Published:Updated:

ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் பார்க்க வேண்டிய பணப்பலன் அம்சங்கள்!

ஓய்வுக்கால ஊதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்கால ஊதியம்

ஓய்வுக்கால ஊதியம்

ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் பார்க்க வேண்டிய பணப்பலன் அம்சங்கள்!

ஓய்வுக்கால ஊதியம்

Published:Updated:
ஓய்வுக்கால ஊதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்கால ஊதியம்

முன்பு 59 ஆக இருந்து, பிற்பாடு 60 ஆக உயர்த்தப்பட்ட பின், தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாள் மே 31, 2022. அந்த வகையில் கடந்த மே, 1962-ல் பிறந்து தமிழக அரசுப் பணியில் இணைந்த அனைவரும் 31.05.2022 அன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்கப்படக்்கூடும். அவ்வாறு ஓய்வு பெறு வோரின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு, பணப் பலன் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான். அது தொடர்பாகக் கவனிக்க வேண்டிய அம்சங்களைப் பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

பணிவிடுப்பு ஆணை

ஒருவர் (குற்ற நடவடிக்கை ஏதுமின்றி) பணி யிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறார் என்பதற்கான ஆதாரம் பணி விடுவிப்பு ஆணை. இதைப் பெற்ற பிறகுதான் ஓய்வு பெற்ற ஒருவர், தன் ஓய்வுப் பயணத்தைத் தொடங்க வேண்டும். என்றைக்கு ஓய்வு பெற வேண்டுமோ, அன்று மாலைக்குள் இந்த ஆணை வழங்கப்பட்டுவிடும்.

ஓய்வூதிய ஆணை

31.03.2003-க்கு முன் தமிழக அரசுப் பணியில் சேர்ந்து ஓய்வு பெறுவோருக்கு மாநிலக் கணக் காயரால் வழங்கப்படுவதுதான் ஓய்வூதியக் கொடுப்பாணை (pension payment order). இதை பென்ஷன் புத்தகம் என்றும் சொல்வதுண்டு. தற்போது இந்த ஓய்வூதிய ஆணை மின்னஞ்சல் மூலம் மாநிலக் கணக்காயரால் கருவூல அதிகாரி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிக்கு அனுப்பப்படுகிறது.

ஓய்வு பெறுபவர் எந்தக் கருவூலத்தில் ஓய்வுக்கால பணப்பலன் பெற விரும்புகிறாரோ, அந்தக் கருவூல அதிகாரி இதைப் பதிவிறக்கம் செய்து அதன் ஒரு நகலை ஓய்வு பெற்றவருக்கு வழங்குவார். ஓய்வு பெற்றவர் தன் முதல் ஓய்வுகாலப் பணப்பலன் பெற கருவூலம் செல்லும்போதே பென்ஷன் புத்தகம் தரப்பட்டுவிடும்.

கவனிக்க வேண்டியவை...

மாநிலக் கணக்காயரால் அனுப்பப்பட்டு கருவூல அலுவலரால் வழங்கப்படும் இந்த ஓய்வூதிய ஆணையைப் (புத்தகத்தை) பெற்றவுடன் கவனிக்க வேண்டியவை....

தனது பெயர், பதவி, பணியில் சேர்ந்த தேதி, பணி ஓய்வு பெற்ற தேதி, கடைசியாகப் பெற்ற சம்பளம், மாதாந்தர பென்ஷன், பணிக்கொடை, கம்யூடேஷன், பென்ஷன் தொடங்கும் நாள் முதலானவை சரியாக உள்ளனவா என்பதை சரிபார்ப்பது முக்கியம். மேலும், குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியானவர் என்ற இடத்தில் தன் மனைவி (பெண் ஊழியர் எனில், தன் கணவர்) பெயர் இடம்பெற்றுள் ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, காலம் கடந்து குடும்ப பென்ஷனுக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஓய்வு பெற்றவர் மட்டுமன்றி, அவரின் வாழ்க்கைத் துணையும் (spouse) குடும்ப ஓய்வூதியம் என்ற ‘கட்டத்தில்’ தன் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

இத்துடன் சம்பாதிக்க இயலாதபடி உடல் நிலை, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பற்றி குறிப்பு உள்ளதா, மண மாகாத, விதவையான, கணவரால் கைவிடப் பட்ட, விவாகரத்தான மகள் போன்ற விவரங்கள் விடுபட்டு இருந்தாலும், தான் ஏற்கெனவே வேலைபார்த்த அலுவலகம் மூலம் உடனடியாக விண்ணப்பிப்பது அவசியம்.

ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள்
பார்க்க வேண்டிய பணப்பலன் அம்சங்கள்!

புதிய பட்டுவாடா முறை...

புதிய நடைமுறைப்படி பென்ஷன், கம்யூடேஷன், பணிக்கொடை, ஜி.பி.எஃப் ஆகிய நான்கையும் கருவூலமே நேரடியாக வழங்குகிறது.

அவ்வாறு வழங்கப்படும்முன், பணிக்கொடையில் பிடித்தம் செய்ய வேண்டிய வீட்டுக் கடன், வாகனக் கடன், பண்டிகைக் கடன் ஏதும் பாக்கி இல்லை என்ற சான்று ஒன்றை, ஓய்வுபெற்றவரின் அலுவலகத் தலைவர், ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பே கருவூலத்துக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

இதேபோல், ஊழியர் ஓய்வுபெறுவதற்கு முந்தைய ஓராண்டுக்குள் அவரது ஜி.பி.எஃப் கணக்கிலிருந்து 90% முன்பணம் உள்ளிட்ட எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை என்றொரு சான்றையும் அந்த அலுவலகத் தலைவர் தொடர்புடைய கருவூலத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பியிருந்தால் மட்டுமே பணிக்கொடை மற்றும் பிராவிடன்ட் ஃபண்டுக்கான பட்டியலைக் கருவூலமே தயார் செய்து, பணத்தை ஊழியரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கும். துறை அலுவலரின் அனுமதி கிடைக்காதவரை கருவூலம் பணம் அனுப்பாது.

எனவே, இவ்விரண்டு அனுமதிச் சான்றுகளும் தன் அலுவலகத் தலைவரால் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை ஓய்வுபெற்ற ஊழியர் தன் அலுவலகம் சென்று உறுதி செய்துகொள்வது தாமதம் தவிர்க்க உதவும்.

காலக்கெடு எவ்வளவு?

பென்ஷன், பென்ஷன் கம்யூடேஷன், பணிக்கொடை ஆகிய மூன்றும் மாநிலக் கணக்காயர் அந்தந்த ஆணைகளில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து ஓராண்டு வரை செல்லுபடி யாகும். ஜி.பி.எஃப் ஆணை ஆறு மாதம் மட்டுமே செல்லுபடி ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குள் பெறப்படாத பென்ஷன், கம்யூடேஷன், பணிக்கொடை மற்றும் ஜி.பி.எஃப் ஆணைகள் காலாவதியாகிவிடும். மீண்டும் மாநிலக் கணக்காயரிடமிருந்து புதுப்பிப்பு (Revalidation) ஆணை வரப் பெற்ற பிறகே, தொகை பெற முடியும். எனவே, உடனடியாகப் பணம் பெறுவது நல்லது.

பணப்பலன் கிடைக்கும் நாள்...

ஜி.பி.எஃப், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேஷன் ஆகிய மூன்று இனங்களுக்கான தொகையையும் ஓய்வுபெற்ற மறுநாளே கருவூலம் சென்று பெற்றுவிடலாம். அதாவது, 31.05.2022 அன்று ஓய்வு பெறு பவர், 01.06.2022 அன்றே மேற் கண்ட இனங்களுக்குப் பணம் பெறலாம். முதல் மாத பென்ஷன் 30.06.2022 அன்று கிடைக்கும். அதாவது, மாதாந்தர பென்ஷன் பெறும்முன்பே, பென்ஷன் கம்யூடேஷன் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தாமதத்துக்கு வட்டி...

ஜி.பி.எஃப் இறுதித்தொகை (final payment of G.P.F) பணிக் கொடை ஆகியவற்றை வழங்கு வதில் நிர்வாகத் தரப்பில் தாமதம் செய்தால், தாமதக் காலத்துக்கான வட்டி கிடைக்கும். அதாவது, ஜி.பி.எஃப்-க்கு அவ்வப்போது தரப்படும் அதே சதவிகித வட்டிதான் கிடைக்கும் என்றாலும், அது கூட்டு வட்டியாக இருக்கும். ஆனால், ஓய்வு பெற்றவர் தாமதமாகச் சென்று பணம் பெறுவார் எனில், அந்த தாமதத் துக்கு வட்டி கிடையாது.

கம்யூடேஷன் தடுமாற்றம்...

ஓய்வூதியக் கருத்துரு (pesion proposals) மாநிலக் கணக்காயருக்கு அனுப்பியபோதே, ஓய்வு பெற்றவர் கம்யூடேஷன் பெற இசைவு தெரிவித்திருந்தால், கம்யூடேஷன் தொகை ஒப்பம் (sanction) ஆகி வந்திருக்கும்.

