அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள (60) வயதை அடையும்முன்பே, விருப்பத்தின் பேரில் ஓர் ஊழியர் ஓய்வு பெறலாம். அரசு ஊழியர் ஒருவர் தனது பணியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலோ, 50 வயதைப் பூர்த்தி செய்திருந் தாலோ விருப்ப ஓய்வு பெறலாம். இவ்வாறு விருப்ப ஓய்வு பெறுவோர்க்கு அவர்களது உண்மையான பணிக்காலத்துடன் கூடுதலாக ஒன்று முதல் ஐந்து வருடம் வரையிலான பணிக்காலம் சேர்க்கப்படுகிறது. இந்தக் கூடுதல் பணிக்காலமே ‘சர்வீஸ் வெயிட்டேஜ்’ (Service weightage) என்றழைக்கப் படுகிறது. இந்த ‘சர்வீஸ் வெயிட்டேஜ்’ஜின் அடிப் படையில்தான் உண்மையான பணிக்காலம் + கூடுதல் பணிக் காலத்தை சேர்த்து பென்ஷன், கிராஜுவிட்டி, பென்ஷன் கம்யூட்டேஷன் முதலானவை கணக்கிடப்படும். இதனால் விருப்பு ஓய்வு பெறுபவர்களின் பணப்பலன் அதிகரிக்கும். இந்த ‘சர்வீஸ் வெயிட்டேஜ்’ இப்போது கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

இரண்டு வகை...
தற்போதைய புதிய அட்டவணையில் வெயிட் டேஜ் இரண்டு பிரிவாக உள்ளது. அதாவது 58 என்றிருந்த ஓய்வு வயதை 59 என உயர்த்தி ஆணையிடப் பட்ட தேதி 07.05.2020. எனவே, 07.05.2020 முதல் 24.02.2021 வரை விருப்ப ஓய்வு பெற்றவர் களுக்கான ‘சர்வீஸ் வெயிட் டேஜ்’ ஒரு மாதிரியும் (பார்க்க, அட்டவணை 1), 25.02.2021-க்கு பிறகு விருப்ப ஓய்வு பெற்றோருக்கான ‘வெயிட் டேஜ்’ வேறு மாதிரியும் (பார்க்க அட்டவணை 2) இருக்கும். இந்த இரண்டு அட்டவணைக்கும் குறைந்தபட்ச ‘வெயிட்டேஜ்’ ஓராண்டாகவும், அதிகபட்ச வெயிட்டேஜ் 5 ஆண்டு களாகவும் உள்ளன.

வெயிட்டேஜின் நோக்கம்...
ஓர் ஊழியர் ஓய்வுபெறும் தேதியில் அடிப்படைச் சம்பளம் (தனிச் சம்பளம் + சிறப்புச் சம்பளம்) எவ்வளவு பெறுகிறாரோ, அதில் 50% அவரது பென்ஷனாக இருக்கும். கடைசி சம்பளத்தில் 50% தொகையை பென்ஷ னாகப் பெறவேண்டும் எனில், ஓர் அரசு ஊழியர் 30 வருடப் பணியை நிறைவு செய்திருக்க வேண்டும். அதற்கான சலுகையே ‘வெயிட்டேஜ்’ ஆகும். எனவே, விருப்ப ஓய்வு கோரும் தேதியில் ஒருவர் 30 வருடப் பணியை நிறைவு செய்திருந்தால் (அவரது வயது 50-ஆக இருந்தாலும்) வெயிட்டேஜ் கிடைக்காது.

கவனிக்க வேண்டியவை...
* 58 வயதான ஊழியர் ஒருவர் 15 வருடம் மட்டுமே பணி நிறைவு செய்திருந்தாலும் அவருக்கான ‘வெயிட்டேஜ்’ இரண்டு வருடம் மட்டுமே. காரணம், அவருக்கு மீதமுள்ள பணிக்காலம் இரண்டு வருடம் மட்டுமே. அதே போல, ஒருவருக்கு வயது 45. அவர் 27 வருடப் பணியை நிறைவு செய்துவிட்டார் எனில், அவருக்கான வெயிட்டேஜ் 3 வருடம்தான். ஏனெனில், விருப்ப ஓய்வுக்கான வெயிட்டேஜ் 30 வருடப் பணியை நிறைவு செய்வதற்குத்தான்.
* ‘வெயிட்டேஜ்’ மூலம் பணிக்காலம் மட்டும்தான் அதிகரிக்குமே தவிர, அந்தக் காலத்துக்கு ‘இன்கிரிமென்ட்’ கிடையாது.
* குறைந்தபட்ச ‘வெயிட்டேஜ்’ ஒரு வருடம் என அட்டவணையில் இருந்தாலும், 30 வருடப் பணிக்கு ஒரு மாதம் மட்டுமே தேவை எனில், அந்த ஒரு மாதம் மட்டுமே ‘வெயிட்டேஜ்’-ஆக சேர்க்கப்படும்
* தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட (Amended) ‘வெயிட்டேஜ்’ அட்டவணை மேல்நிலை (Superior service) பணியினருக்கானது. அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட அடிப்படைப் பணியினருக்கு ஓய்வுபெறும் இயல்பான வயது 60 என்பதால், அவர்களுக்கு எந்த மாறுதலும் இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்!