நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நம் ஜி.டி.பி வளர்ந்திருப்பது எந்தளவுக்கு உண்மை..?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 8.4% அதிகமாக இருக் கிறது. வல்லரசு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும்கூட நாம் கண்டுள்ள இந்த வளர்ச்சியில் பாதி அளவுக்கு மட்டுமே எட்டியுள்ளது என்பதைப் பார்த்து, நம் மக்களில் பலரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால், ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்களை உன்னிப்பாகப் பார்த்தால், நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.

முதலில், கடந்த காலாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. காரணம், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கோவிட் ஊரடங்கால் நம் பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. அப்போதிருந்த குறைந்த வளர்ச்சியுடன் (low base) இப்போதைய வளர்ச்சியை ஒப்பிட்டால், இப்போது நாம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுவிட்டது போலவே தோன்றும்.

ஆனால், கடந்த ஆண்டுக்குக்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் நமது பொருளாதாரம் இயல்பான வளர்ச்சியில் இருந்தது. அந்த வளர்ச்சியுடன் இப்போது உள்ள வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால், நம் ஜி.டி.பி வளர்ச்சி வெறும் 0.3% என்கிற அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது தெரியும். அதாவது, கோவிட்டுக்கு முன்பிருந்த வளர்ச்சியைத்தான் நாம் இப்போது எட்டியிருக் கிறோம். அதையும் தாண்டிய வளர்ச்சி என்பது இனிமேல்தான் வர வேண்டும்.

தனிமனிதர்கள் செலவழிப்பது கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 3.5% குறைவாகவே இருக்கிறது. கோவிட் பாதிப்பால், மக்களின் வருமானம் கணிசமாகக் குறைந்திருப்பதும், அத்தியாவசியமான பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகமாக இருப்பதுமே இதற்கு முக்கியமான காரணம்.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, ‘‘இந்த நிதி ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்க வாய்ப்புண்டு்’’ என்கிறார் மத்திய அரசின் பொருளாதார முதன்மை ஆலோசகர் சுப்பிரமணியன் கிருஷ்ணமூர்த்தி. அவர் சொல்வது மாதிரியான புள்ளிவிவரம் வந்தால்கூட ஆச்சர்யம் இல்லை. ஆனால், அந்த வளர்ச்சியானது கோவிட்டுக்கு முன்பிருந்த வளர்ச்சியைவிட எவ்வளவு அதிகம் என்பதை நாம் கணக்கிட்டுப் புரிந்துகொண்டால்தான், உண்மையில் நாம் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறோம் என்பதை நம்மால் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

இது மாதிரியான புள்ளிவிவரங்களைப் பார்த்து, மத்திய அரசாங்கம் பெருமைபடத் தேவையில்லை. மக்களின் வருமானத்தைப் பெருக்கி, அவர் களின் அனைத்துத் தேவைகளை நிறைவேறும் அளவுக்கான பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க் கிறார்களே ஒழிய, ஆச்சர்யம் தரும் ‘நம்பர்’களை அல்ல; இது மாதிரி ‘நம்பர்’ களை வைத்து நீண்ட காலம் ஏமாற்ற முடியாது என்பதை மத்திய அரசாங்கம் உணர வேண்டும்!

- ஆசிரியர்