Published:Updated:

உயரும் வட்டி... யாருக்கு என்ன பாதிப்பு?

வட்டி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
வட்டி உயர்வு

வட்டி உயர்வு

உயரும் வட்டி... யாருக்கு என்ன பாதிப்பு?

வட்டி உயர்வு

Published:Updated:
வட்டி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
வட்டி உயர்வு

ஏறக்குறைய 45 மாதங்களுக்குப் பிறகு அதாவது 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு வட்டி விகித்தை இப்போது உயர்த்தி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. 2020 மே மாதத்துக்கு பின் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் 4% என்கிற நிலையிலேயே இருந்தது. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. கொரோனா காலத்தில் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்க பணப்புழக்கம் அவசியமாக இருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் உயர்ந்து, எல்லா பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலையைக் கணிசமாக அதிகரிக்கச் செய்ததால், மக்கள் படாதபாடுபடத் தொடங்கினர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவது தவிர வேறு வழி யில்லை எனப் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருதிய நிலையில், ஆர்.பி.ஐ.யும் அவசரமாக நிதிக் கொள்கை கூட்டம் கூட்டி, ரெப்போ வட்டியை உயர்த்தி இருக்கிறது.

இந்த வட்டி விகித உயர்வினால் யாருக்கு என்ன பாதிப்பு என நிதி ஆலோசகரும், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணருமான சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

உயரும் வட்டி... யாருக்கு என்ன பாதிப்பு?

“பணவீக்கம் ரிசர்வ் வங்கி நினைத்ததை விடவும் அதிகமாகி வருவது, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வுக்கு இன்னொரு காரணம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தியதால், இந்திய ரூபாய் மதிப்பு பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க வேண்டும் என்பதால்தான்.

இந்த வட்டி விகித உயர்வுக்குப் பிறகு வங்கி கள், நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால், நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால், வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உடனே உயர்த்திவிடும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு வங்கியும், நிதி நிறுவனங்களும் தங்களுடைய கடன் பிரிவு களின் தேவையைப் பொறுத்தே வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை எடுக்கும். குறிப்பாக, ஏற்கெனவே வட்டி அதிகமாக உள்ள ‘காஸ்ட்லி கடன்கள்’ மீதான வட்டியை மேலும் உயர்த்தும் வாய்ப்பு குறைவுதான். வட்டி குறைவாக உள்ள ‘மலிவான கடன்கள்’ மீதான வட்டிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

அதாவது, 15-18% வட்டியில் உள்ள தனிநபர் கடன்கள் மீது வட்டி உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை. அதேபோல், 8 சதவிகிதத்துக்குமேல் உள்ள வீட்டுக் கடன்கள் மீதான வட்டியும் பெருமளவு உயர வாய்ப்பில்லை. 6% என்னும் அளவில் உள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டி மட்டும் சற்று உயர வாய்ப்புள்ளது. கார் கடன்களிலும் வட்டி அதிகமாக உள்ள கடன்களில் மாற்றம் இருக்காது.

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்

ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு வரும் மே 21-ம் தேதி அமல்படுத்தப்படும் என்றாலும், வங்கிகள் தங்களுடைய வட்டி விகித உயர்வு அறிவிப்பை வெளியிட குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். நாட்டின் பெரிய வங்கிகள் என்று சொல்லப்படும் எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் போன்றவை முதலில் தங்களுடைய வட்டி விகித நிலைப் பாட்டை அறிவிக்கும். அதன்பிறகே பிற வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடும். எனவே, இப்போதே பதற்றப்படத் தேவையில்லை புதிதாகக் கடன் வாங்க இருப்பவர்கள் கொஞ்சம் காத்திருக்கலாம். வங்கிகளின் புதிய வட்டி விகித அறிவிப்புகளுக்குப் பிறகு கடன் வாங்கும் முடிவுகளை எடுக்கலாம்.

அதே சமயம், எல்லா வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான வட்டி விகித உயர்வுகளைச் செய்யாது. ஒவ்வொரு வங்கியின் வட்டி விகித செயல்பாடுகளும் மாறும்.

ஃப்ளோட்டிட் ரேட் என்கிற மாறும் வட்டி விகிதத்தில் இருப்பவர்களுக்கான கடன்களில் வட்டி விகித உயர்வு எதிரொலிக்கும். நிலையான வட்டி விகிதத்தில் உள்ளவர் களுக்குப் பாதிப்பில்லை.

முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இது கடைசி வட்டி விகித உயர்வு அல்ல. அடுத்தடுத்து தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்படும் சாத்தியங்கள் அதிகம். அப்படி தொடர்ந்து வட்டி உயர்த்தப் பட்டால், அது பெரிய பாதிப்பை எல்லாருக்கும் தரும்.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வினால் பாசிட்டிவ் பலன்களும் உண்டு. அதாவது, டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்புள்ளது.குறிப்பாக முதலீடு, சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளது. வட்டியை நம்பி யிருக்கும் மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், பி.பி.எஃப், பாண்டுகள், செல்வமகள் திட்டம் போன்ற அரசு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

குறுகிய காலத்தில் கடன் ஃபண்டுகள் இதனால் வளர்ச்சி அடைந்து, லாபம் தரும். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் குறுகிய காலத்தில் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது” என்றார்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

அமெரிக்க ஃபெடரல் வட்டி உயர்வு..!

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் தொடர் பணவீக்க உயர்வு காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. நீண்ட காலமாகவே குறைவாக அதாவது, 0.25 சதவிகிதமாக இருந்துவந்த வட்டி விகிதத்தை கடந்த ஏப்ரலில் மேலும் 0.25% உயர்த்தியது. தற்போது மீண்டும் 0.50% உயர்த்தியதால் ஃபெடரல் வட்டி விகிதம் 1 சதவிகிதமாக உள்ளது.

அமெரிக்காவில் 2000-க்குப்பிறகு பெரிய அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்காவில் அடமானக் கடன்கள் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அடுத்துவரும் மாதங்களில் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism