Published:Updated:

`இஎம்ஐ கட்டுவது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது!’ -ஆர்பிஐ ஆளுநர் தகவல்

 ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ்
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ்

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அதேபோல் ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அரசு அறிவித்துள்ள 21நாள் ஊரடங்கு உத்தரவு மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது. நாட்டில் பலர் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர். இதன்காரணமாக தொழில்துறை கடுமையாகப் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. அடுத்தமாத வாடகை, வீடு செலவுக்கான பணம், வங்கிக்கடனுக்கான இஎம்ஐ என இப்போதே பலருக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. கார் லோன், டூவீலருக்கான இஎம்ஐ, வீடுகளுக்கான இஎம்ஐ எனப் பலர் கைகளைப் பிசைய ஆரம்பித்துவிட்டார்கள். தேடித்தேடி வந்து கடன் கொடுத்த தனியார் வங்கிகள் கடனை எப்படி வசூலிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவுகள் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் எனத் தெரியாததால் மக்கள் கவலையில் இருந்தனர்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்துள்ளார். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அதேபோல் ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் குறையும்போதும் தொழிற்துறையில் சுணக்கம் ஏற்படும் போது ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கியானது குறைக்கும். அந்த நடவடிக்கையைத்தான் தற்போது எடுத்துள்ளது.

இதன்மூலம் ஏற்கெனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கலாம். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

வங்கி
வங்கி

அதேபோல் ஆளுநரின் அறிவிப்பில், மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்டத்தேவையில்லை. கடன் வசூலை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 2020, மார்ச் 1-ம் தேதியிலிருந்து அனைத்துக் கால கடன்களுக்கும் தவணைகளைச் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் அனுமதிக்கப்படுகிறது. அதாவது மார்ச், ஏப்ரல்,மே மாதங்களுக்கான இஎம்ஐ கட்டத்தேவையில்லை. தள்ளுபடி அளிக்கப்படவில்லை. கடன் செலுத்துவது தள்ளிவைக்கப்படுகிறது. வங்கி நிறுவனங்கள் கூறும் காலத்தில் இந்த இஎம்ஐ-களை செலுத்த வேண்டும். இதனால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியவர் ‘கோவிட் -19 காரணமாக உலக நாடுகள் பூட்டப்பட்டுள்ளன. இந்தத் தொற்று நோயின் பரவல் காரணமாக உலகின் பெரும் பகுதி பொருளாதார மந்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. கோவிட் -19 தாக்கம் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற மற்றும் எதிர்மறையான நிலை நிலவுகிறது. பல நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன. பல நாடுகள் மூடப்பட்டுள்ளன.

ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ்
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ்

இந்தியா லாக்டவுனில் உள்ளது. இதன்காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பங்குச்சந்தைகள் கடுமையான அழுத்ததில் உள்ளன. பொருளாதாரத்தில் உயிர்நாடியே நிதிதான். இந்திய வங்கி முறை பாதுகாப்பானது மற்றும் சிறந்தது. கொரோனாவினால் இந்தியப் பங்குச்சந்தைகளில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு