, இதுகுறித்து வரும் நாள்களில் வங்கிகள் தரப்பு, ரிசர்வ் வங்கியிடம் பேசித் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு