வங்கிகளின் குறுங்கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தி உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்தி வரும் ரிசர்வ் வங்கி, இந்த முறையும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள், இன்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், இன்னமும் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை என்பதால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க, வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

இன்னும் 12 மாதங்களுக்கு பணவீக்கம் ஒரு பிரச்னையாகவே இருக்கும் என்று கூறிய அவர், பணவிக்கம் 4 சதவிகிதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்றார். தற்போது நுகர்வோர் பணவீக்கம் 6.7 சதவிகிதமாக உள்ளது. மேலும் 2023 நிதி ஆண்டுக்கான இந்திய ஜி.டி.பி. கணிப்பையும் 7 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாகக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த முறை வட்டி விகித உயர்வு இருக்குமா இருக்காதா என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. இந்நிலையில் 5.9 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை, 0.35 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாக உள்ளது.

இந்த வட்டி விகித உயர்வினால், வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டியும் உயரும். இதனால் வீட்டுக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாதாந்திர இ.எம்.ஐ அதிகரிக்கும். தொடர் வட்டி விகித உயர்வு, கடன் வாங்கியோரை மேலும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.