Published:Updated:

நிம்மதி தரும் நிதிச் சுதந்திரம்... உங்களுக்கு எத்தனை மார்க்..?

நிதிச் சுதந்திரம்...

கவர் ஸ்டோரி

நிம்மதி தரும் நிதிச் சுதந்திரம்... உங்களுக்கு எத்தனை மார்க்..?

கவர் ஸ்டோரி

Published:Updated:
நிதிச் சுதந்திரம்...

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு 74-வது சுதந்திர தினம். நம் நாடு சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டைத் தொடும் நிலையிலும், நம்மில் பல கோடி பேர் நிதிச் சுதந்திரம் அடையவில்லை என்பதுதான் உண்மை. நிதிச் சுதந்திரம் என்றால் என்ன?

சொக்கலிங்கம் பழனியப்பன் 
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் 
(www.prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

இந்த வார்த்தையைப் பலரும் பல அர்த்தம் தரும்படி பயன்படுத்துகிறார்கள். புரிந்து கொள்ள எளிதாகச் சொல்ல வேண்டும் எனில், இன்றே ஒருவரின் சம்பாத்தியம் நின்றுவிட்டால், அவர் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அவரது தினசரி செலவுகளைச் சமாளித்து இதற்கு முன்னர் இருந்ததுபோல் வாழ்க்கையைத் தொடர முடிவதுதான் நிதிச் சுதந்திரம்.

நிம்மதி தரும் நிதிச் சுதந்திரம்...
உங்களுக்கு எத்தனை மார்க்..?

இன்னும் சிலர், தங்களது கடன்கள் எல்லாம் கட்டி முடிந்துவிட்டால், தாங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கருதுகிறார் கள். இளைஞர்கள் தாங்கள் சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், தாங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

இதுபோல் இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும், நாம் முதலில் சொன்ன அர்த்தத்தையே மையமாக வைத்துக் கொள்வோம். இந்த நிதிச் சுதந்திரத்தை எப்படி அடைவது? காரணம், ஒரே நாளில் வேலை யையோ, செய்யும் தொழிலையோ பலராலும் விட்டுவிட முடியாது. ஆகவே, நிதிச் சுதந்திரம் என்பது ஒரு இலக்கு நோக்கிய பயணம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

மகாத்மா காந்தியின் தலைமையில் நாடே திரண்டு போராடி, நமக்கு சுதந்திரம் கிடைத்தது போல, நமது தனிப்பட்ட நிதிச் சுதந்திரத்துக்கு யாரும் போராட மாட்டார்கள். நம்முடைய நிதிச் சுதந்திரத்துக்காக நாம்தான் போராட வேண்டும். நமக்கான நிதிச் சுதந்திரத்தை நாமே அடைய வேண்டுமெனில், அதற்கு என்ன செய்ய வேண்டும், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி பிறக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலை இந்தக் கட்டுரையில் விளக்கமாகச் சொல்லி இருக்கிறோம்.

நீங்கள் நிதிச் சுதந்திரம் பெற்றவரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள கீழே ஒரு செல்ஃப் டெஸ்ட்டையும் தந்திருக்கிறோம். அந்த செல்ஃப் டெஸ்ட்டை செய்தால், நீங்கள் எவ்வளவு தூரம் நிதிச் சுதந்திரம் அடைந்திருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு விட முடியும்.

நிம்மதி தரும் நிதிச் சுதந்திரம்...
உங்களுக்கு எத்தனை மார்க்..?
நிம்மதி தரும் நிதிச் சுதந்திரம்...
உங்களுக்கு எத்தனை மார்க்..?

சரி, நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைவதற்கு என்னென்ன விஷயங்களைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1. மருத்துவக் காப்பீடு: இது மிகவும் அடிப்படையான ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பத் துக்கும், தனிநபருக்கும் சரி இது இன்றியமையாததாகும். இன்றைய சூழலில், குறைந்தது ரூ.10 லட்ச மாவது ஒவ்வொரு நபருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வேறு தேவைகளுக்காக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் மருத்துவச் செலவுக்காகக் கரைந்து போகும் நிலை ஏற்படலாம். 45 வயதைத் தாண்டியவர்கள், தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் காப்பீட்டு பாலிசியைத் தந்திருந்தாலும், தங்களது ஓய்வுக்காலத்தைக் கருத்தில்கொண்டு, தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்வது அவசியத்திலும் அவசியம்.

2. ஆயுள் காப்பீடு: ஆயுள் காப்பீடு என்று சொன்ன வுடனேயே, பலரும் சென்று எண்டோவ்மென்ட் பாலிசி, ஹோல் லைஃப் பாலிசி, மணிபேக் பாலிசி என்று எடுத்து விடுகிறார்கள். அதுபோன்ற பாலிசிகளில் போதுமான அளவு ஆயுள் காப்பீடும் கிடைக்காது. பணவீக்கம் தாண்டிய வருமானமும் கிடைக்காது. அவை இரண்டுங் கெட்டான் பாலிசிகளாகும். பாலிசிதாரர்களுக்கு எப்போதுமே சிறந்தது டேர்ம் லைஃப் பாலிசிகள்தான். அதையும் ஏதோ கொஞ்சம் எடுத்தால் போதாது. ஒருவரின் மாதச் சம்பாத்தியத்தைப் போல் 240 மடங்கு இருக்க வேண்டும் அல்லது ஆண்டு வருமானத்தைப்போல 20 மடங்காவது இருக்க வேண்டும். இன்றைய கொரோனா சூழலில் யார் எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்படு வார்கள் அல்லது யார் எப்போது உயிர் இழப்பார்கள் என்பது தெரியாத நிலையில், மருத்துவக் காப்பீடும், டேர்ம் இன்ஷூரன்ஸும், ஒரு கட்டடத்துக்கு பலமான அடித்தளம் முக்கியம்போல, நம் வாழ்க்கைக்கு முக்கியமாகும்.

3. எமர்ஜென்சி ஃபண்ட்: நாம் அனைவரும் இன்று ஒரு வேகமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நேற்று வரை பல நூற்றாண்டுகளாக இருந்த பல தொழில்கள் இன்றைய தினத்தில், கொரோனாவுக்குப் பிறகு தத்தளிக் கின்றன. கோயில்கள், சினிமா தியேட்டர்கள், ரயில்கள், பேருந்துகள், ரெஸ்டாரன்டுகள், ஹோட்டல்கள் போன்ற பல தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. இந்தத் துறையில் வேலை செய்த / செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் கொரோனா முடியும்வரை பிரச்னைதான். இன்றுவரை வேலையில் இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்பதே யதார்த்தம். அல்லது நிறுவனங்களே மூடப்படும் நிலையே உள்ளது. இதுபோன்ற தருணங்களைச் சமாளிக்க, எமர்ஜென்சி ஃபண்ட் அவசியமாகிறது.

இன்றைய சூழலில் 12 மாதச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எமர்ஜென்சி ஃபண்டாக வங்கிகளிலேயோ, லிக்விட் / அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயோ பணத்தை முதலீடு செய்து வைத்திருப்பது அவசியம். குறைந்தபட்சம் ஆறு மாதச் செலவுகளுக்கான பணத்தை யாவது ஒவ்வொருவரும் கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நீங்கள் வேறு வேலையைத் தேட முடியும் அல்லது மற்றொரு தொழிலை ஆரம்பிக்க முடியும்.

4. கடன்: முடிந்தவரை கடன் இல்லாமல் இருப்பதுதான் தனிநபர்களுக்கு நல்லது. அதே சமயத்தில், நம்மில் பலரின் வாழ்க்கை லட்சியங்களான வீடு, கார் வாங்குவது அல்லது கல்விக்காகக் கடன் வாங்க வேண்டிய சூழலில் பல நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர். கடன் வாங்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு வாங்கினால், நமது ஆண்டு வருமானத்தைப் போல 5 மடங்குக்கு மிகாமல் வைத்துக்கொள்வது நன்று.

5. ஓய்வுக்காலம்: குழந்தைகளின் கல்விக்காகவோ, திருமணச் செலவுகளுக்காகவோ கடன் வாங்க முடியும்; ஆனால், ஓய்வுக்காலத்துக்காகக் கடன் வாங்க முடியாது. ஆகவே, நமது நிதித் திட்டமிடலில் ஓய்வுக்கால சேமிப்புக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இளம் வயதிலேயே இந்த லட்சியத்துக்காகச் சேமிக்க/ முதலீடு செய்ய நீங்கள் மாதம்தோறும் குறைவான தொகை சேமித்தாலே போதும். ஆனால், பலரும் 45 வயதான பிறகே இதுகுறித்து யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். அது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாக ஆகிவிடுகிறது. எனவே, ஒருவர் தனது 30 வயதுக் குள் ஓய்வுக்கால நிதிக்கான முதலீட்டைத் தொடங்கி விட்டால் பிற்பாடு கவலை இல்லாமல் இருக்கலாம்.

நிம்மதி தரும் நிதிச் சுதந்திரம்...
உங்களுக்கு எத்தனை மார்க்..?

6. சொந்த வீடு: உணவு, உடை, இருப்பிடம் என்பன ஒருவருக்கு அத்தியாவசியமானவை. ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும். இளம் வயதில் ஒருவர் வீடு வாங்க வேண்டாம் என நினைத்தால், அதற்கான இ.எம்.ஐ தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறை யில் முதலீடு செய்துவருவது நல்லது. ஒரு ஊரில் நிரந்தரமாக வசிக்க நீங்கள் எப்போது முடிவெடுக்கிறீர்களோ, அப்போது உங்களுக்கான வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள். ஓய்வுக்காலத்துக்கு உதவும் என்று நினைத்து ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்குவது அவசியம் இல்லை என்கிற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

7. குழந்தைகள் நலன்: நம் மக்கள், தங்களது ஓய்வுக்கால நிதியைச் சேகரிப்பதைக் காட்டி லும், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு முன்னுரிமை தருவது வழக்கம். பள்ளிக்கால செலவுகளை நமது மாதந்தர சம்பாத்தியத்திலேயே சமாளித்துவிடலாம். ஆனால், கல்லூரிச் செலவுகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. ஆகவே, கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கென ஒரு திட்டம் தீட்டி, அதற்கான முதலீட்டைக் குழந்தைகள் பிறந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டால், பிற்காலத் தில் அதுகுறித்த கவலை இல்லாமல் இருக்கலாம். வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் பணிபுரிபவர்கள் அல்லது மொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்திருப் பவர்கள் ஒரே சமயத்தில்கூட இதற்காக முதலீடு செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

8. குறைவான வரி: நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடும் எந்த அளவு குறைவான வரியில் அல்லது வரியே இல்லாமல் உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். நமது மத்திய அரசாங்கம் சில முதலீடுகளை ஊக்குவிக்கிறது. அதனால் வருமான வரியைக் குறைவாகவோ, இல்லாமலோ வைத்துள்ளது. கடன் சார்ந்த முதலீடுகளில் உதாரணமாக, பிராவிடன்ட் ஃபண்ட், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், செல்வ மகள் திட்டம், போன்ற முதலீடுகள் உள்ளன. அதேபோல, கடன் சார்ந்த மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் குறைவான வரியில் உள்ளன. மேலும், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நபருக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரைக்குமான லாபத்துக்கு வரி ஏதும் கிடையாது. அதற்குமேல், உங்களின் வரி வரம்பு எவ்வளவாக இருந்தாலும், வரி வெறும் 10% தான்! மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் போன்றவற்றில் விற்றால் தான் வரி கட்ட வேண்டும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட் போல, ஆண்டுதோறும் வரி கட்ட வேண்டாம். முதலீடு செய்தால் மட்டும் போதாது. அது எந்தளவு குறைவான பணத்தை வரியாக நம்மிடமிருந்து பெறுகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்!

9. லைஃப் ஸ்டைல்: நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட, அதில் நாம் எவ்வளவு சேமிக்கிறோம் என்பது முக்கியம். அதற்கு நமது லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டும். கார் 5 லட்சத்துக்கும் வாங்கலாம்; 50 லட்சத்துக்கும் வாங்கலாம். அதேபோல, வீடும் எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் வாங்கலாம்! எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் இன்று கணிசமான பணத்தை மக்கள் செலவழிப்பது வீண்தான். இதுபோல பற்பல செலவுகளை சிக்கனமாகச் செய்து, சேமிப்பை அதிகமாக்க வேண்டும்.

10. இலக்குகள்: இலக்குகள் இல்லா வாழ்க்கை, சேருமிடம் இல்லாத பிரயாணம் போல! நிதிச் சுதந்திரம் அடைய நிதி இலக்குகள் பற்றி விழிப்புணர்வும் புரிந்துகொள்ளலும் மிக அவசியம். வீடு வாங்குவது, ஓய்வுக்கால நிதி, குழந்தைகள் நலனுக்கான முதலீடு, கார் வாங்குவது, வெளிநாடு டூர் செல்வது எனச் சிலருக்கு சில இலக்குகள் இருக்கலாம். இன்னும் சிலருக்கு தொழில் தொடங்குவது, அறக்கட்டளை ஆரம்பித்து ஊருக்கு நல்லது செய்வது என்றிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் இன்றியமையாத தேவை பணம். அவற்றுக்கான திட்டங்களை இன்றே தீட்டி, உங்களின் வாழ்க்கையில் நிதிச் சுதந்திரத்தை விரைவில் அடையுங்கள்!

75-வது சுதந்திர தினத்தை அடுத்த ஆண்டு நாம் கொண்டாடும் வேளையில், நமது நிதிச் சுதந்திரத்துக்கான முயற்சியை நாம் தொடங்கி இருப்போமாக!