நான்காவது தலைமுறைக்கான தொலைத்தொடர்புத் துறை சார்ந்த அலைக்கற்றைக்கான ஏலம் அண்மையில் முடிவடைந்தது. இதன் வாயிலாகத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் 2,308 மெகா ஹெர்ட்ஸ் (MHZ) அளவுக்கான அலைக்கற்றையை ஏலம் விட்டுள்ளது. 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் பான்ட்ஸ் ஏழு வகைகளில் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது.
இவற்றில் மூன்று நிறுவனங்களிடமிருந்து 855.60 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கான ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
முந்தும் ரிலையன்ஸ் ஜியோ
இந்த ஏலத்தில் அதிக அலைக்கற்றை ஏலம் எடுத்த நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்குகிறது. ஜியோ நிறுவனம் 488.35 மெகா ஹெட்ஸ் அளவுக்கு ஏலம் எடுத்துள்ளது. ஜியோவுக்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் 355.45 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஏலம் எடுத்துள்ளது. மூன்றாவது நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் 11.80 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலமாக எடுத்துள்ளது.

என்ன காரணம்?
இந்த ஏலத்தை அலைக்கற்றைக்கான உரிமத்தை நீட்டிக்கவும் புதிய வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்துவதற்காக மூன்று நிறுவனங்களும் எடுத்துள்ளன.
கடந்த காலங்களில் இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கு பெற்றுள்ளன. ஜியோவின் வருகைக்குப் பிறகு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஏர்செல், டாட்டா டோகோமோ போன்ற பல நிறுவனங்கள் தமது சேவையை நிறுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசுக்கு ரூ. 77,815 கோடி வருமானம்
இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 77,814.80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் இந்த ஏலத்தின் மூலம் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதைவிட அதிகமாக 77,814.80 கோடி அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏலத் தொகையில், அரசுக்கு 27,000 கோடி ரூபாய் வரை (Upfront) நிறுவனங்கள் உடனடியாகச் செலுத்த வேண்டும். குறிப்பாக, மார்ச் 31 முடியும் நடப்பாண்டில் 20,000 கோடி ரூபாய் வரை இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும். மீதித் தொகையை தவணைமுறையில் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இன்னும் சிறிது காலத்தில் ஐந்தாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்க இருக்கிறது. அந்த ஏலத்தின் போதும் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றிக் கருத்து தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம் தம்முடைய அலைக்கற்றை அளவு இந்த ஏலத்தின் மூலம் 55% உயர்ந்து 1,717 மெகா ஹெர்ட்ஸ் ஆக தற்போது உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் துறையில் கால் பதிக்க தங்கள் நிறுவனம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த ஏலத்தின் மூலம் இந்தியாவின் மிக வலிமையான தொலை தொடர்புத்துறை நிறுவனமாகத் தாங்கள் ஆவதற்கு இந்த ஏலம் உதவுவதாகவும் இதன் மூலம் சிறு கிராமங்களிலும் டிஜிட்டல் சேவைகளை சிறப்பாகக் கொண்டு சேர்க்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளது
குறைவாக ஏலம் எடுத்துள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு ஏற்கெனவே தேவையான அலைக்கற்றை உரிமைகள் உள்ளன. விரைவில் முடிய இருக்கின்ற அலைக்கற்றை வகைகளை மட்டும் நீட்டிக்க இந்த ஏலத்தை தங்கள் நிறுவனம் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது.

மூன்று நிறுவனங்களுக்குள் போட்டி..!
தொலைத்தொடர்பு துறையில் இந்த மூன்று நிறுவனங்களுக்குள் மட்டுமே இப்போது போட்டி உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதால் இந்த ஏலம் இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.