நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரிசர்வ் வங்கி சந்திக்கும் முப்பரிமாண சவால்கள்... என்னதான் தீர்வு? திரிசங்கு சிக்கலில் பொருளாதாரம்

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதாரம்

E C O N O M Y

இந்தியாவைத் தற்போது கடுமையாகத் தாக்கிவரும் கொரோனா பெருந்தொற்று, கடந்த நூற்றாண்டு காணாத சோகமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டைப் போல, கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய பொதுமுடக்கம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், பெரும்பான்மை மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குகள் அமல்படுத்தப் பட்டுள்ளன.

உலகின் பெரிய பொருளாதாரங் களில் மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்த நாடு எனக் கெட்ட பெயரை கடந்த ஆண்டில் (2020-21) பெற்ற நம் நாடு, நடப்பு நிதியாண்டில் (2021-22) ‘V’ வடிவ பொருளாதார மீட்சி பெறும் என்ற முந்தைய நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள், நமது பொருளாதார மீட்சி குறித்து கடுமை யான கருத்துகளை முன்வைத்த போதும்கூட, முக்கிய நிதி சந்தைகளில் அசாதாரண அமைதி நிலவி வருகிறது.

உதாரணமாக, உள்நாட்டில் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்த போதிலும்கூட, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 என்ற வரம்புக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது.

ரிசர்வ் வங்கி சந்திக்கும் முப்பரிமாண சவால்கள்... என்னதான் தீர்வு? திரிசங்கு சிக்கலில் பொருளாதாரம்

நடப்பு நிதியாண்டுகான பட்ஜெட்டின்படி, 2021-22-ல் மத்திய அரசு வாங்க உத்தேசித்துள்ள கடன் அளவு கிட்டத்தட்ட ரூ.12,00,000 கோடியாக இருந்தபோதிலும்கூட மத்திய அரசின் பத்தாண்டு கடன் பத்திர வட்டி விகிதம் 6 சதவிகிதம் அருகிலேயே நகர்ந்து வருகிறது.

மேலைநாட்டு மத்திய வங்கிகளின் அதீத பணப் புழக்கம் மற்றும் குறைந்த வட்டி விகிதக் கொள்கைகள் இந்திய நிதிச் சந்தைகளுக்குப் பெருமளவில் சாதகமாக உள்ளன என்றாலும், நமது நிதிச் சந்தைகளில், குறிப்பாக, அந்நிய செலாவணி மற்றும் கடன் பத்திர சந்தைகளில் ரிசர்வ் வங்கியின் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆர்.பி.ஐ-யின் முப்பரிமாண சிக்கல்...

ஒரு நாட்டின் தனித்துவமான வட்டிக் கொள்கை (Independent Monetary Policy), அந்நியச் செலாவணி மாற்று வீதத்தின் ஸ்திரத்தன்மை (Stability of Foreign Exchange) மற்றும் கட்டுப்பாடற்ற மூலதன ஓட்டம் (Free flow of Capital) ஆகியவற்றை ஒருங்கே பராமரிப்பது சவாலான ஒன்று என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லாதபோது, அந்நிய செலாவணிச் சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்நியச் செலாவணிச் சந்தையில் ஸ்திரத் தன்மை நிலவ வேண்டு மென்று மத்திய வங்கி விரும்பும் பட்சத்தில், கட்டுப்பாடற்ற மூலதன ஓட்டத்தை அனுமதிக்க முடியாது.

அதேபோல, உள்நாட்டுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது, மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைவாகப் பராமரிக்க முயற்சி செய்தால் அந்நிய முதலீடுகள் வெளியேறும் வாய்ப்புள்ளதுடன், அந்நிய செலாவணிச் சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும் அபாயமும் உள்ளது.

இந்தியாவின் நிலை...

இந்தியாவைப் பொறுத்தவரை, அந்நிய முதலீடுகள் விவகாரத்தில் கடந்த பல வருடங்களாக ஏராள மான தளர்வுகள் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தாலும்கூட, அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப் பாட்டு வளையத்துக்கு உட்பட்டே பெரும்பாலான முதலீடுகள் செய்யப்படுகின்றன.

அந்நிய செலாவணிச் சந்தை யிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான். கொள்கை வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, நுகர்வோர் பணவீக்கத்துக்கு ஏற்றாற்போல வட்டி விகிதங் களை மாற்றி அமைக்க ரிசர்வ் வங்கிக்கு சட்டபூர்வமாக அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.

சந்தை சீர்திருத்தங்களின் அவசியம்...

கடந்த ஆண்டில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்ட காலத்திலிருந்து, இந்தியாவில் பணவீக்கம் வெகுவாக உயர்ந்து வருகிறது. சிறிய இடைவெளியைத் தவிர்த்து, மீதமுள்ள கால கட்டத்தில் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ள உச்ச வரம்பை (6%) விட அதிகமாகவே நுகர்வோர் பணவீக்கம் இருந்து வந்துள்ளது.

ஆனால், குறைந்த வட்டிக் கொள்கையையே பராமரிக்க விரும்பும் ரிசர்வ் வங்கி, கடன் பத்திரச் சந்தையில் நேரடியாகத் தலையிட்டு, வட்டி விகிதங்கள் உயராமல் தடுத்து நிறுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ளன. உதாரணமாக, கடும் நிதிப் பற்றாக்குறையில் தவித்துவரும் மத்திய அரசுக்கு உதவிடும் வகையில், 2021-22-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.1,00,000 லட்சம் கோடி அளவுக்கு அரசுக் கடன் பத்திரங் களைக் கடன் சந்தையிலிருந்து ரிசர்வ் வங்கி நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டு உள்ளது.

மேலும், கடந்த 16.04.2021 அன்று நடைபெற்ற ரூ.14,000 கோடி மதிப்பிலான ஏலத்தை, விருப்ப வட்டி விகிதம் ஏதும் குறிப்பிடப்படாமல் ரிசர்வ் வங்கியால் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், கடன் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகப்படி யான வட்டி விகிதத்தைக் கோரும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி கடன் பத்திர ஏலத்தையே ரத்து செய்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மட்டும், ரிசர்வ் வங்கி சுமார் 72 பில்லியன் டாலர்களை நாணய சந்தையில் இருந்து வாங்கவும் சுமார் 27 பில்லியன் டாலர் களை விற்கவும் செய்துள்ளது. ரூபாய் வர்த்தகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி மிக அதிகப்படியாக தலையிடுகிறது என்று அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. நிதிச் சந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் ஒழுங்குபடுத்துவதும் ரிசர்வ் வங்கியின் முக்கியக் கடமைகள் ஆகும். அதே சமயம், உள்ளூர் மற்றும் உலக முதலீட்டாளர்கள் திருப்தியடையும் வகையில், தனது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதும் மத்திய அரசின் தனிப் பொறுப்புக்களாகும்.

ரிசர்வ் வங்கி சந்தை தொடர்பான செயல்பாடுகளில் நேரடியாகத் தலையிடு வதைக் குறைத்துக்கொண்டு, காலப் போக்கில் வட்டி விகிதங்கள் மற்றும் நாணய மாற்று விகிதங்களை நிதிச் சந்தைகளே நிர்ணயிக்கும் வகையில் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது நீண்ட கால நோக்கில் நன்மை பயக்கும் என்பதே இன்றைக்குப் பெரும்பான்மையான பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது!

ரிசர்வ் வங்கி சந்திக்கும் முப்பரிமாண சவால்கள்... என்னதான் தீர்வு? திரிசங்கு சிக்கலில் பொருளாதாரம்

11 ஆண்டு உச்சத்தில் மொத்த விலைப் பணவீக்கம்!

கடந்த ஏப்ரல் 2021 மாதத்துக்கான மொத்த விலை குறியீடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.49% அளவுக்கு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டிலும் பிரதிபலித்தது. சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் கடுமையான விலை உயர்வும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத தற்போதைய பணவீக்க அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக கருதப்படுகின்றன.

தற்போதைய மொத்த பணவீக்க அதிகரிப்பு, அடுத்து வரும் மாதங்களில் நுகர்வோர் விலைவாசியிலும் பிரதிபலிக்கலாம் என்ற கவலையும் தற்போது எழுந்துள்ளது. இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்படுவர்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையைப் போக்குவதற்காக உலகெங்கிலும், குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பொதுப் புழக்கத்தில் விடப்படும் ஏராளமான பணத்தின் காரணமாக, இரும்பு, செம்பு, கச்சா எண்ணெய் போன்ற பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், இந்தியா போன்றதொரு வளரும் நாட்டுக்குக் கவலை தரும் விஷயமாகும்.

நிதிப் பற்றாக்குறையால் ஏற்கெனவே தவித்துவரும் மத்திய அரசும், மத்திய அரசின் பணப் பற்றாக்குறையைத் தீர்க்க தன்னால் முடிந்தவரை உதவி செய்துவரும் ரிசர்வ் வங்கியும் சாமான்ய மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கடும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.