Published:Updated:

காளையைப் பந்தாடும் கரடி: கடந்த மூன்று நாள்களில் ரூ.15,72,000 கோடியை இழந்த பங்கு முதலீட்டாளர்கள்

கவலையில் முதலீட்டாளர்கள்
கவலையில் முதலீட்டாளர்கள்

உலக அளவில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

மூன்றாவது நாளாக இந்தியப் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இன்றும் (19.03.2020) வர்த்தகம் முடியும் போது, சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்து, 28288.23 என்கிற நிலையிலும், நிஃப்டி 205 புள்ளிகள் சரிந்து, 8263.45 என்கிற நிலையிலும் வர்த்தகமானது. வரலாறு காணாத தொடர் சரிவினால், கடந்த திங்கள் முதல் புதன்கிழமை வரை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 15,72,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மட்டும் சுமார் 5500 புள்ளிகள் வரை குறைந்துள்ளது.

பிஎஸ்இ
பிஎஸ்இ

இந்தஸ் இந்த் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்கள் 2.39% வரை நஷ்டம் ஏற்பட்டு திண்டாடி நிற்கின்றன. வங்கிப் பங்குகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. டெலிகாம் நிறுவனங்களும் பெரிய அளவில் அடி வாங்கியிருக்கின்றன. ஏற்கெனவே இந்நிறுவனங்களின் சரிவு ஆரம்பித்திருந்தாலும், கொரோனா பாதிப்பினால் மேலும் பங்குகளின் விலை குறைந்திருக்கிறது. ஏஜிஆர் நிலுவைத் தொகையை உச்ச நீதிமன்றம் திருப்பித் தரச் சொல்லிக் கெடுபிடி காட்டியதும் விலை குறைவுக்கு ஒரு காரணமாகும்.

மோதிலால் ஓஸ்வெல் நிறுவனத்தைச் சேர்ந்த சித்தார்தா கென்கா சந்தையின் வீழ்ச்சி குறித்து பேசும் போது, "கொரோனா வைரஸால் மக்களிடம் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், பல மாநிலங்களில் உணவகங்கள், மால் ஜிம், சினிமா தியேட்டர்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருப்பதும் வியாபாரத்தைப் பாதிக்கின்றது. இதனால் பல துறை சார்ந்த பங்குகள் பெரியஅளவில் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இந்த நோய் தொற்று குறையும் வரை, பதற்றம் சரியாகும் வரை மற்ற நாடுகளைப் போல்தான் நம் நாட்டுப் பங்குகளும் குறைந்து இருக்கும்" என்று கூறினார்.

தற்போதைய நிலையில் பங்குச்சந்தையில் 1882 நிறுவனங்கள் பின்னடைந்தும் 963 நிறுவனங்கள் முன்னேறியும் 186 நிறுவனங்கள் அதே நிலையிலும் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு