Published:Updated:

உங்கள் பணத்தைக் கரைக்கும் ரிவெஞ்ச் ஷாப்பிங்..! ஏன் தவிர்க்க வேண்டும்?

ரிவெஞ்ச் ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
ரிவெஞ்ச் ஷாப்பிங்

R E V E N G E S H O P P I N G

உங்கள் பணத்தைக் கரைக்கும் ரிவெஞ்ச் ஷாப்பிங்..! ஏன் தவிர்க்க வேண்டும்?

R E V E N G E S H O P P I N G

Published:Updated:
ரிவெஞ்ச் ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
ரிவெஞ்ச் ஷாப்பிங்

கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை. அதற்குள் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மட்டுமல்ல, எல்லா நகரங்களிலும் உள்ள கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன. பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கும் மக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இத்தனை நாளும் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்க முடியாது என வெறிகொண்டு வெளியே வருவதைத்தான் ‘ரிவெஞ்ச் ஷாப்பிங்’ ‘ரிவெஞ்ச் டிராவல்’ என்று அழைக்கிறார்கள். இதற்கு எதிராக மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அது என்ன ‘ரிவெஞ்ச் ஷாப்பிங்’, இதிலிருந்து தப்பிப்பது எப்படி என நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

ரிவெஞ்ச் ஷாப்பிங்!

“இந்த வார்த்தை நமக்கு பழக்கப்படாத ஒரு வார்த்தை. ஏனெனில், நாம் இதுவரை நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக மட்டுமே ஷாப்பிங் செய்தும், நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை குடும்ப சகிதமாக சுற்றுலா செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆனால், கொரோனாவுக்கு நமது இந்தப் பழக்கத்தில் பெரும் மாற்றம் வந்திருக்கிறது. அடைபட்டு வைக்கப்பட்டிருந்த அணையைத் திறந்தவுடன், தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு வெளியேறுவதுபோல, பல மாதங்களாக அடைபட்டுக் கிடந்த மக்கள் இன்று, அதிக அளவில் ஷாப்பிங் செய்வதாகவும், பயணம் மேற்கொள்வதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதற்கு வைக்கப் பட்டிருக்கும் பெயர்தான் ரிவெஞ்ச் ஷாப்பிங், ரிவெஞ்ச் டிராவல்.

பல மாதங்களாகச் செலவு செய்யாத தால், ஆட்குறைப்பு மற்றும் சம்பளம் குறைப்பில் பாதிக்கப்படாத பல்வேறு துறை சார்ந்த சம்பளதாரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடம் ரொக்கக் கையிருப்பு பெருமளவும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஐ.டி மற்றும் வங்கித்துறை சார்ந்தவர்களின் பெருமளவு சம்பளம் செலவழிக்கப் படாமல் இருப்பில் இருக்கிறது. இவர்கள் அனைவருமே கொரோனாவுக்கு முன்பு, சினிமா, பார்ட்டி, ஷாப்பிங், டிராவல், ரெஸ்டாரன்ட் என மாதம்தோறும் பல ஆயிரங்களைச் செலவு செய்தவர்கள்; ஆனால், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், செலவு செய்ய முடியாமல் எல்லாப் பணத்தையும் மிச்சப்படுத்தி வைத்திருக் கிறார்கள் இவர்கள்.

உங்கள் பணத்தைக் கரைக்கும்
ரிவெஞ்ச் ஷாப்பிங்..!  ஏன் தவிர்க்க வேண்டும்?

ஷாப்பிங் செய்வது குற்றமா?

தற்போது பல அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க ஆரம்பித்து விட்டன. ஐ.டி பணியாளர்கள் பலர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ இல்லாமல் ‘‘வொர்க் ஃப்ரம் ஆபீஸ்’ என மாறத் தொடங்கியிருக் கிறார்கள். இதனால் உடைகள் மற்றும் இதர அலுவலகம் சார்ந்த தேவைகள் மீண்டும் அவர்களுக்கு வந்திருக்கின்றன.

ஒருவருக்கு உண்மையில் பல விதமான தேவை இருந்து, அதற்காக அவர்கள் ஷாப்பிங் செய்வதைத் தவறு என்று சொல்ல முடியாது. சித்திரிக்கவும் கூடாது. ஆனால், பல மாதங்களாகச் சேமித்து வைத்த பணம் கையிருப்பில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக, தேவை இல்லாத விஷயங்களை வாங்கிக் குவிப்பது ஏற்புடையதல்ல. அதே போல, மிக அவசியமான நிலையில், ஊருக்குப் போனால் தவறில்லை. ஆனால், இந்த நேரத்தில் ஊட்டி, கொடைக் கானல் அல்லது ஆன்மிகத் தலங்களுக்குப் பயணப்படுவது ரிஸ்க் நிறைந்த விஷயம் என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

சேமித்த பணத்தை என்ன செய்வது?

உதாரணமாக, ரூ.1 லட்சத்தை மாதச் சம்பளமாக வாங்கி வந்த ஐ.டி ஊழியர், கடந்த 10 மாதங் களாக, அத்தியாவசிய செலவுகள் போக மிச்சப் பணத்தை அப்படியே வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருக்கிறார் எனில், அந்தப் பணத்தை, அதிக வட்டிக்கு வாங்கிய கடனைத் திரும்பக் கட்டலாம். அல்லது அதில் ஒரு பகுதியை முதலீடு செய்வதற்காக ஒதுக்கலாம்.

அவசரகால நிதிச் சேமிப்புக் கென குறிப்பிட்ட அளவு பணம் சேர்க்காதவர்கள், அதை உருவாக்க இந்தத் தொகையைப் பயன்படுத்தலாம். இதுவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்காமல் இருந்தால், அவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தலாம்.

சிந்திந்து செலவு செய்யுங்கள்!

கொரோனா மூன்றாவது அலை வருமா, வராதா என்று தெரியாத நிலையில் நாம் இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை ஊரடங்கு வரும் பட்சத்தில் நாம் பொருளாதார ரீதியில் கஷ்டப் படாமல் இருக்க நாம் கொஞ்சம் பணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். கொரோனா காலத்தில் நாம் வீட்டிலே முடங்கிக் கிடந்தோம். ஆரோக்கியமான உணவுகளை நிறைய சாப்பிட்டோம். சிக்கனமாகச் செலவு செய்தோம். ஆடம்பரத்துக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஊரடங்கால் எது தேவை, எது தேவையற்றது என நமக்குத் தெளிவாகத் தெரிந்த பிறகும் அந்த நிலையிலிருந்து நாம் ஏன் மாற வேண்டும்?

செலவே செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. அதை யாரும் விரும்பவும் மாட்டார்கள். ஆனால், செலவு செய்யாமல் இருந்து விட்டோம்; இனி செலவு செய்வோம் என்று நினைப்பது சரியல்ல. இவ்வளவு நாள் செலவு செய்யாததை, இனி மொத்தமாகச் செய்ய நினைக்கும் ‘ரிவெஞ்ச்’ போக்கை விட்டுவிட்டு, தேவையான செலவுகளை மட்டும் செய்தால், தேவை இல்லாத பொருள்களை நாம் சேர்ப்பது குறையும். தேவை இல்லாத பிரச்னைகளை நாம் தேடிக்கொள்வதும் இல்லாமல் போகும். ‘ரிவெஞ்ச் ஷாப்பிங்’, ‘ரிவெஞ் டிராவல்’ என இரண்டுமே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல’’ என்று முடித்தார் அவர்.

சிந்தித்து செயல்பட வேண்டும் மக்களே!

விண்டோ ஷாப்பிங்!

“இவ்வளவு நாள் வீட்டில் முடங்கிக் கிடந்ததால், அனைவருக்கும் ஒருவித மன அழுத்தம் நிச்சயம் உருவாகியிருக்கும். இதன் காரணமாகவும் மக்கள் ஷாப்பிங், டிராவல் எனக் களத்தில் இறங்கியிருக்கலாம். அப்படியானவர்கள், முதலில் ‘விண்டோ ஷாப்பிங்’ மேற்கொள்ளுங்கள். விண்டோ ஷாப்பிங் மேற்கொள்ளும் போது உங்களுடைய வாலட்டில் சொற்ப பணத்தை மட்டுமே வைத்திருங்கள். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வீட்டிலேயே வைத்துவிட்டு, ஷாப்பிங் மால்களுக்குச் செல்லுங்கள். ஏனெனில், மன அழுத்தத்தில் இருக்கும் மனம், பார்த்ததை எல்லாம் வாங்கச் சொல்லும். இது தேவை, இது தேவையில்லை என்பதையெல்லாம் அந்த மனம் யோசிக்காது. இப்படியான ஷாப்பிங் போக்கை ‘இம்பல்ஸ் பையிங்’ என்றும் சொல்வதுண்டு. இந்த பிராக்டீஸ் நிச்சயம் உங்களுடைய சேமிப்பைக் கரைக்காமல் பார்த்துக்கொள்ளும்” என்றார் லலிதா ஜெயபாலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism