Published:Updated:

அதிர வைக்கும் விலைவாசி உயர்வு... எப்போது கட்டுக்குள் வரும்..?

விலைவாசி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

அதிர வைக்கும் விலைவாசி உயர்வு... எப்போது கட்டுக்குள் வரும்..?

விலைவாசி உயர்வு

Published:Updated:
விலைவாசி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
விலைவாசி உயர்வு

கடந்த 2020-ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து பெருந்தொற்றால் விநியோகச் சங்கிலி (Supply Chain) பாதிப்படைந்து, அனைத்துத் துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டுவரும் நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் மறுபடியும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி பொருள்கள் கிடைப்பதில் பிரச்னைகளை உருவாக்கி விட்டது. அதனால் விலைவாசி உயர்வையும் உண்டாக்கியிருக்கிறது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

பிரபல எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL) நிறுவனம் 2022-ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதனுடைய சோப், ஷாம்பூ, டிடர்ஜென்ட் ஆகிய பொருள் களின் விலையை 3 - 20% உயர்த்தியது. ஆனால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேலும் ஒரு விலை உயர்வை செய்து எல்லோரையும் அதிர வைத்தது. இந்த விலை உயர்வில் தனிநபர் ஆரோக்கியம் சார்ந்த பொருள்கள் மட்டுமல்லாமல், அது தயாரிக்கும் உணவுப் பொருள்களின் விலையையும் அதிகரித்திருக்கிறது.

இந்த விலை உயர்வை ஹிந்துஸ்தான் யூனிலீவர் மட்டும் அல்லாமல், கோத்ரெஜ், புராக்டர் அண்ட் கேம்பிள், டாபர் போன்ற நிறுவனங்களும் செய்திருக்கின்றன. இதற்கு கச்சா எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை உயர்வும், சரக்குக் கட்டண உயர்வும் பிரதான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

அதிர வைக்கும் விலைவாசி உயர்வு... எப்போது கட்டுக்குள் வரும்..?

2022-ம் ஆண்டின் மத்தியில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக் கிடையே சமாதானம் ஏற்பட்டு உலக அளவில் விநியோகச் சங்கிலி முன்பு போல செயல்பட ஆரம்பித்தால், இந்த விலை உயர்வு கட்டுக்குள் இருக்கும். இல்லையெனில், மீண்டும் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக யூனிலீவரின் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

நெஸ்லே, அமுல் போன்ற நிறுவனங்கள் எண்ணெய் விலை உயர்வால் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் அளவுக்கு பாதிக்கப்படவில்லை என்றாலும், தங்களது பொருள்களின் விலையையும் கணிசமான அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. கோதுமை விலை அதிகரிப்பும், இறக்குமதி செய்யப்படக் கூடிய கால்நடைத் தீவன விலையின் அதிகரிப்பும் இதற்கு முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன. ஆக, ஒவ்வொரு நிறுவனமும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகத் தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் விலையை அதிகரித்திருக்கிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 10 டாலர் அதிகரித் தால், அது பணவீக்கத்தில் 0.24% தாக்கத்தை ஏற்படுத்தி பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது துறைசார் நிபுணர்களின் கருத்தாகும்.

இந்த விலை ஏற்றத்தால் நுகர்வோர்களிடையே ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து சந்தையில் தங்களது பங்கைத் தக்க வைத்துக்கொள்ள டிரேட் மார்ஜினைக் குறைப்பது, வழக்கமான தயாரிப்புப் பொருளுக்குப் பதிலாக, மாற்றுத் தயாரிப்பு பொருள்களைப் பயன்படுத்துவது, விநியோகத் தைச் சீராக்குவது, விலையை அதிகரிக்காமல் பொருளின் எடையைக் குறைப்பது (உதாரணம், 35 கிராமுக்குப் பதிலாக 32 கிராம் பேக்கை அறிமுகம் செய்வது) ஆகிய நடவடிக்கை களை நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

வாஷிங் பவுடரின் விலை ஏற்றத்தால் நாட்டின் சில பகுதி களில் நுகர்வோர்கள் அதிக எடையுள்ள பேக்குக்குப் பதிலாக சிறிய பேக்கை வாங்க ஆரம்பித் திருக்கிறார்கள். சமையல் எண்ணெயைப் பொறுத்தவரை, 1 லிட்டர் பேக் அதிக விலை என்பதால், 500 மி.லி பேக்கை மக்கள் வாங்க ஆரம்பித்திருக் கிறார்கள். சமையல் எண்ணெய் விலை கடந்த ஓரிரு மாதங்களில் 30 - 40% அதிகரித்திருக்கிறது. அதுபோல, தலைமுடிக்கு ஷாம்ப்க்குப் பதிலாக நுகர்வோர் கள் சோப் உபயோகிக்க ஆரம் பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை விலை அதிகரிக்கும் போதும் நுகர்வோர்கள் தங்களது செலவைக் கட்டுக்குள் வைத் திருக்கத் தவறியதில்லை.

வெளிச்சந்தையில் விலை அதிகரித்துக்கொண்டே இருக் கிறது என்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் ரேஷன் கடை யில் விநியோகிக்கும் பொருள் களை வாங்க அதிகமான மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்திருக் கிறார்கள். அது போல, தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் பிராண்டுகளான ஹமாம், லக்ஸ் ஆகிய சோப்புகளுக்குப் பதிலாக உள்ளூர் அல்லது பிராந்திய ரீதியில் பிரபலமாக இருக்கும் பிராண்டுகளுக்கு நுகர்வோர்கள் மாற ஆரம்பித்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. நுகர்வோர் பொருள்களைப் பொறுத்தவரை, மொத்த விற்பனையில் ரூ.2 முதல் ரூ.15 வரையில் விலை கொண்ட சிறிய பேக்குகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும். சந்தையாளர்கள் மத்தியில் இது `மாயஜால விலைப் பட்டை (Magic price band)’ என அறியப்படுகிறது. இதனுடைய விற்பனை பாதிக்கக் கூடாது என்பதற்காக விற்பனையாளர் களுக்குத் தரக்கூடிய (டிரேட்) மார்ஜினை நிறுவனங்கள் குறைத் திருக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணெயில் 90% ரஷ்யா, உக்ரைனிலிருந்து வந்துகொண்டிருந்தது. இந்தச் சண்டை யால் விநியோகச் சங்கிலி முற்றிலுமாகப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் சமையல் எண்ணெயில் 15 - 20% சூரியகாந்தி எண்ணெய் ஆகும். ஏப்ரல் மாதத்துக்குள் இந்தச் சண்டை முடிவுக்கு வரவில்லை எனில், இதன் விநியோகம் மேலும் பாதிக்கப்படும். வழக்கமாக இந்தியாவில் சூரியகாந்தி ஏப்ரல் மாதம் பயிரிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் அறுவடை செய்யப்படும். சண்டை முடிவுக்கு வரவில்லையெனில், சுமார் 1 முதல் 2 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு மாற்று ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும் என்று ருச்சி சோயா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

பணவீக்கத்தால் ஏற்படும் தாக்கமானது இன்னும் 6 - 8 மாதங்கள் நீடிக்கும் எனவும், புவி அரசியல் சூழ்நிலையைவிட பெரிய ஆபத்து கோவிட் நான்காவது அலை (இது குறித்து அவ்வப்போது வரும் அறிவிப்புகள் உண்மையாகும் பட்சத்தில்) எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பெருந்தொற்று பிரச்னை கட்டுக்குள் வந்து, உக்ரைன் பிரச்னையும் முடிவுக்கு வந்தால் நுகர்வோர் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதாக மீண்டெழுவதும், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் சாத்தியமே என்கிறார்கள் நிபுணர்கள். இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

‘‘10 - 25% வரை விலை உயர்ந்துள்ளது..!’’

விக்கிரமராஜா, தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு

“அத்தியாவசிய பொருள்களின் விலை 10 - 25% வரை உயர்ந்திருக்கிறது. நேரடியாக விலையேற்றம் செய்வதுடன், பொருளின் அளவைக் குறைப்பதும் நடந்துவருகிறது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 80% பாமாயில் இந்த நாடுகளில் இருந்துதான் கிடைக்கிறது. தற்போது போர் காரணமாகப் பாமாயில் வரத்து இல்லாததால், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிரொலி யாகக் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும்.

நமக்குத் தேவையான பொருள்களை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். உற்பத்தியை முறைப்படுத்துவதன் மூலம் விலையேற்றம், விலை வீழ்ச்சி ஆகியவற்றை சந்திக்கத் தேவையில்லை. விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோரை உள்ளடக்கி, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய மூவரும் பயன்பெறும் வகையில் தேவைக்கேற்ற உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்கும்படியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.”

- கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism