Election bannerElection banner
Published:Updated:

`ரெப்போ வட்டி வகிதத்தில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ' - வீடு மற்றும் வாகனக் கடன்களின் வட்டி குறையாது!

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம்

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய இந்தியப் பொருளாதாரம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. ஏனெனில், மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான பட்ஜெட் 2021 அறிக்கையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்படுத்தற்கான பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதற்கிடையில் இன்று நடந்த ஆர்.பி.ஐ கூட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கம்போல, ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும்.

சக்தி காந்த தாஸ்
சக்தி காந்த தாஸ்

மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தைக் களைவதற்காகவும் சக்திகாந்த தாஸ் கவர்னரான குறுகிய காலத்தில், கடந்த 2019-ம் ஆண்டில் மட்டுமே ஐந்து முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்திருந்தார்.

அதே போல, கொரோனா ஊரடங்கில் மக்களும், இந்திய பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயிருந்தபோது 2019-ம் ஆண்டில் ஐந்து முறை குறைத்ததில், 50 சதவிகிதத்தைக் கடந்த மார்ச் 27-ம் தேதி ஒரே முறையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதாவது, அன்றைய தினம் 5.15 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாகக் குறைத்தது. அதன்பிறகு, மே மாதத்திலும் 0.40 புள்ளிகளை மேலும் ரிசர்வ் வங்கி குறைத்தது. நடந்த டிசம்பர் மாதக் கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை. இன்று நடந்த கூட்டத்திலும் குறைக்கவில்லை.

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம்

மேலும், வருகிற 2021-2022-ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 5.2 - 5 சதவிகிதமாக இருக்கலாம் என்றும், நடப்பு நிதி ஆண்டில் இந்த விகிதம் 5.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆர்.பி.ஐ கணித்துள்ளது. அதே போல, வருகிற 2021- 2022-ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) விகிதம் 10.5 சதவிகிதமாக வளர்ச்சி காணும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு