பிரீமியம் ஸ்டோரி

இந்திய மக்களிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கிறது என சில நாள்களுக்கு முன்பு வெளியான ஆய்வறிக்கையைக் கடுமையாக மறுத்தது மத்திய அரசாங்கம். இப்போது, ஓய்வூதியம் தொடர்பான குறியீட்டில் (Pension Index) இந்தியா மிகவும் கீழே இருப்பதாக மெர்சர் சி.எஃப்.ஏ இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு என்ன சொல்லப்போகிறதோ?

ஓய்வுக்கால பலன்களை மக்களுக்கு அளிப்பதில் பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் எவ்வளவு அக்கறையுடன் செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்து ஆண்டுதோறும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கையின்படி, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகள் 80 புள்ளிகளுக்குமேல் பெற்று, முதல் நிலையில் உள்ளன. ஜெர்மனி, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகள் 65-லிருந்து 75 புள்ளிகளையும், சீனா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் 50 முதல் 60 புள்ளிகளையும் பெற்று, அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. ஆனால், 35 முதல் 50 புள்ளிகள் வரை பெற்ற நாடுகளில் நம் நாடும் இடம் பெற்றுள்ளது கவலை அளிக்கிறது. 43 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நம் நாடு 40-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் 45.7 புள்ளிகளைப் பெற்ற நாம், இந்த ஆண்டில் 43.3 புள்ளிகளைப் பெற்று பின்தங்கி இருக்கிறோம்.

2004-க்கு முன்பு அரசு வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே பென்ஷன் கிடைத்து வருகிறது. அதன் பிறகு, அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. தனியார் துறை ஊழியர்களுக்கு மிக மிக சொற்பமாகக் கிடைக்கும் பென்ஷன் பணம், மருந்து வாங்கக்கூட போதுமானதாக இருப்பதில்லை. மருத்துவ முன்னேற்றம் காரணமாக மனிதர்களின் ஆயுள் காலம் வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 80 வயதுக்கு மேற்பட்டவர் களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், 60 வயதில் ஓய்வு பெற்றவர்களில், கையில் பணம் இல்லாமல் நரக வேதனையுடன் 20 ஆண்டுக் காலத்தைத் தள்ளி வருபவர்கள் இன்றைக்குப் பல்லாயிரம் பேர்.

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஓய்வுக்காலச் செலவை சமாளித்தது முந்தைய தலைமுறை. வீடுகளின் விலை இன்று அபாரமாக உயர்ந்துவிட்ட நிலையில், அப்படிச் செய்ய இன்றைய தலைமுறைக்கு வாய்ப்பு குறைவு. தேசிய பென்ஷன் திட்டத்தில் (National Pension System) சேர்ந்து, மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேர்ப்பதே இன்றைய தலைமுறை தனியார்துறை ஊழியர்களுக்கு ஒரே தீர்வாக இருக்கிறது.

குழந்தைகளின் நலன் எந்தளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின் நலனும் முக்கியம். இன்று நாம் கண்டுள்ள முன்னேற்றத்துக்குக் காரணம், மூத்த குடிமக்கள் நேற்று சிந்திய வியர்வைதான். அவர்களின் நிம்மதி யான ஓய்வுக்காலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப் போடு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், மேற்சொன்ன குறியீட்டில் நம் நாடு மேலும் சறுக்கி, கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும், ஜாக்கிரதை!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு