தங்கத்தின் மீது யாருக்குத்தான் ஆசையில்லை. இப்போது ஃபிசிக்கல் தங்கத்தை விடவும் பேப்பர் தங்கத்தின் மீதும் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. காரணம் அதில் கிடைக்கும் லாபம். பிசிக்கல் தங்கம் முதலீடாகக் கருத முடியாது என்றாலும் அவசர/ ஆபத்து காலங்களில் உதவக் கூடியதாக இன்றும் இருக்கிறது.
ஆனால் தங்கப் பத்திரம் சிறப்பான பாதுகாப்பான முதலீடாக இருந்துவருகிறது. அதேசமயம் பிசிக்கல் தங்கத்தில் செலவாகும் செய்கூலி, சேதாரம் போன்றவை இதில் இல்லை. நல்ல வட்டி வருமானமும் உண்டு. இதனால் முதலீட்டாளர்களிடையே இது நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. எனவே, தொடர்ச்சியாக தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த தங்கப் பத்திரங்களை இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இவை எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் உடையவாக இருக்கின்றன. ஆனால் அதேசமயம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற விருப்பமுள்ளவர்கள் தங்கப் பத்திரத்தைத் திரும்பி வழங்கிவிட்டு முதலீட்டை எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதியையும் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
அதன்படி 2016 ஜனவரியில் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே முடித்துக்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்கூட்டியே வெளியேறும் ஒரு யூனிட் பத்திரத்துக்கான விலை ரூ.4,813 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலை 2022 ஜனவரி 31-பிப்ரவரி 04 வாரத்தின் நிறைவு விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்திரங்கள் ஜனவரி 2016-ல் ரூ.2600 என்ற விலைக்கு வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது 85 சதவிகித ப்ரீமியம் விலையில் இந்தப் பத்திரங்கள் திரும்பப் பெறப்பட உள்ளன.

இதன்மூலம் முன்கூட்டியே வெளியேற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு 85 சதவிகித லாபம் கிடைக்க உள்ளது. அதேசமயம் முன்கூட்டியே வெளியேறுவதால் இதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள் வரை அப்படியே வைத்திருந்தால் மூலதன ஆதாய வரி இல்லை.
இந்தத் தங்கப் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை. ஆனால் வருமான வரி கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.