Election bannerElection banner
Published:Updated:

லாக்டௌனுக்குப் பிறகு கடன் வாங்கி அதிக அளவில் செலவழிக்கும் மக்கள்... உஷாரய்யா உஷாரு!

செலவு
செலவு

லாக்டௌனுக்குப் பிறகு, நமது மக்கள் கடன் வாங்கி அதிக அளவில் செலவழிப்பதால், நிதி சார்ந்த திட்டங்களில் சேமிப்பு விகிதம் குறைந்து, கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது!

லாக்டௌனுக்குப் பிறகு, நமது மக்கள் கடன் வாங்கி அதிக அளவில் செலவழிப்பதால், நிதி சார்ந்த திட்டங்களில் சேமிப்பு விகிதம் குறைந்து, கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது!

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் நமது மக்கள் நிதி சார்ந்த திட்டங்களில் செய்துள்ள சேமிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. நிதி சார்ந்த திட்டங்கள் எனில், வங்கி வைப்பு நிதி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷுரன்ஸ் எனப் பல்வேறு திட்டங்களில் மக்கள் செய்யும் சேமிப்பைக் குறிக்கும். இந்த சேமிப்பானது நமது மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) குறைந்துகொண்டே வருகிறது.

சேமிப்பு
சேமிப்பு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜூன் மாதம் வரை ஊரடங்கு முழு அளவில் செயல்பட்டதால், மக்கள் செலவு செய்ய வழியில்லாமல் சேமிப்பை அதிகப்படுத்தினர். கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிதி சார்ந்த திட்டங்களில் மக்கள் செய்த சேமிப்பு 21% என்கிற அளவில் அதிகரித்தது. ஆனால், இரண்டாம் காலாண்டில் இது 10.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. ஊரடங்குக் காலத்துக்குப் பிறகு மக்கள் எக்கச்சக்கமாக செலவழிக்கத் தொடங்கியதே நிதி சார்ந்த திட்டங்களில் சேமிப்பு குறைந்ததுக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், நம் நாட்டில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளிலும் இதே போல நிதி சார்ந்த திட்டங்களில் சேமிக்கப்படுவது குறைந்துள்ளது.

சேமிப்பு குறைந்துவருவது பெரிய அபாயம் என்றால், நம்முடைய மக்கள் எக்கச்சக்கமாகக் கடன் வாங்கத் தொடங்கியிருப்பதும் இன்னொரு பெரிய அபாயமாகும். 2018-19 நிதி ஆண்டில் நமது ஜி.டி.பி-யில் 31.4% என்கிற அளவில் கடன் வாங்கியிருந்தனர் நம் மக்கள். இது 2020-21-ம் காலாண்டில் 37.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமும், சிறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் எக்கச்சக்கமாகக் கடன் வாங்கி செலவழித்து வருகிறார்கள்.

ஏ.டி.எம்
ஏ.டி.எம்

ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த அறிக்கையில் தெரியவந்திருக்கும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ஊரடங்கு காலத்தில் மக்கள் பணத்தை ரொக்கமாகக் கையில் வைத்திருந்தனர். எந்த நேரத்திலும் செலவழிக்கப் பணம் தேவைப்படும். பணம் தேவைப்படும்போது ஏ.டி.எம், வங்கி எனத் தேடி அலைய முடியாது. எனவே, பீரோவிலேயே இருக்கட்டும் என்று பலரும் வைத்திருந்தனர். ஆனால், இரண்டாம் காலாண்டில் மக்கள் ரொக்கமாகப் பணத்தைக் கையில் வைத்திருப்பதைவிட, வங்கிகளில் இருப்பதே பத்திரம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் வங்கி வைப்பு நிதிகளில் டெபாசிட் செய்வது கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக, வங்கி வைப்பு நிதிகளில் டெபாசிட் ஆகியிருக்கும் பணம் ரூ.138 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

மக்களே, கொரோனா இரண்டாவது அலை என்கிற பேச்சு மீண்டும் எழுந்திருக்கிறது. மீண்டும் ஊரடங்கு வருமா என்கிற கேள்வி, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது. எனவே, கடன் வாங்கி செலவு செய்வதை விட்டுவிட்டு, சிக்கனமாகச் செலவு செய்து சேமிப்பது நல்லது! இதுதான் ரிசர்வ் வங்கி அறிக்கை நமக்கு சொல்லாமல் சொல்கிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு