அரசு ஊழியர்கள், டாக்டர்களைக் குறிவைத்து ரூ.500 கோடி மோசடி... பலே, சேலம் ‘ஜஸ்ட் வின்!’

மோசடி
தமிழகத்தின் பல நகரங்களில் மோசடித் திட்டங்கள் ஜோராக நடந்து வந்தாலும், அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்தும் வேலையை செய்த மாதிரி தெரியவில்லை. மக்கள் பணம் கோடிக் கணக்கில் கொள்ளை போன பிறகுதான் காவல்துறை விழித்துக்கொண்டு தடுப்பு நடவடிக்கையில் இறங்கு கிறது. அப்பாவி மக்களின் பணத்தைக் கோடிக் கணக்கில் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் அலுவல கங்கள் மற்றும் வீடுகள் சமீபத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரின் சோதனைக்கு உள்ளாகியது.

சேலம் தாதகாப்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். சேலத்தை மையமாகக் கொண்டு ‘ஜஸ்ட் வின்’ (Just Win) என்னும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் 20,000 ரூபாய் 12 மாதங்களுக்குத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பணம் வசூலித்தார். இவர் சொன்னதை நம்பி பலரும் பணம் கட்டிய நிலையில், சென்னை, சேலம், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் எனத் தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்டோர் ரூ.500 கோடிக்கு மேலாகப் பணம் கட்டியுள்ளனர்.
பணம் கட்டியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக எவ்விதத் தொகையும் கொடுக் காமல் இருக்க, ஒரு கட்டத்தில் பணம் தந்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கவே, தன்னை காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்தார். இதனால் சிறிது காலம் எந்தவித வழக்கு களும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வந்தார். காவல் துறையும் இவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டி வந்தது.

இதற்கிடையே சேலம் பொருளாதார குற்றப் பிரிவில் சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராஜ் என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘ஜஸ்ட் வின்’ நிறுவனத் தில் ரூ.2 லட்சம் முதலீடு செலுத்தினேன். என்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித் திருந்தார். மேலும், ஒரு மாதத்துக்கு முன் சம்பந்தப் பட்ட ‘ஜஸ்ட்வின்’ நிறுவனத்தை முற்றுகையிட்டு 50-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் வீடுகளில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ஆறு கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமரா பதிவுகள், பீரோவில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ‘ஜஸ்ட் வின்’ நிறுவனத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியத்திடம் காவல்துறையினர் விசாரித்தனர். இவர், 2018-ம் ஆண்டு தற்போது அமைந்துள்ள அலுவலக முகவரியிலேயே ‘காயின் டோனா’ என்னும் கிரிப்டோகரன்சி திட்டத்தை நடத்தி, பல கோடி வசூல் செய்து, பின்னர் தலைமறை வாக இருந்தது தெரியவந்தது.

இந்த மோசடிக்குப் பிறகு, சிறிது காலம் அமைதியாக இருந்தவர், பிற்பாடு ‘ஜஸ்ட் வின்’ என்னும் இந்த நிதி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் காவல்துறையினரால் குறிப்பிடப்படும் ‘வொயிட் காலர் பிசினஸ்” என்று கூறப்படும் மோசடிகளில் இவர் முக்கியமான புள்ளியாகச் செயல்பட்டு வந்துள் ளார் என்று காவல்துறைத் தரப்பில் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ‘ஜஸ்ட் வின்’ நிதி நிறுவனத் தில் பணம் கட்டி ஏமார்ந்த சிலரிடம் பேசினோம், “ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.20,000 கிடைக்கு தேன்னுதான் நாங்க பணத்தைக் கட்டினோம். நாங்க ரெண்டு முறை பணம் கட்டி திரும்ப வாங்கி யிருக்கோம். மூணாவது முறை பெரிய தொகையாகக் கட்டுனப்ப, பணத்தைத் தராம ஏமாத்தினாங்க. அதிலும் போலியான செக்கைக் கொடுத்து ஏமாத்தினாங்க.
‘ஜஸ்ட்வின்’ நிறுவனத்துல பலதரப்பட்ட மக்கள் பணத்தை முதலீடு செஞ்சிருந்தாலும், அரசு ஊழியர்களும், பெரிய பெரிய மருத்துவர்களும்தான் அதிக அளவுல பணத்தை முதலீடு செஞ்சாங்க. மக்கள் கட்டுன பணத்தை வச்சு பாலசுப்ரமணியம் தன் பெயரிலும், தன் குடும்பத்தார் பெயரிலும் பல இடங்களில் சொத்து வாங்கியிருக்காரு. மேலும், தன் குடும்பத்தாருக்கு மட்டும் தெரியும் வகையில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு ஒன்றை ஆரம்பிச்சிருக்காரு. இது குறித்து பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தும், அந்த நபர் ஒரு செல்வாக்கான கட்சியில் இருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டி வந்தனர். பின்னர், அலுவலகம் முற்றுகையில் ஈடுபட்டபோதுதான் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர் காவல்துறையினர்” என்றனர்.
இவர் பா.ஜ.க-வின் பெயரைத் தவறாகப் பயன் படுத்தி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சேலம் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் மாநகர காவல் ஆணை யரிடம் புகாரும் அளித்திருப்ப தாகவும் சொன்னார் சேலம் பா.ஜ.க தலைவர் சிவராமன்.

மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டிருந்தாலும் இந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர் களுக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மாதம்தோறும் 10% முதல் 20% வரை வருமானம் தருவோம் என்று யாராவது சொன்னால், அதை மக்கள் எப்படி நம்பு கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. வங்கி எஃப்.டி-யில் ஆண்டுதோறும் 7% - 8% கிடைத் தாலே அதிகம் என்று இருக்கும் நிலையில், மாதம்தோறும் 10% வருமானம் தருவோம் என்று சொல்வதை நம்பி பணத்தைக் கட்டும் விநோதம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
படிப்பறிவு இல்லாத சாதாரண மக்கள் இப்படி நம்பி பணத்தைக் கட்டுவது ஒருபக்கம் எனில், அரசு ஊழியர்களும் டாக்டர்களும் இந்த மோசடித் திட்டங்களில் பணத்தை இழப் பது அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது. மதுரை, திண்டுக்கல், தொழுதூர் எனப் பல்வேறு நகரங்களில் நடக்கும் இது போன்ற திட்டங்களில் மக்கள் பணம் கட்டாமல் தவிர்ப்பது அவசியம். இல்லாவிட்டால், பெரும் நஷ்டம் அடைய வேண்டியிருக்கும்!