Published:Updated:

நிதிப் பற்றாக்குறை... பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் பிரச்னை தீருமா?

நிதிப் பற்றாக்குறை
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிப் பற்றாக்குறை

என்ன செய்யப்போகிறது மத்திய அரசு..? - F I S C A L D E F I C I T

நடப்பு 2021-22-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சில தினங்களே உள்ள நிலையில், கொரோனா பேரிடரால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, பின்னர் மெல்ல மீண்டு வருகிற இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஊக்கம் அளிக்கத் தேவையான அரசு தரப்பு நடவடிக்கைள் குறித்தும் அத்தகைய நடவடிக்கைகளுக்காகத் திரட்டப்பட வேண்டிய நிதி ஆதாரங்கள் குறித்தும் ஏராளமான விவாதங்கள் எழுந்துள்ளன. அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை சிறந்ததொரு தீர்வாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை பார்ப்போம்.

மீண்டெழும் பொருளாதாரம்...

நடப்பு நிதியாண்டின் (2020-21) முதல் காலாண்டில் வெகுவாக வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம், மூன்றாவது காலாண்டில் புத்துணர்வு பெறத் தொடங்கியது. கொரோனா பரவல் வேகம் வெகுவாகக் கட்டுக்குள் வந்ததும், கொரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்ததைவிட விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததும் அனைத்துத் தரப்பினருக்கும் நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்தது.

கொரோனா பொது முடக்கத்தில் வழங்கப்பட்ட தளர்வுகள், பன்னாட்டு வர்த்தக வளர்ச்சி, புதிய பொருள்களை வாங்குவதில் மக்கள் காட்டிய ஆர்வம் ஆகியவை உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் நடப்பாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை (GDP Estimates) அதிகரித்தன. வெகு சமீபத்தில், இந்தியாவின் அடுத்த ஆண்டுக்கான (2021) உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை 11.5 சதவிகிதமாக சர்வதேச நிதியமைப்பு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிப் பற்றாக்குறை
நிதிப் பற்றாக்குறை

பட்ஜெட் பற்றாக்குறை...

கொரோனா பேரிடருக்கு முன்பும்கூட இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நிலை மிகச் சிறப்பாக இல்லை. மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப் பட்ட ஜி.எஸ்.டி-யின் மாதாந்தர வரி வசூல் தொடர்ந்து ஏமாற்றம் அளிப் பதாகவே அமைந்ததுடன் மத்திய அரசின் நிதிநிலையையும் வெகுவாகப் பாதித்தது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததும், இந்தியாவில் திருத்தி அமைக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் வரி விகிதங்களும், ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட் கொள்கையும் நிதித் தட்டுப் பாட்டை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர உதவியாக இருந்து வந்தன.

நடப்பு நிதியாண்டில், கொரோனா பெருமுடக்கம் மத்திய அரசின் வரி வருவாயைக் கடுமையாகப் பாதித்தது. கடந்த 07.01.2021 அன்று, மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டின் வரி வருவாய் சுமார் 13% வரை வீழ்ச்சியடையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.2,10,000 கோடி வரை நிதி திரட்டலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா பேரிடரின் தொடர்ச்சியாக, சுமார் ரூ.30,000 – 40,000 கோடி வரை மட்டுமே நிதி திரட்ட முடியும் என்று ஊகங்கள் வெளியாகி வருகின்றன. பாரத் பெட்ரோலியம் விற்பனை மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு வெளியீடு தாமதமானதே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டின் நிலை என்ன..?

‘பணவீக்கத்தை உள்ளடக்கிய உள்நாட்டு மொத்த உற்பத்தி’ (Notional GDP) வரும் நிதியாண்டில் 15% வரை உயரலாம் என்று பரவலாக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மத்திய அரசின் வரி வருவாயும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு (15%) உயர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக மாதாந்தர ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து ரூ.1,00,000 கோடிக்கு மேலேயே உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் செலவினங்கள் மத்திய அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதிக்க வாய்ப்புக்கள் உள்ளன. மேலும், உற்பத்தித் துறையைப் போல, வேகமாக மீட்சியடையாத சேவைத் துறையை ஊக்கப்படுத்து வதற்காக மத்திய அரசு சிறப்பு சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால், நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை தற்போது அடைந்திருப்பதைப் பயன் படுத்திக்கொள்ளும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் விற்பனை மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழக பங்கு வெளியீடு, இதர பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனை ஆகியவை வரும் நிதியாண்டில் (2021-220 கிட்டத்தட்ட ரூ.2,00,000 கோடி அளவுக்கு வருவாயை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் பிரச்னை தீருமா?

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது மக்களின் குடும்ப சொத்துகளை விற்பனை செய்வதற்கு நிகரானவை என்றும் அது தேசநலனுக்கு எதிரானது என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வணிகம் சார்ந்த துறைகளில் ஈடுபடும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால்தான் அவற்றின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும் என்றும் நிதிப் பற்றாக் குறையால் தடுமாறும் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்படும் தனியார் முதலீடு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க உறுதுணையாக இருக்கும் என்பது மறுதரப்பினரால் முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்து. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் தனியார் வசம் முன்னமே ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவற்றின் வீழ்ச்சி தற்போது தடுக்கப் பட்டிருக்கும் என்பது இவர்களது வாதம்.

அதே சமயம், முன்னரே பங்கு வெளியிடப்பட்டிருக்கும் பி.ஹெச்.இ.எல், செயில் போன்ற பொதுத்துறை நிறுவனங் களின் செயல்பாடுகளும் அதே துறையில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக அமையாமல் போனதற்கு நிறுவன செயல்பாடுகளில் அரசின் கட்டுப்பாடுகள் தொடர்வதே முக்கிய காரணம் என்ற மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.

எனவே, பொதுத்துறை நிறுவன பங்குகளைத் தனியாரிடம் ஒப்படைக் காமல், பங்குச் சந்தையில் வெளியிடுவதும், பொதுத்துறை நிறுவனங்கள் முழுக்க முழுக்க தொழிற்முறை வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுவதுமே இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வாக அமையும்.

பிட்ஸ்

ஸ்மார்ட் போன் பிரிவில் சாம்சங் நிறுவனத்தை விட மிக அதிகமான போன்களை விற்று, மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்திருக் கிறது ஆப்பிள் நிறுவனம். கடந்த காலாண்டில் ஒன்பது கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அனுப்பி இருக்கிறது!