நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்... மக்கள் கட்டிய பணம் திரும்பக் கிடைப்பது எப்போது?

அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்

உஷார்

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வங்கிகள், தபால் அலுவலகங்கள் என இருக்கும்போது, மோசடி நிறுவனங்களில் பணத்தைக் கட்டி இழப்பது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. சேலத்தில் செயல் பட்டு வந்த நிறுவனத்தின் செயல்பாடு இப்போது வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது.

சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது அமுத்சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்கிற நிறுவனம். கடந்த ஏழு வருடமாகச் செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுக்க 87 கிளைகள் மூலம் ரூ.56 கோடி பணத்தை மக்களிடம் இருந்து வசூல் செய்து, அந்தப் பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்து வருவதால், இதில் டெபாசிட் செய்த மக்களும், டெபாசிட்டை வாங்கித் தந்த கலெக்‌ஷன் ஏஜென்டுகளும் போராடத் தொடங்கியிருக்கின்றனர்.

2016 ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டதுதான் அமுத்சுரபி எனும் கூட்டுறவு சங்கம். மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலம் துறையின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இது. 12 தலைவர்கள், அவர்களுக்குக்கீழ் ஒரு மேலாளர், ஓர் உதவி மேலாளர், ஒவ்வொரு கிளைகளிலும் சேல்ஸ் ஆபீஸர்ஸ் என்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ராமநாதபுரம் கமுதியில் ஏற்கெனவே அமுதசுரபி என்னும் நிறுவனத்தின் பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கியை இந்த நிறுவனம் வாங்கி, அமுத்சுரபி என்று பெயர் மாற்றம் செய்து, முதல் கிளையாக நடத்தத் தொடங்கியது. சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் பணத்தை தினசரி வசூலித்து, அதை ஆண்டு இறுதியில் வட்டியுடன் முழுத் தொகையையும் தருவதாகக் கூறிவந்தது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் மதுரைக் கிளையை மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்திருக்கிறார்.

அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்... மக்கள் கட்டிய பணம் திரும்பக் கிடைப்பது எப்போது?

தினந்தோறும் ரூ.100 என்கிற கணக்கில் ஆறு மாதம், ஒரு வருடம், 2 வருடம் எனப் பல கால அளவுக்கான திட்டங்களை நடத்திவந்தது இந்த நிறுவனம். இதற்கு ஆண்டுக்கு 6.5% வட்டி தருவதாகச் சொன்னது. தவிர, இந்த நிறுவனத்தின் ஏஜென்டுகள் வீட்டுக்கே வந்து பணத்தை வாங்கிக்கொண்டு சென்றது மக்கள் இதில் பணம் கட்ட முக்கியமான விஷயமாக இருந்தது. மேலும், மக்கள் கட்டும் பணம் அன்றைய தினமே அவர்களின் கணக்கில் வரவு வைக்கப் பட்டதாக எஸ்.எம்.எஸ் வருவதைப் பார்த்து, இந்த நிறுவனத்தில் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். இதனால், பல ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வாரம்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பணம் கட்டினர். இது தவிர, 12.5% வட்டி தரும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தையும் நடத்திவந்தது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக இருந்த பிரேம் ஆனந்த் என்பவர் தனது சொந்தத் தேவைக்குப் பல கோடி ரூபாய் எடுத்து செலவு செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இந்த சச்சரவைத் தொடர்ந்துதான், மக்கள் கட்டிய பணத்தைத் திரும்பத் தருவது நிறுத்தப் பட்டதாக இதில் கட்டியவர்கள் சொல்கிறார்கள்.

அமுத்சுரபி நிறுவனத்தில் பணத்தைக் கட்டி இழந்த சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த வாடிக்கையாளர் சையத் பாஷாவிடம் பேசினோம். “நான் சேலத்தில் பேக்கரிக் கடை நடத்தி வருகிறேன். மூன்று வருடத்துக்கு முன் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் என்னை அணுகி, இந்த நிறுவனத்தில் சேர வைத்தனர். நான் இந்தத் திட்டத்தில் சேர்ந்து இரண்டு முறை பணம் போட்டு வட்டியுடன் திரும்ப வாங்கி இருக்கிறேன். அதனால் நம்பிக்கையோடு மூன்றாவது முறையாகவும் பணம் கட்டி னேன். ஆனால், இந்த முறை நான் ரூ.2,70,000 கட்டி முடித்த பின்னும், எனக்குத் திரும்பத் தர வேண்டிய பணத்தைத் தராமலே இருக்கின்றனர்.

இது குறித்து ஏரியா கலெக்‌ஷன் ஏஜென்ட்டுகளிடம் கேட்ட போது சரியான விளக்கம் தரவில்லை. என்னைப் போல, தாதகாப்பட்டி, ஆத்தூர், கூகை, கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி யுள்ளனர். ஆனால், பணம் எப்போது கிடைக்கும் என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. இது குறித்து சேலம் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தும் எந்தவித விசாரணையும் நடத்தப் படவில்லை’’ என்றார்.

அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்... மக்கள் கட்டிய பணம் திரும்பக் கிடைப்பது எப்போது?

அமுத்சுரபி நிறுவனத்தில் கமுதி பகுதியின் சேல்ஸ் மேனேஜரான மணிவண்ணனிடம் பேசினோம். “நான் அமுத்சுரபி நிறுவனத்தில் கமுதி பகுதியின் சேல்ஸ் மேனேஜராக சேர்ந்தேன். என் உறவினர்கள் பலரை இதில் வாடிக்கை யளார்களாகச் சேர்த்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்று அமுத்சுரபியில் செலுத்தி வந்தேன். கடந்த ஆறு மாதங் களாக அமுத்சுரபி நிறுவனத்தில் பணம் கட்டி முடித்த வாடிக்கை யாளர்களுக்குப் பணத்தைத் திரும்பத் தரவில்லை. இது குறித்து சேலம் தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, அங்குள்ளவர்கள் யாரும் முறையான பதில் தரவில்லை.

பின்னர், இந்த நிறுவனத்தின் தலைவர் தங்கப்பழம் எங் களிடம் பேசியபோது, வாடிக்கை யாளர்களின் பணத்தை ரியல் எஸ்டேட்டில் போட்டுள்ள தாகவும், அதிலிருந்து பணம் வந்த பிறகுதான் தர முடியும் என்றும், பொது மேலாளர் பிரேம் ஆனந்த் கூட்டுறவு சங்கத்தின் நிதியைத் தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார் என்றும் கூறினார்.

எங்களை நம்பி பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் தற்போது பணம் கேட்டு எங்கள் கழுத்தை நெருக்குகிறார்கள். இது குறித்து சேலத்தில் உள்ள பொருளா தாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவர் ஜெயவேல், சங்கத்துக்கு புதிய நிறுவனத்தின் நிதி உதவி பெற்றிட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட் டுள்ளது. எனவே, வாடிக்கையாளர் களுக்கு முதிர்வுத் தொகையை வருகிற ஆகஸ்ட் 16-ம் தேதி கிடைக்கும் எனக் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தித் தாளில் விளம்பரம் வெளியிட்டார். ஆனால், இதுவரை எந்தப் பணமும் யாருக்கும் வழங்கப்படவில்லை’’ என்றார்.

அமுத்சுரபி நிறுவனத்தை நடத்திவந்தவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றனர், மக்களிடம் வாங்கிய பணத்தை அவர்களுக்குத் திரும்பத் தராதது ஏன், மக்கள் கட்டிய பணம், அவர்களுக்கு எப்போது திரும்பக் கிடைக்கும் என்கிற கேள்விகளை அமுத்சுரபி நிறுவனத்தின் சேர்மன் ஜெயவேலிடம் கேட்டோம். “வாடிக்கையாளர்களின் பணத்தைப் பொது மேலாளராக இருந்த பிரேம் ஆனந்த் கையாடல் செய்துவிட்டார். இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பணம் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் நான் பொறுப்பேற்று ஆறு மாத காலம்தான் ஆகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஏற்காட்டில் சங்கத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முடிவு செய்துள்ளோம். மேலும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பிரேம் ஆனந்த் மீது காவல் துறையில் புகார் அளித்தும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்’’ என்றார்.

அமுத்சுரபி கூட்டுறவு சங்கம்... மக்கள் கட்டிய பணம் திரும்பக் கிடைப்பது எப்போது?

இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த தங்கப்பழத்தை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவரது வீட்டு முகவரியைத் தேடிச் சென்றபோது, அவர் அந்த வீட்டி லிருந்து வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்திருப்பது தெரிந்தது. மக்களுக்குப் பணம் தராதது ஏன் என அவர் செல்போனுக்குத் தகவல் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பொதுமேலாளரராக இருந்த பிரேம் ஆனந்த்துடன் பேச அவருடைய செல்போன் நம்பருக்கு போன் செய்தோம். நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக நமது கேள்விகளைக் கேட்டு அனுப்பிய குறுஞ்செய்திக்கும் எந்தப் பதிலும் வரவில்லை.

ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்று, அதன் சட்ட திட்டங்களின்படி நடக்கும் வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் நமது பணத்தை டெபாசிட் செய்யலாமே தவிர, இது மாதிரியான கூட்டுறவு சங்கங்களில் பணத்தை டெபாசிட் செய்யக் கூடாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மாதிரியான நிறுவனங்களுக்குப் பணத்தை டெபாசிட்டாகப் பெற்றுத் தரும் வேலையை ஏஜென்டுகளும் செய்யக் கூடாது என உணர வேண்டும்.

இந்த விஷயத்தை ஆளும்கட்சியினரோ, எதிர்க்கட்சி யினரோ அக்கறையுடன் பேசினால்தான் மக்களின் பணம் திரும்பக் கிடைக்கும். மக்கள் இனியாவது விழிப்புடன் செயல்படுவார்கள் என நம்புவோம்!