Published:Updated:

46,000 புள்ளிகளைத் தொட்டு வரலாறு படைத்த சென்செக்ஸ்... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

பங்குச்சந்தை முதலீடு
பங்குச்சந்தை முதலீடு ( vikatan )

நீண்டகால முதலீட்டாளர்களைவிட, குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்ய ஆரம்பித்தவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது...

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரிதும் பாதிகப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசு நடவடிக்கைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் பங்குச் சந்தை மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இன்று (09.12.2020) பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் அமோகமாக ஆரம்பித்திருக்கிறது.

இன்று (புதன்கிழமை) காலை 11.25 மணி அளவில் சென்செக்ஸ் 323 புள்ளிகள் அதிகரித்து, 45,930 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல, நிப்ஃடியும் 93 புள்ளிகள் உயர்ந்து 13,484 புள்ளிகளில் வர்த்தகமானது. 2.03 மணிக்கு சென்செக்ஸ் 46,000 புள்ளிகளைக் கடந்து 46,081 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல நிப்ஃடியும் 13,523 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இது பங்குச் சந்தை வரலாற்றிலேயே புதிய உச்சமாகும்.

பொருளாதார நிபுனர் நாகப்பன்
பொருளாதார நிபுனர் நாகப்பன்

நேற்றும் இதேபோல, (08.12.2020) வர்த்தகம் முடியும்போது சென்செக்ஸ் 347 புள்ளிகள் உயர்ந்து 45,459 புள்ளிகளாக ஏற்றம் கண்டது. அதேபோல, நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து, 13,355 புள்ளிகளாக ஏற்றத்தைக் கண்டது.

கொரோனா நோய்ப் பரவல் ஆரம்பித்தபோது இந்தியப் பங்குச் சந்தைகள் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அப்போது இருந்த அதே பதற்றம் வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தைகள் சந்திக்கும் இந்தத் தருணத்திலும் முதலீட்டாளர்களுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது.

தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் குறித்தும், முதலீடு சார்ந்த விஷயங்களில் அவர்கள் செய்ய வேண்டியது குறித்தும் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம்.

"இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தை எட்டி வருகின்றன. கொரோனா காலத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் மீது நம்பிக்கை குறைவாக இருந்தது. அதனால் பாதுகாப்பான முதலீடு எனக் கருதி தங்கத்தில் அதிக முதலீடுகளைச் செய்தார்கள்.

Share market (Representational Image)
Share market (Representational Image)

தற்போது சரிவிலிருந்து மீளும் இந்திய பொருளாதாரம் மற்றும் அரசின் நடவடிக்கைகளின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதால், பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், இந்தியப் பொருளாதாரம் தன் பழைய நிலைக்குக்கூட இன்னும் திரும்பவில்லை என்பதை முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு, அனைத்தும் சரியாவதற்கு இன்னும் சில காலம் ஆகும்.

பங்குச் சந்தை... நீண்டகாலத்தில் ஏற்றம் தரும்! - வெற்றி ரகசியங்கள்..!

மேலும், சந்தையை பாதிக்கக்கூடிய எதிர்மறைச் செய்திகள் தற்போது எதுவும் இல்லை என்பதும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் உற்சாகமாக ஈடுபடுவதற்குக் காரணமாக இருக்கிறது.

நீண்டகால முதலீட்டாளர்களைவிட, குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்ய ஆரம்பித்தவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ரொக்கக் கையிருப்பு அதிகமுள்ள, டிவிடென்ட் வழங்குகிற, கடன் இல்லாமல் இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தலாம். மற்ற துறை சாந்த பங்குகளின் விலை வீழ்ச்சியில் இருந்தபோதும் ஐ.டி மற்றும் பார்மா துறை சார்ந்த பங்குகளின் விலை ஏற்றத்துடனேயே காணப்பட்டது.

எனவே, எதிர்வரும் காலங்களில் இத்துறை சார்ந்த பங்குகளின் விலையில் அதிக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், இந்தத்துறை சார்ந்த நிறுவனங்களின் தேவை எப்போதும் போலவே இருக்கும் என்பதால், இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நன்றாகவே இருக்கும்" என்றார்.

குறுகிய கால நோக்கில் முதலீடு செய்தவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது!

அடுத்த கட்டுரைக்கு