Published:Updated:

இடதுகால் செருப்பை மட்டும் திருடும் திருடர்கள்..! ஏன், எதற்கு..? சின்ன விஷயங்களின் பொருளாதாரம்!

இடதுகால் செருப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
இடதுகால் செருப்பு

E C O N O M I C S

நல்ல மாம்பழங்கள் எல்லாம் ஏன் ஏற்றுமதி செய்யப் படுகின்றன? நமது வீடுகளில் வேலை செய்ய வரும் பணிப் பெண்களுக்கு ஏன் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்? விருந்துகளின் போது தட்டில் இருக்கும் கடைசித் துண்டு பீட்சா அல்லது கேக் அல்லது வேறேதேனும் ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட அனைவரும் தயங்குவது ஏன்?

இப்படிப் பல விஷயங்களில் `ஏன், எதற்கு’ என்ற கேள்விகளுக்கு பொருளாதார ரீதியில் பதில் சொல்லி யிருக்கிறார் `தி எகானமிக்ஸ் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ (The Economics of Small Things) என்ற நூலின் ஆசிரியர் சுதீப்தா சாரங்கி. இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் உலக வங்கியின் மேனாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கெளசிக் பாசு.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

நீரவ் மோடியைத் தண்டிக்க வேண்டும்...

2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷைச் சேர்ந்த முகமது யூனுஸின் `கிராமின் வங்கி’ மிகப்பெரிய வெற்றிக் கதையாகும். ஏழைகளுக்குக் கடன் கொடுக்க பிரபல வங்கிகள் முன்வருவ தில்லை. காரணம், வாங்கிய கடனை அவர்களால் திரும்பக் கட்ட முடியுமா என்ற சந்தேகம். ஆனால், இதே வங்கிகள் பிரபல தொழிலதிபர் களுக்குக் கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க முடியாமல் பல லட்சம் கோடிகளை `வாராக்கடனாக’ வைத்திருக்கின்றன.

கிராமின் வங்கி மூலம் ஏழை களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் தொகையில் அவர்கள் திருப்பிக் கட்டியது 98 சதவிகிதமாகும். இது எப்படிச் சாத்தியமானது?

‘‘கிராமின் வங்கி, கடன் கொடுப்பதில் சில வழிமுறைகளைப் பின்பற்றியது. முதலாவதாக, அது எந்தத் தனிநபருக்கும் கடன் தருவதில்லை. மாறாக, குழுவுக்குத்தான் கொடுக்கும். இரண்டாவதாக, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு குழுவைச் சார்ந்தது. மூன்றாவதாக, குழுவில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளும் முடிவு தனிநபர் சார்ந்தது. கடன் வாங்குவதற்கு குழுவாகத்தான் அவர்கள் இந்த வங்கியை அணுக வேண்டும். இது தவிர, குழுவில் இருப்பவர்கள் ஒருவருக் கொருவர் ரத்த உறவு கொண்டிருப்ப வர்களாக இருக்கக் கூடாது என வேறு பல நிபந்தனைகளும் உண்டு. இதன் மூலம் ‘புனிதமற்ற திரித்துவம்’ (unholy trinity) எனப் பொருளாதார நிபுணர்களால் அழைக்கப்படக்கூடிய பாதகமான தேர்வு, குணவியல்சார்பு இடர் (moral hazard), சரிபார்ப்புக்கு அரசு செலவிடும் தொகை ஆகிய மூன்று பிரச்னைகளையும் எளிதாகக் கடந்து, கிராமின் வங்கியை வெற்றிகரமாக நடத்தினார் முகமது யூனுஸ்’’ என்கிறார் ஆசிரியர்.

மேலும், ‘‘வங்கியில் கடனை வாங்கி விட்டு தப்பியோடிய மல்லையா, நீரவ் மோடி போன்றோர்களை அவர்கள் செய்த குற்றத்துக்காகக் கடுமையாகத் தண்டித்திருந்தால், மற்றவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ள அச்சப்படுவார்கள். கடன் கொடுத்துவிட்டுத் திரும்ப வசூல் செய்ய முடியாமல் இருக்கும் வங்கிகள் கவிழாமல் இருக்க அரசு மறுமுதலீடு செய்வதைத் தவிர்த்து, அந்த வங்கிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில், ஒவ்வொரு முறையும் அரசு காப்பாற்றும் என்ற மனநிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டு தனது பொறுப் பின்மையை வளர்த்துக்கொண்டு குளிர்காய ஆரம்பித்துவிடும்’’ என்றும் சொல்கிறார்.

சுதீப்தா சாரங்கி
சுதீப்தா சாரங்கி

பாம்புப் பண்ணையில் ஊழல்...

பிரச்னையைச் சமாளிக்கவும் மக்களை உத்வேகப்படுத்தவும் ஊக்கத் தொகை அளிக்கும் திட்டங்களானது நாளடைவில் அரசுக்கும் அதுசார்ந்த அமைப்புக்கும் பெரும் தலைவலி யாக அமைந்து எந்தப் பலனையும் தராமல் போய்விடும். இதற்கு `கோப்ரா எஃபெக்ட் (Cobra Effect)’ என்று பெயர்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது டெல்லியில் நாகப்பாம்புகளின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால், ‘செத்த நாகப்பாம்பை யாராவது கொண்டுவந்து கொடுத்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்’ என அன்றைய அரசு அறிவித்தது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்துவந்தது. நாளடைவில் இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதை அறிந்து, சிலர் பாம்பு பண்ணைகளை ஆரம்பித்து, அந்தப் பாம்புகளைக் கொன்று ஊக்கத்தொகை பெற ஆரம்பித்தனர். இந்த ஊழலை அறிந்த அரசு அந்தத் திட்டத் தையே `கொன்று’விட்டது!

