தென்னிந்திய தொழில்துறையின் முன்னோடியாக விளங்கிய சன்மார் குழுமத்தின் தலைவர் என். சங்கர் (77) ஞாயிறு அன்று உடல் நலகுறைவு காரணமாக காலமானார்.
சங்கரின் குடும்பம் பிசினஸில் கோலோச்சியது. இவரது தாத்தா சங்கரலிங்க ஐயர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற சங்கர், 1972-ம் ஆண்டு தனது தந்தையின் நிறுவனமான கெம்ப்ளாஸ்ட்டில் இணைந்தார். அப்போது அவரின் வயது 26.
பிசினஸில் பல முன்னெடுப்புகளைச் செய்த சங்கர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழில் துறைக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். டெக்னாலஜி பின்புலம் இருப்பதால் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக பல தொழில்களில் சங்கர் கவனம் செலுத்தினார். பேயர், கேபோட் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பல நிறுவனங்களை நடத்தினார்.

கிரிக்கெட் மற்றும் டென்னிஸில் ஆர்வம் மிக்கவர். இவர்களது குழுமம் இரண்டு கிரிக்கெட் க்ளப்களை நடத்தியது. சங்கர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஐஐஎம் கோழிக்கோடுவின் இயக்குநர் குழுவிலும் சங்கர் இருந்திருக்கிறார். தவிர பல நிறுவனங்கள், கல்வி அமைப்புகளிலும் இவரின் பங்களிப்பு இருக்கிறது.
டை(TiE) உள்ளிட்ட பல அமைப்புகள் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கி இருக்கின்றன. இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தொழில்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.