Published:Updated:

Sovereign Gold Bond: இன்று தொடங்கிய தங்க கடன் பத்திர விற்பனை... வாங்குவது எப்படி?

தங்கம்
தங்கம்

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற முதலீடாக தங்க கடன் பத்திரம் (Sovereign Gold Bond) இருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, இன்று (மே 17, 2021) திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற முதலீடாக தங்க கடன் பத்திரம் (Sovereign Gold Bond) இருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல்கட்ட தங்கப் பத்திர வெளியீடு, இன்று (மே 17, 2021) திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதில், ஐந்து நாள்கள் அதாவது மே 21 வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்தவர்களுக்கு மே 25-ம் தேதி பத்திரம் வழங்கப்படும்.

இதில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறைந்தபட்ச அளவாக, ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ. 4,777 (24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை) இருந்தால் போதும். இதில் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

தங்க கடன் பத்திர முதலீடு...
தங்க கடன் பத்திர முதலீடு...

ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) தனிநபர் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் உங்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம்

ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமாக கிடைக்கும். இந்த வட்டி ஆறு மாதத்துகு ஒரு முறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ), தேசியப் பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்தப் பத்திரங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்த கோல்டு பாண்டுகள் மீது வர்த்தகம் நடக்கிறது. இதனால், பணத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும். முதலீட்டை 8 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.

ஐந்தாண்டுகள்`லாக்இன்' காலம் இருக்கிறது. இது கடந்த பிறகு, பணம் தேவைப்படும் பட்சத்தில் எப்போது வேண்டுமானலும் விற்று பணமாக்கிக்கொள்ள முடியும். எட்டு ஆண்டுகள் கழித்து பத்திர முதிர்வின்போது எடுத்தால் மூலதன ஆதாய வரி (கேப்பிடல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

தங்கம்
தங்கம்

ஆன்லைன் முதலீட்டில் விலை தள்ளுபடி

ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது கிராம் ஒன்றுக்கு விலையில் ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். ஆன்லைன் மூலம் இந்த கோல்டு பாண்டை வாங்க டீமேட் என்கிற மின்னணு கணக்கு தேவை.

கடன் வாங்கும்போது அதற்கு ஜாமீனாக இந்தத் தங்க கடன் பத்திரங்களைக் கொடுக்கலாம்.

இந்தத் தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின்போது தங்கமாக தர மாட்டார்கள். தங்க நகையாக வாங்கும்போது உள்ள கொடுக்கும் செய்கூலி, சேதாரம் இதில் இல்லை. முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாகத் தருவார்கள். அதைக் கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்

அடுத்த கட்டுரைக்கு