அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவிகிதத்தை உயர்த்தி வருகின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. ஏற்கெனவே இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், சமீபத்தில் மீண்டும் 75 புள்ளிகள் உயர்த்தியது. இதையடுத்து ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எதிர்பார்த்தபடியே ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிதிக் கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி 0.50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் பணவீக்கத்தின் நிலை குறித்தும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிவிப்புகள் வெளியாயின. அரசின் 10 ஆண்டுக் கால பத்திரங்களின் வருவாய் 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.25 சதவிகிதமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். மேலும், பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பணப்புழக்கத்தை மேலும் குறைப்பது அவசியம். இதனால் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக கூறினார்.
இந்த 0.50 சதவிகிதம் உயர்வுக்கு தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவிகிதமாக உள்ளது. மேலும் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 7.2 சதவிகிதமாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அக்டோபர்-டிசம்பர் காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.4 சதவிகிதமாகவும், ஜனவரி-மார்ச் காலத்தில் இது 5.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதும் வங்கிகள் தாங்கள் வழங்கும் வீட்டுக் கடன், அடமானக் கடன், வாகனக் கடன் போன்றவற்றின் வட்டிகளை உயர்த்தின. இந்நிலையில், மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.