தாமதமான கம்யூடேஷன் முடிவு

இன்னும் ஒரு சிலர், ‘கம்யூ டேஷன் என்பது கடன் மாதிரி தானே… எனவே, வேண்டாம்’ என்று தீர்மானித்து பென்ஷன் பேப்பரில் கம்யூடேஷன் பெற ‘இசைவு’ தெரிவித்திருக்க மாட்டார்கள். ஆனால், பிற்பாடு ‘இப்போது கம்யூடேஷன் வாங்கினால் தேவலாம்’ என்று நினைக்கலாம்.

இப்படி நினைப்பவர்கள், உடனடியாக கருவூலத்தை அணுகி கம்யூடேசனுக்கு விண்ணப்பித்துவிடுவது நல்லது. ஏனென்றால், ஓய்வு பெற்று ஓராண்டு கழிந்த பிறகு கம்யூடேசனுக்கு விண்ணப்பித்தால் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இதற்கு தடங்கல், தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கிடைக்காமலும் போகலாம். எனவே, நன்கு யோசித்து உடனுக்குடன் ஒரு முடிவை எடுத்துவிடுவது நல்லது.

கருவூல தேர்வு

சொந்த ஊர் அல்லாத வெளியூரில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், தான் பென்ஷன் பெறுவதற்கு தன் சொந்த ஊர் கருவூலத்தைத் தேர்வு செய்திருக் கலாம். ஆனால், எங்கோ ஏற்பட்ட தவறு காரணமாக ஓய்வூதியக் கொடுப்பாணையில் வேலை செய்த ஊரில் உள்ள கருவூலத்திலேயே பென்ஷன் பெறும்படி ஆணையிடப்பட்டிருக்கலாம். இதற்காக பதற்றப்படத் தேவையில்லை. ஓய்வுக்கால பணப்பலன் முழுவதையும் அந்தக் கருவூலத்திலேயே பெற்றுக்கொண்டு விண்ணப்பம் செய்தால், தற்போது பணம் தரும் கருவூல அலுவலரே நமக்கு வசதியான கருவூலத்தின் மூலம் பென்ஷன் பெற மாற்றம் செய்து தந்துவிடுவார்.

முதல் வருகை...

ஓய்வு பெற்று பணப்பலன் பெற செல்லும்முன், வாழ்க்கைத் துணையுடன் இணைந்த சேமிப்புக் கணக்கு ஒன்றை பென்ஷனுக்கென்றேத் தொடங்குவது அவசியம். வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார், வாழ்க்கைத் துணையோடு இணைந்த புகைப்படம் ஆகியவற்றுடன் கருவூலம் சென்று பணம் பெறலாம்.

அலுவலகம் தரும் பணப்பலன்

தனது விடுப்புக் கணக்கில் உள்ளபடி அதிகபட்ச ஈட்டிய விடுப்புக்கு எட்டு மாத சம்பளமும், சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்புக்கு அதிக பட்சம் மூன்று மாத சம்பளமுமாக 11 மாத சம்பளமும் அலுவலகத் தலைவரால் கருவூலத்திலிருந்து வரைவு செய்யப்பட்டு ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது பழைய பென்ஷன் மற்றும் பங்களிப்பு பென்ஷன் ஆகிய இரு வகையினருக்கும் பொதுவான நடைமுறை. இத்துடன் சிறப்பு சேமநிதி முதிர்வுத் தொகையும் வரவு வைக்கப்பட்டுவிடும்.

சி.பி.எஸ்

ஊழியரின் பங்களிப்பு மற்றும் அரசின் இணைப் பங்களிப்புடன் இவை இரண்டுக்குமான வட்டியும் சேர்த்து மொத்தத் தொகை வழங்க கருவூலக் கணக்கு இயக்ககத்தால் ஆணை பிறப்பிக்கப்படும். கருவூலத்தில் பட்டியல் தாக்கல் செய்து ஊழியரின் கணக்கில் அலுவலகத் தலைவர் வரவு வைக்கச் செய்வார்.

நிதித்திட்டம் அவசியம் வேண்டும்...

ஓய்வு பெற்றபின் கிடைக்கப்போகும் தொகைக்கு சரியான நிதித்திட்டம் பெற நிதி ஆலோசகரை அணுகி நிதித் திட்டதை வகுக்க இப்போதே ஆயத்த மாகலாம். இதன்மூலம் ஓய்வுக்காலத் தொகையை சரியாகப் பயன்படுத்தலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism