Published:Updated:

இந்தியாவில் வறுமையை ஒழிக்க சரியான வழி! முதல்வரின் ஆலோசகர் கருத்து

வறுமையை ஒழிக்க...
பிரீமியம் ஸ்டோரி
வறுமையை ஒழிக்க...

E C O N O M Y

இந்தியாவில் வறுமையை ஒழிக்க சரியான வழி! முதல்வரின் ஆலோசகர் கருத்து

E C O N O M Y

Published:Updated:
வறுமையை ஒழிக்க...
பிரீமியம் ஸ்டோரி
வறுமையை ஒழிக்க...

வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கியமான பக்கம். அது பற்றி ஒவ்வொரு பொருளாதார அறிஞரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளைச் சொல் கின்றனர். நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃப்லோவும் இணைந்து எழுதிய புத்தகமான `குட் எகானமிக்ஸ் ஃபார் ஹார்டு டைம்ஸ் (Good Economics for Hard Times)’ வறுமை ஒழிப்பு குறித்து சிறந்த கருத்துகளைச் சொல்வதாக இருக்கிறது.

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி
எஸ்தர் டஃப்லோ
எஸ்தர் டஃப்லோ

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான எஸ்தர் டஃப்லோ, தமிழ்நாட்டுக்கு அறிமுகமானவர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியிலான கள ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்சமயம், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பொருளாதார நிபுணர் குழுவிலிருக்கும் ஐவரில் ஒருவர்.

அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃப்லோவும் உலகெங்கிலும் இருக்கும் வறுமையை வெல்ல வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலிருக்கும் எம்.ஐ.டி–யில் `அப்துல் லத்தீப் ஜமீல் பாவர்ட்டி ஆக்‌ஷன் லாப் (J-PAL)’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கான பல அணுகுமுறைகளை பரீட்சார்த்த முறையில் தொடர்ந்து பல நாடுகளில் நடத்திவருகிறார்கள். அத்துடன் இவர்கள் பேரளவுப் பொருளாதாரத்தைவிட (Macro Economics) நுண்பொருளாதாரத்தில் அக்கறை கொண்டவர்கள்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. பொருளாதாரத்தை மீண்டும் எப்படி சிறப்பான முறைக்குக் கொண்டு வருவது, சர்வதேச வர்த்தகமும் அதிலிருக்கும் சிரமங்களும், அனைவருக்குமான அடிப்படை வருமானம் (Universal Basic Income) குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்தியாவில் வறுமையை ஒழிக்க 
சரியான வழி! முதல்வரின் ஆலோசகர் கருத்து

பொருளாதார வளர்ச்சி குறித்தான அத்தியாயமானது நம்மிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி எப்படி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் என்பதைக் கோடிட்டு காட்டுகிறது. வருமானத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வை ஓரளவு சரிசெய்வதற்கு செல்வந்தர் களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் `அனைவருக்கு மான அடிப்படை வருமான’க் கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், 2016-17-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட பொருளாதாரக் கொள்கையை மேற்கோள் காட்டி, ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருக் கிறார்கள். அதன்படி, வருடத்துக்கு ரூ.7,620 வீதம் இந்தியாவின் 75% மக்களுக்கு பணப் பரிமாற்றம் செய்தால், வறுமையில் மிக மிக அடிமட்டத்தில் இருப்பவர் களைத் தவிர, மற்றவர்களை யெல்லாம் வறுமைக் கோட்டுக்குமேல் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பணம் குறைவு என்றாலும்கூட ஒருவரின் தினசரி அடிப்படைத் தேவைக்கு ஓரளவுக்குப் போதுமானதாகும் என்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு நமது நாட்டு ஜி.டி.பி-யில் சுமார் 4.9% ஆகும்.

இதை எப்படி சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு புத்தகத்தின் நூலாசிரியர்கள் பொருளாதாரக் கொள்கைத் தரவுகளை மீண்டும் மேற்கோள் காட்டுகிறார்கள். 2014-15-ம் ஆண்டில் உரம், பெட்ரோல், உணவு ஆகியவற்றுக்கு மானியம் அளித்த தொகை ஜி.டி.பி-யில் 2.07% ஆகும். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பல சமூகநலத் திட்டங்களில் பத்து பெரிய திட்டங்களுக்கு ஆகும் தொகை ஜி.டி.பி-யில் 1.38% ஆகும். இதையெல்லாம் நிறுத்தும் பட்சத்தில் மூன்றில் இரண்டு பேருக்கு `அனைவருக்குமான அடிப்படை வருமானம்’ கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக் கிறார்கள். ஆனால், அந்தப் பெரிய பத்துத் திட்டங்கள் என்ன என்பதைக் குறிப்பிடாதது ஏன் என்று புரியவில்லை.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

வேலை நிமித்தம் புலம்பெயர்பவர்கள் தொழிலாளிகள் மட்டு மல்லாமல் அவர்கள் செல்லும் இடத்துக் கான நுகர்வோர்களும் ஆவார்கள். புலம் பெயர்ந்து வசிக்கும் இடத்தில் அவர்கள் உணவு, உடை, முடித் திருத்தம் செய்து கொள்வது, ஷாப்பிங் செய்வது எனப் பல வழிகளில் தங்களது வருமானத்தைச் செலவழிப்பார்கள். இதன்மூலம் அந்த இடத்தில் குறைவான திறமை கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் புதிய தொழிலாளர் களின் வருகையானது நிறுவனங் கள் தங்கள் செயல்பாடுகளை `ஆட்டோமேட்’ செய்வதை ஓரளவு குறைக்கும். குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்கிற நம்பகத்தன்மை இருக்கும் பட்சத்தில், `தொழிலாளர்களைக் குறைக்கும் தொழில்நுட்ப’ங்களின் மீதான ஈர்ப்புத்தன்மை குறைவாகவே இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு உட்பட பல டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் கற்றலையும் உற்பத்தித் திறனையும் புத்தாக்கத்தையும் அதிகரிக்கும் என்றாலும் எந்த அளவுக்கு அது பலனைத் தரும் என்பதைக் கணிக்க முடியாது எனக் கூறும் ஆசிரியர்கள், ‘‘பொருளாதார அறிஞர்கள் கணிக்க நினைத்த அனைத்து விஷயங்களிலும் ‘வளர்ச்சி’ என்கிற ஒரு விஷயத்தில் அவர்களது கணிப்பு மிகவும் மோசமாகவே இருந்திருக்கிறது” என்கிறார்கள்.

பொருளாதாரத்தை உயர்த்து வதற்கு வரியைக் குறைக்கலாம் என்பது சில பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையாக இருக்கிறது. ஆனால், புத்தக ஆசிரியர்களைப் பொறுத்த வரையில், இது எதிர்பார்த்த பலனைத் தராது என்பதற்கு அமெரிக்காவில் ரொனால்டு ரீகன் ஜனாதிபதியாக இருந்த போது கொண்டுவந்த வரி சீரமைப்பை மேற்கோள் காட்டி தங்களது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

“ரீகனின் வரிக் குறைப்பு அல்லது கிளின்டனின் மேல்தட்டில் இருப்பவர்கள் மீதான சிறிது வரி உயர்வு அல்லது புஷ் கொண்டுவந்த வரிச் சலுகை என எதுவும் பொருளாதாரத்தில் நீண்டகால வளர்ச்சியை அளிக்கவில்லை” என்பதைத் தரவுகளுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.சுருக்கமாக, செல்வந்தர்களுக்குக் கொடுக்கப்படும் வரிச் சலுகைகளால் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத் தக்க மாறுதல் ஏற்படும் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என புத்தக ஆசிரியர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு முன்பாகவே இந்தப் புத்தகம் வெளிவந்த தால், இந்த நோயால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகள் பற்றி எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை. இனிவரும் நாள்களில் இவர்கள் இது குறித்து எழுதக்கூடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism