Published:Updated:

`சர்வதேச சந்தையில் 17% வரை அதிகரித்த தங்கத்தின் விலை!’ - கிடுகிடு உயர்வுக்கு என்ன காரணம்?

ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 17% வரை அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு
தங்கத்தின் விலை உயர்வு

வெங்காயத்தின் விலை உயர்வு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று 03.01.2020-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 3,815 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதனால் ஒரு பவுன் தங்கம் 30,520 ரூபாயைத் தொட்டது. நேற்றைய விலையை விட இன்று பவுனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 30,656 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்நிலை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (சுமார் 31 கிராம்) தங்கத்தின் விலை 1,280 டாலராக இருந்தது. தற்போது 1,500 அமெரிக்க டாலர்களையொட்டி வர்த்தகமாகிவருகிறது.

ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 17% வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 3,021 ரூபாயில் ஆரம்பித்த வர்த்தகம், படிப்படியாக அதிகரித்து இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,832 ரூபாய்க்கு வந்துள்ளது.

காரணம் என்ன?

கடந்த 17 மாதங்களாக அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர், தங்கத்தின் விலையேற்றத்திற்கும் ஒரு காரணமாக இருந்தது. தற்போது அவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஓரளவுக்கு போர்ச் சூழல் குறைந்து காணப்பட்டாலும், பதற்றமான நிலையே இன்னும் தொடர்கிறது. இது தொடர்ந்தால், தங்கத்தின் விலை மேலும் உயரும்.

gold investment
gold investment

அதுமட்டுமல்லாமல், தற்போது புதிதாக வெடித்திருக்கும் இரான் - அமெரிக்கா இடையிலான போர்ப்பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. போர்ப்பதற்றம் தொடரும்வரை தங்கத்தின் விலையேற்றம் தொடருமென்றும் தெரிகிறது.

பொங்கல் பண்டிகை மற்றும் தைமாத்தின் திருமண நாள்கள் வரவுள்ள நிலையில், கிடுகிடுவென உயர்ந்துவரும் தங்கத்தின் விலையால் மக்கள் கவலையடைந்திருக்கிறார்கள்.