தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.25,000+... 25 வயதில் கோடீஸ்வரர்... - உங்கள் குழந்தைக்கு வாழ்நாள் பரிசு!

உங்கள் குழந்தைக்கு வாழ்நாள் பரிசு!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் குழந்தைக்கு வாழ்நாள் பரிசு!

உங்கள் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் ரூ.25,000 முதலீடு செய்து, குழந்தையின் 25-வது பிறந்தநாள் வரை முதலீட்டுத் தொகையுடன் ஆண்டுதோறும் 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே வாருங்கள்

25 வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் உங்கள் பெற்றோர் உங்களிடம் ஒரு கோடி ரூபாயை கொடுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்..?! `அட போங்கய்யா... கல்யாணத்தையே கடன் வாங்கி முடித்துவிட்டு லோன் கட்டச் சொல்லிவிட்டார்கள்' என எரிச்சல் அடைவது புரிகிறது. சரி, உங்களுக்குக் கிடைக்காத இந்த வாய்ப்பை, உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள். உங்கள் குழந்தையின் 25-வது வயதில் ஒரு கோடி ரூபாய் சேர்த்துக் கொடுங்களேன். `நடக்கறத சொல்லுங்க பாஸ்...' என்கிறீர்கள்தானே.

எதிர்காலத்தில் பணச் சிக்கலால் உங்கள் குழந்தைகளின் இளமைக் கால வாழ்க்கையின் மகிழ்ச்சி தொலைந்துவிடாமல் இருக்க நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். உங்களுக்கு 25 வயதில் கிடைக்காத நிதிச் சுதந்தரம் நிறைந்த வாழ்க்கையை உங்கள் பிள்ளை களுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும். உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் 25 வயதில் அவர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க உங்களால் முடியும்.

‘ஸ்கூல் ஃபீஸ் கட்டவே படாதபாடு பட வேண்டியிருக்கு... நம்ம எதிர்காலமே கேள்விக்குறியா இருக்குறப்ப, பிள்ளைகளுக்கு...' என எரிச்ச லடைய வேண்டாம். வருமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாதவர் களுக்கு மந்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்க முடியாது. ஆனால், குடும்ப மாத வருமானம் ரூ.50,000 - ரூ.1 லட்சம் என இருப்பவரா நீங்கள்... சரியான நிதித் திட்டமும், முதலீட்டுத் திட்டமும் இருந்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகளை கோடீஸ்வரர் ஆக்க முடியும்.

ஆண்டுக்கு ரூ.25,000+... 25 வயதில் கோடீஸ்வரர்... - உங்கள் குழந்தைக்கு வாழ்நாள் பரிசு!

‘எனக்கு மாத வருமானம் ரூ.30,000, ரூ.40,000 மட்டுமே. நான் கட்டுரை யைப் படிப்பது வேஸ்ட்டா...’ என்பவர்களும் தொடர்ந்து படியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு கோடி ரூபாய் சேர்த்துக் கொடுக்க முடியாவிட்டாலும் 20 லட்சம், 30 லட்சமாவது சேர்த்துக் கொடுக்கலாமே!

“நீங்கள் நினைக்கும் அளவுக்கு வாழ்க்கையை ‘வாழாமல்’ அடக்கி ஒடுக்கி சுருக்கிக்கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு கோடிப் பணம் சேர்க்க வேண்டாம். இயல்பான தேவைகளை நிறைவேற்றிக்கொண்டே சுலபமாகச் சேர்க்க முடியும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகரும் மைஅஸெட்ஸ் கன்சாலிடேஷன் நிறுவனருமான (myassetsconsolidation.com) சுரேஷ் பார்த்தசாரதி. ``அதற்கு நீங்கள் அவசியம்... அத்தியாவ சியம்... அநாவசியம்... இந்த மூன்றுக்குமான அர்த்தங்களை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு அநாவசியங்களை மட்டும் அடையாளம் கண்டு நீக்கிவிட்டீர்கள் என்றால் போதும்” என்றவர், எப்படியென விளக்குகிறார்...

``ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தைகளின் மேற் படிப்பு, திருமணம் மற்றும் தன் ஓய்வுக்காலம் என மூன்று முக்கிய இலக்குகள் இருக்கும்; இருக்க வேண்டும். இவற்றோடு நான்காவது இலக்காக குழந்தைகளைக் கோடீஸ்வரர் ஆக்கும் இலக்கையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

‘குழந்தைகளின் படிப்பு, திருமண இலக்குகளுக்கு சேர்க்கவே படாதபாடுபடும்போது இவர்களின் கனவு வாழ்க்கையைக் கட்டி அமைக்க எப்படி பணம் ஒதுக்கி சேமிப்பது' எனப் பல பெற்றோர்கள் கேட்கலாம். கொஞ்சம் நிதி சார்ந்த தெளிவைப் பெற்றிருந்தால் நிச்சயமாக முடியும். உங்கள் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் ரூ.25,000 முதலீடு செய்து, குழந்தையின் 25-வது பிறந்தநாள் வரை முதலீட்டுத் தொகையுடன் ஆண்டுதோறும் 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே வாருங்கள். உங்கள் குழந் தையைப் பணக்காரர் ஆக்கிவிடலாம் (பார்க்க அடுத்த பக்கப் பெட்டிச் செய்தி).

இந்தச் சிறப்பு இலக்குக்காக அநாவசியமான ஆடம்பரங்களைக் கொஞ்சம் குறைத்தாலே போதும். ‘அநாவசியம், ஆடம்பரம் அப்படின்னா எதைச் சொல்றீங்க...’ எனக் கேட்பவர் களுக்கு சின்ன உதாரணம் மூலம் சொன்னால் சுலபமாகப் புரியும்.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

திருச்சியைச் சேர்ந்த சிவராம் பெரிய நிறுவனம் ஒன்றில் இன்ஜினீயர். சம்பளம் ரூ.70,000. பக்கத்து வீட்டுக்காரர் தன் 10 வயது மகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாடினார். சில லட்சங்களைச் செலவு செய்தார். அவரைப் பார்த்து தன் நான்கு வயதுக் குழந்தைக்கு பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடினார் சிவராம். பக்கத்து வீட்டுக்காரர் பல பிசினஸ் செய்து வருபவர். கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார். அவரைப் பார்த்து மாதச் சம்பளம் வாங்கும் சிவராமும் செய்ய வேண்டிய அவசியம் என்ன..? குழந்தை களின் மகிழ்ச்சிக்காகப் பிறந்தநாள் கொண் டாடுவதில் தவறில்லை. கேக், டிரஸ், சாப்பாடு என இன்னும் சில செலவுகள் செய்தாலும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினால் 10,000 ரூபாய்க்குள் மட்டுமே செலவாகியிருக்கும். ஆனால் ரூ.1 லட்சம் செலவு செய்து கொண் டாடினார் சிவராம்.

3,000 - 4,000 ரூபாய்க்கு கம்பி மத்தாப்பு வாங்கிக் கொண்டாடி மகிழ வேண்டிய தீபாவளிக்கு 30,000 ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கினார். அவசியத்துக்கும் ஆடம்பரத்துக்கு மான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாததால் இன்னும் அவர் பற்றாக்குறை பட்ஜெட்டில்தான் வாழ்ந்து வருகிறார். நான்கு பேர் கொண்ட நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலும் மாதம் இரண்டு முறை சினிமா, இரண்டு முறை ஹோட்டல் என மாதம் 4,000-க்கு மேல் செலவு செய்கிறார்கள். இவர்கள் இதை மாதம் ஒரு முறை சினிமா, ஒருமுறை ஹோட்டல் எனத் திட்டமிட்டாலே மாதம் 2,000 ரூபாய் வரை மிச்சப்படும்.

நான்கு பேர் கொண்ட பல குடும்பங்களில் நான்கு செல்போன்கள் வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும் செல்போன் வாங்கிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளின் தேவைக்கு பெற்றோர் செல்போனையே பயன்படுத்த லாமே. செல்போன் விஷயத்தில் அவசியம் ஆடம்பரத்தை உணர்ந்துகொண்டாலே ரீசார்ஜ், இன்டர்நெட் கட்டணம் மட்டுமே ரூ.500 - 1,000 வரை மிச்சப் படும். ஆன்லைனில் பார்த்த சில பொருள்கள் அழகாக இருக்கின்றன என்பதற்காகவே தேவை இல்லாவிட் டாலும் வாங்கிவிடுகிறார்கள் மிடில் கிளாஸ் குடும்பத்தினர். அவசியம் தேவையா என நூறு முறை யோசித் தாலே, சில ஆயிரங்கள் மிச்சப்படக் கூடும்.

இன்றைக்கு நடுத்தர குடும்பங்களில் பலருக்கும் பர்ச்சேஸ் மேனேஜ்மென்ட் குறித்து கொஞ்சமும் தெரிவதில்லை. சூப்பர் மார்க் கெட்டுகளில் பலரும் விலையைக்கூட பார்க் காமல் தேவையில்லாத பொருள்களை கூடை யில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம். எந்தப் பொருளை மொத்த விலை கடைகளில் வாங்கலாம், எந்தப் பொருளை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கலாம், எந்தப் பொருளை காய்கனி சந்தைகளில் வாங்கலாம் என சோம்பேறித்தனம்படாமல் திட்டமிட் டால் மாதந்தர அடிப்படை அத்தியாவசிய செலவில் 5 - 10 சதவிகிதம் மிச்சப்படும்.

நடுத்தர குடும்பங்களில் வாய்ப்பு இருப் பவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்தினால் மாதாந்தர போக்குவரத்துச் செலவு 20 - 40 சதவிகிதம் மிச்சப்படும். உதாரணத்துக்காக சிலவற்றை மட்டுமே சொல்லியுள்ளேன். அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவிர்க்கப்படக்கூடிய ஆடம் பரங்களும் அநாவசியங்களும் ஏராளமாக இருக்கலாம்.

நிஜமாகவே தேவை இருப்பவர்கள் வருத்திக் கொள்ள வேண்டியதில்லை. நிஜமான தேவை, தேவையற்ற ஆடம்பரம் - இந்த இரண்டு வார்த்தைகளை உங்களின் எல்லாவிதமான நிதி சார்ந்த நடவடிக்கைகளின்போதும் உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொண்டாலே போதும்; எந்தவித சிரமமும் இல்லாமல் உங்கள் குழந்தைகளைக் கோடீஸ்வரர் ஆக்கும் இலக்குக்கு முதலீட்டுத் தொகையைச் செலுத்தி விடலாம்” என்று முடித்தார் அவர்.

கொஞ்சம் மெனக்கெடுங்கள்... மகிழ்ச்சி யாகவே ஆரம்பியுங்கள்... நீங்கள் வாழக் கிடைக்காத சுதந்திர வாழ்க்கையை உங்கள் குழந்தைகள் வாழ்வார்கள்!

*******

எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு!

ஆண்டுக்கு ரூ.25,000+... 25 வயதில் கோடீஸ்வரர்... - உங்கள் குழந்தைக்கு வாழ்நாள் பரிசு!

எப்படி முதலீடு செய்வது..?

ஆண்டுக்கு ரூ.25,000 என்பதை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' (SIP) முறையில் முதலீடு செய்யத் திட்டமிடுங்கள். சுலபமாக முதலீடு செய்ய ஏதுவாக மாதம்தோறும் எனப் பிரித்துக்கொண்டால், ரூ.2,083 முதலீடு செய்ய வேண்டிவரும். 2,100 என வைத்துக்கொள்வோம். மாதம்தோறும் ரூ.2,100 இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்து, ஆண்டுக்கு 10% முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொண்டே வந் திருக்கும்பட்சத்தில் (Step Up) 25 ஆண்டு களில் (கடந்தகால வருமானம் 12.8%) ரூ.1 கோடியைத் தாண்டி முதிர்வுத் தொகை கிடைத்திருக்கும் (பார்க்க அட்டவணை 1).

இதே ஃபண்டில் மேற்கண்டவாறு முதலீடு செய்து, குறைந்தபட்சம் 12% வருமானம் கிடைத்தாலும் 25 ஆண்டுகளில் ரூ.89 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது (பார்க்க அட்டவணை 2). ஆண்டுதோறும் 10% முதலீட்டை அதிகரிக்க இயலாத நிலை யில் மாதம்தோறும் ரூ.2,100 முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் 25 ஆண்டுகளில் ரூ.39 லட்சத்துக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. (பார்க்க அட்டவணை 3).

அதிகம் ரிஸ்க் எடுக்க முடியாது என் பவர்கள் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து, ஆண்டுக்கு 10% ஸ்டெப்அப் செய்து வந்தால், 25 ஆண்டுகளில் ரூ.51 லட்சத்துக்கு மேல் (வருமானம் 7.5% என்ற அடிப்படையில்) கிடைக்க வாய்ப்புள்ளது (பார்க்க அட்ட வணை 4). இதே முதலீட்டில் ஸ்டெப்அப் செய்யாவிட்டால்கூட ரூ.18 லட்சத்துக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது (பார்க்க அட்ட வணை 5).

முதலீட்டுத் தன்மைக்கும், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கும் ஏற்ப அதிகபட்சம் ரூ.1 கோடிக்கு அதிகமாகவும், குறைந்தபட்சம் ரூ.18 லட்சம் என்ற அளவிலும் உங்கள் குழந்தையின் 25-வது வயதில் பணம் சேர்த்துக் கொடுக்க முடியும். வெறுங்கையுடன் வாழ்க்கையைத் தொடங்குவதற்குப் பதிலாக குறைந்தபட்சத் தொகை கிடைத்தாலும் மகிழ்ச்சிதானே!