நாகம்
நாகம்

பணியாளர்களுக்கு அதிக சம்பளம்...

நமது வீடுகளில் வேலை செய்யவரும் பணிப் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர். இதனால் அவர்கள், வேறிடத்தில் வேலை தேட மாட்டார்கள். காரணம், நீங்கள் கொடுப்பதை விடக் குறைவாகவே வெளியில் கிடைக்கும். அத்துட்டன், அதிக சம்பளம் வாங்குவதால், `அறம் சார்ந்த பொறுப்புணர்வு’ ஏற்பட்டு, அடிக்கடி விடுமுறை எடுப்பதும் குறைந்துவிடும். ஆக ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் பொருளாதாரம் என்பது பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை ஆசிரியர் பல உதாரணங்கள் மூலமும், நிகழ்வுகள் மூலமும் எளிமையாக விளக்கியிருக்கிறார்.

மாம்பழம்
மாம்பழம்

அல்போன்சா மாம்பழத்துக்கு அதிக விலை ஏன்?

நாம் நமக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வி, ‘ஏன் தரமான, சுவையான மாம் பழங்கள் ஏற்றுமதி செய்யப் பட்டு, இந்தியச் சந்தையில் சாதாரணமான விலை குறைந்த மாம்பழங்கள் விற்கப்படுகின்றன’ என்பதாகும். இதுவும் பொருளா தாரம் சார்ந்ததே.

உதாரணமாக, மிகவும் சுவையான அல்போன்சா மாம்பழம் கிலோ ரூ.300 எனவும், சாதாரண மாம்பழம் கிலோ ரூ.30 எனவும் வைத்துக் கொள் வோம். அதாவது, சாதாரண மாம் பழத்தைவிட அல்போன்சாவின் விலை 10 மடங்கு அதிகம். இனி, ஒரு கிலோ கிராம் மாம்பழத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப ஆகும் செலவு ரூ.60 என வைத்துக் கொள்வோம். (இதற்குத் தரம் முக்கியமில்லை. எடைதான் முக்கியம்). இப்போது அல்போன்சாவின் விலை ரூ.360, சாதாரண மாம்பழத்தின் விலை ரூ.90. அதாவது, உயர் தரமான மாம்பழமானது சாதாரண மாம்பழ விலையைவிட 4 மடங்குதான் அதிகம்! (முன்பு போல, 10 மடங்கு இல்லை). எனவே, விலை முன்புபோல அதிக வித்தியாசப்படாத பட்சத்தில், சாதாரணமான மாம்பழத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால்கூட அவற்றின் விற்பனை மிகவும் குறைவாகவே இருக்கும். காரணம், இரண்டு வகையான மாம்பழங்களுக்கு இடையே விலை சற்றே அதிகமாக இருக்கும்பட்சத்தில், அமெரிக்கர்கள் அல்போன்சா மாம்பழத்தைத்தான் வாங்குவார்கள். எனவேதான், சாதாரண மாம்பழ வகைகளைவிட உயர்தரமான வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இடதுகால் செருப்பு
இடதுகால் செருப்பு

இடதுகால் செருப்பைத் திருடும் திருடர்கள்...

ஸ்வீடன் நாட்டில் இருக்கும் மால்மோ நகரக் கடைகளிலிருந்து விலையுயர்ந்த ஷூக்கள், அதுவும் இடது காலுக்கு மட்டுமானது திருட்டுப்போவது அந்த நாட்டு காவல்துறையினருக்கு ஆச்சர்யத்தையும் குழப்பத் தையும் கொடுத்தது. ஒரு காலுக்கு மட்டுமான ஷூவை வைத் துக்கொண்டு திருடர்கள் என்ன செய்ய முடியும் என்பது வியப்புக்குரியதாக இருந்தது. ஒரு நாள், இடதுகால் செருப்பைத் திருடிய திருடர்கள் பிடிபட, அவர்கள் மூலம் பல நாடுகளில் இயங்கி வரும் ஷூ திருடும் `சிண்டிகேட்’ பற்றிய தகவல் தெரிய வந்தது. அதன்படி, ஸ்வீடனின் எல்லையை யொட்டி இருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த நகரொன்றில் இருக்கும் கடைகளில் வலது காலுக்கான ஷூக்கள் மட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து வலதுகாலுக்கான விலையுயர்ந்த ஷூக்களை ஒரு கும்பல் திருடிக் கொண்டி ருந்தது. அதன்பின், இரு நாட்டைச் சேர்ந்த திருடர்களும் அவற்றிலிருந்து ஜோடிகளை உருவாக்கி இரண்டு நாடுகளிலும் விற்றுவந்ததைக் கண்டு பிடித்ததை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறார் புத்தக ஆசிரியர்.

நூலாசிரியர் பொருளாதார நிபுணராக இருந்தாலும் வழக்கமான வரைபடங்கள், சமன்பாடுகள் ஆகியவற்றை உபயோகித்து வாசகர்களைக் குழப்பாமல் எளிமையான நடையில் நாம் தினம் எதிர்கொள்ளும் விஷயங்களுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து எழுதியிருப்பது, இந்தப் புத்தகத்தை விறுவிறுவென படிக்க வைக்கிறது!

பிட்ஸ்

எல்.ஐ.சி-யின் அளிக்கப்பட்ட மூலதனம் (Paid-up capital) தற்போது ரூ.100 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விரைவில் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட இருப்பதால், இதன் அளிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.25,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது!