பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மூத்த குடிமக்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மூத்த குடிமக்கள் விஷயத்தில் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு உள்ளபடியே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்யும்போது அளிக்கப்பட்டுவந்த சலுகைக் கட்டண வசதியை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் திட்டம் தற்போதைக்கு இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்யும்போது ஆண்களுக்கு 40%, பெண்களுக்கு 50% சலுகைக் கட்டணம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டுவந்த இந்த வசதி, கொரோனா காலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டபோது காணாமல் போனது. கொரோனா காலம் முடிந்தபின் இந்த வசதி அளிக்கப்படும் என மூத்த குடிமக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் ஆசையை நிராசையாக்கி, இனி மூத்த குடிமக்களுக்கு சலுகை இல்லை எனக் கைகழுவியுள்ளது மத்திய அரசு.

‘ரயில்வே துறைக்கு ஏற்படும் செலவு அதிகமாக இருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக’ விளக்கம் தந்திருக்கிறார் மத்திய அமைச்சர். அமைச்சரின் இந்த விளக்கம் சொத்தையான வாதமாக இருக்கிறது. ரயில்வே துறையானது நஷ்டத்தில் இயங்கியது அந்தக் காலம். ரயில்வேயில் கணினியின் பயன்பாடு வந்த பிறகு, அதன் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. டிக்கெட் முன்பதிவின் மூலமும், டிக்கெட்டை ரத்து செய்வதன் மூலமும் அரசுக்கு மிகப் பெரிய வருமானம் கிடைக்கிறது. தவிர, தட்கல் டிக்கெட், தூரந்தோ போன்ற சிறப்பு ரயில்கள் மூலமும் அரசுக்குக் கிடைக்கும் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கு சலுகை அளிப்பதால், ரயில்வே துறைக்கு அதிகம் செலவாகிவிடுமா என்ன?

குளிர்சாதன வகுப்பு, முதல் வகுப்பு எனப் பயணம் செய்ய நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு சலுகை தர வேண்டாம். ஆனால், இரண்டாம் வகுப்பு, இருக்கை வசதி எனப் பயணம் செய்யும் மூத்தகுடிமக்களுக்கு அந்தச் சலுகையை அளிக்கலாமே! இந்த வகுப்புகளில் பெரும்பாலும் பயணம் செய்வது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள்தாம் என்பதை ‘ஏழையின் மகன்’ பிரதமர் நரேந்திர மோடி உணர வேண்டும்!

செலவுகளைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு நினைப்பதில் தவறும் இல்லை. ஆனால், ஏதேதோ திட்டங்களில் எத்தனையோ ஆயிரம் கோடிகள் வீணாகச் செலவாவதைத் தடுக்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், ஏழைகள் பயன்படுத்திவந்த சலுகையைப் பறித்தது ஏன்?

ஒரு சமுதாயத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் அக்கறையுடன் கவனிக்கப் பட வேண்டியவர்கள். நம் நாட்டுக்காக உழைத்து, தேய்ந்துபோயிருக்கும் மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசாங்கம் தரும் மரியாதை இவ்வளவுதானா?

மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியம்!

- ஆசிரியர்