நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... மக்களுக்கு என்ன பாதிப்பு..?

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

பொருளாதாரம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி சந்தை நிலவரப்படி, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 81.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தக் கடும் சரிவுக்கு காரணங்கள் என்ன?

யூரோ, ஜப்பான் யென் , பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு நிகரான டாலர் மதிப்பின் அளவுகோலான டாலர் இண்டெக்ஸ், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவான 113 என்ற நிலையை எட்டியிருப்பது, உலக அரங்கில் டாலர் தற்போது கோலோச்சுவதைப் பறைசாற்றுகிறது.

சர்வதேச அரங்கில் வலிமை பெறும் டாலர்...

அமெரிக்க கடன் சந்தையில், வட்டி விகிதங்கள் மிக அதிகமாக உயர்ந்திருப்பதே, டாலர் மதிப்பு உயர்வுக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் பெருமளவு உயர்ந்து வருவதால், மற்ற நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

உலகின் மிகக் குறைந்த ரிஸ்க்கைக் கொண்டுள்ள முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்கள் வேகமாக உயர்ந்துவருவது, இந்தியா உட்பட மற்ற நாடுகளின் உள்நாட்டு முதலீடுகள் மீது பெரும் அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. கடந்த 15 நாள்களில் மட்டும் இந்தியாவின் சென்செக்ஸ் குறியீடு 4000 புள்ளிகள் சரிவடைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... மக்களுக்கு என்ன பாதிப்பு..?

ரூபாய் வீழ்ச்சியின் பாதிப்புகள்...

ஏற்கெனவே விரைவாக அதிகரித்துவரும் பணவீக்கத்தால் சாமான்ய மனிதர்கள் கடும் துன்பங்களை அனுபவித்துவரும் தற்போதைய நிலையில், இந்திய ரூபாயின் வீழ்ச்சியின் காரணமாக, பணவீக்கம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

ரூபாய் வீழ்ச்சியானது தகவல் தொழிநுட்பம் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில் துறையினருக்கு நன்மை பயக்கும் என்றாலும், நிகர ரீதியாக இறக்குமதி சார்ந்த நாடாகக் கருதப்படும் இந்தியா போன்ற நாடுகளில் உள்நாட்டு பணமதிப்பு வீழ்ச்சியானது பல சாதகங்களைவிட பாதகங்களையே அதிகம் ஏற்படுத்தும்.

டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவை விட்டு பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறும்பட்சத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு வெகுவாகக் குறைய ஆரம்பிக்கும். நமது அந்நிய செலாவணியின் உச்சபட்ச அளவான 640 பில்லியன் டாலரில் இருந்து சுமார் 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,00,000 கோடி) இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, இந்திய நாணயமான ரூபாய், டாலர், யூரோ போன்று சர்வதேச மாற்று செலாவணியாக இல்லாத நிலையில், பொருளாதாரத்தின் சமநிலையைப் பராமரிக்கப் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு அவசியமானதாகும்.

இந்தியாவின் இறக்குமதித் தேவைகளைச் சமாளிக்க தற்போதுள்ள கையிருப்பு போதுமானதாகக் கருதப்பட்டாலும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம், நீண்டகால நோக்கில் கவலை தரக்கூடியதாகவே உள்ளது.

அதே சமயம், ரூபாய் மதிப்பு சரிவால் உருவாகக்கூடிய அதிகப்படியான பணவீக்கம் மற்றும் குறைவான வட்டி விகிதம், சில முக்கியமான கமாடிட்டி பொருள்களை விற்கும் வியாபாரிகளுக்கும் குறிப்பாக, பதுக்கல் வியாபாரிகளுக்கும் நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் அதிக லாபங்களைத் தேடித் தரும். மேலும், இந்தச் சூழல் (அதிக பணவீக்கம் + குறைந்த வட்டி விகிதம்) தொடர்ந்தால் வங்கியில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள தொழில் அதிபர்களுக்கும் பெருமளவு லாபம் கிடைக்கும்.

ஆனால், பென்ஷன் மற்றும் வங்கி டெபாசிட் வட்டி வருவாய் ஆகியவற்றை மட்டுமே நம்பி வாழும் ஓய்வூதிய தாரர்களுக்கும் பணவீக்கத்துக்கு ஏற்றவாறு வருவாய் உயர வழியில்லாத சாமானிய மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும்.

ரூபாய் வீழ்ச்சி தொடருமா..?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பணவீக்க விகிதம் வேகமாக உயர்ந்து வருகிறபோதிலும், வட்டி விகிதங்கள் அதற்கேற்ப பெருமளவு அதிகரிக்கவில்லை. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்த பிறகு, பொருளாதாரம் சற்றே மீண்டுவரும் தற்போதைய சூழ்நிலையில் வட்டி விகிதங்கள் அதிவேகமாக உயர்த்தப்பட்டால், பொருளாதார மீட்சி தடைபடுமே என்ற அச்சமே ரிசர்வ் வங்கியின் தயக்கத்துக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவைப் போன்று பெருமளவு தினசரி வர்த்தகம் நடைபெறாத இந்தியக் கடன் சந்தையில், அரசு கடன் பத்திர வட்டி விகிதங்கள் அதிகம் உயரவில்லை. எனவே, சர்வதேச முதலீட்டாளர் களின் கவனம் இந்தியாவை விட்டு விலகத் தொடங்கி விட்டது.

உதாரணமாக, சில ஆண்டு களுக்கு முன்னர், இந்திய சந்தையின் கடன் வட்டி விகிதம் அமெரிக்காவைவிட 5% வரை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வித்தி யாசம், 4 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவைவிட ரிஸ்க் அதிகம் உள்ளதாகக் கருதப் படும் இந்திய வட்டி விகித வித்தியாசங்கள் முதலீட்டாளர் களைக் கவரும் அளவுக்கு உயராதபட்சத்தில் உலக முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவுக்கு எதிராக திசை திரும்புவது இயல்பான ஒன்றே.

கடந்த காலங்களில் இது போல ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தபோது, ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்கவும், உள்நாட்டு பணவீக்கத்தைக் குறைக்கவும் வட்டி விகிதங்களை உயர்த்தியது. தற்போதும் அது போல ரிசர்வ் வங்கி முடிவெடுக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.