Published:Updated:

அர்பன் லேடர் நிறுவனத்தை கையகப்படுத்திய ரிலையன்ஸ்... என்ன திட்டம் வைத்திருக்கிறார் அம்பானி?

 முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

அர்பன் லேடர் ஹோம் டெகார் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 182 கோடி ரூபாய் முதலீடு செய்து அந்நிறுவனத்தில் 96 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரிலையன்ஸ் ஜியோ, சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, ரிலையைன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என அதன் தலைவர் முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்திருந்தார். அவருடைய அழைப்பை ஏற்று சில்வர் லேக், கே.கே.ஆர், முபடாலா உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த நவம்பர் 5-ம் தேதி வரை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் மொத்தம் 9 நிறுவனங்கள் சேர்ந்து 47,265 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன.

`ஜியோ ஈர்த்த ரூ.1,17,588.45 கோடி முதலீடு; கடனில்லை!’ -  மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி

இந்நிலையில், அர்பன் லேடர் ஹோம் டெகார் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 182 கோடி ரூபாய் முதலீடு செய்து அந்நிறுவனத்தில் 96 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம். மீதமிருக்கும் நான்கு சதவிகித பங்குகளை வாங்குவதற்கும் இந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஆன்லைன் பர்னிச்சர் துறைக்குள் நுழைவதால். இது இத்துறை சார்ந்த மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் பர்னிச்சர் சந்தையில் தற்போது ஃப்ளிப்கார்ட், அமேசான், பெப்பர் ப்ரை ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அர்பன் லேடர் நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. 2018-ம் ஆண்டு 1,200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்ட அர்பன் லேடர் 2019-ல் 750 கோடி ரூபாய்க்குக் குறைந்துள்ளது.

அர்பன் லேடரை கைப்பற்றியது மட்டுமல்லாமல் வர்த்தக விரிவாக்கம் செய்யவும், தனது ஜியோ தளத்தின் மூலம் நாடு முழுவதும் வர்த்தகத்தைச் செய்யும் அளவுக்குத் தளத்தை மேம்படுத்த சுமார் 75 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மேற்கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்பன் லேடர்
அர்பன் லேடர்

புதிதாக நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே பிரபலமாக உள்ள சில நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கி அவற்றைச் செயல்படுத்த முகேஷ் அம்பானி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான முதல்படிதான் இந்த அர்பன் லேடர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சி என ரிலையன்ஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆன்லைன் பர்னிச்சர் விற்பனை நிறுவனமான அர்பன் லேடரைத் தொடர்ந்து ஆன்லைன் ஆர்டர் மூலம் பால் விநியோகம் செய்யும் மில்க் பேஸ்கெட், ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட் மெட்ஸ், பெண்களின் உள்ளாடை விற்பனை நிறுவனமான ஜிவாமே ஆகிய நிறுவனங்களையும் முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு